முதல் பகுதி

மனித வரலாற்றின் காலகட்டத்தில் மொழி, கலைகள், அறிவியல் இன்னபிற அறிவுசார் துறைகளின் வளர்ச்சி அதிவிரைவாக இருந்தவை தடைகளின்றி கருத்துப்பரிமாற்றம் நடந்த நாட்கள்தாம். ஒற்றை ஓடையாக அறிவு எப்பொழுதும் ஒழுகியதில்லை. அறிஞர்கள் உலகில் கருத்தரங்கம், குழு விவாதம் என்பவை அறிவுப் பெருக்கத்தை விரைவுபடுத்தும் ஊக்கிகளாகச் செயல்படுவதை மனித வரலாற்றின் நெடுகிலும் காணமுடியும். மறுபுறம் சராசரி மனிதர்களின் திண்ணை கூடிப் பேசல், டீக்கடை அரட்டைகள் என்று உலகியல் நெருக்கடிக்களுக்கு இடையில் கணநேரக் கருத்துப் பரிமாறல் நடப்பதைக் காணமுடியும். தகவல் பரிமாற்றம்தாண்டி கலைகளிலும் இது நெடுகிலும் பரவியிருப்பதைப் பார்க்கமுடியும். கமலையில் நீர் சேந்தும்பொழுது எசப்பாட்டும் எதிர்ப்பாட்டும் நம்மூரின் கலாச்சார வெளிப்பாடுகள். இணையம் அந்த எசப்பாட்டிற்கான வெளியை விரித்திருக்கிறது.

கருத்துப் பரிமாற்றத்திற்கு பலர் ஒரே இடத்தில் ஒரே காலத்தில் ஒன்றுகூடுவது அவசியம். மின்னுலகு அற்புதமாக இந்த கால-தேச இடைவெளிகளைச் சுருக்கிவிடுகிறது. வலைப்பதிவுகள் படைப்பு-துய்ப்பு இரண்டையும் ஒரே புள்ளியில் குறுக்கிவிடுகின்றன. உதாரணத்திற்கு அருள் செல்வனின் இந்தப் பதிவையும் அதன் கீழ் சன்னாசியின் பின்னூட்டத்தையும் பார்க்கலாம். ஒரே தலைப்பின் கீழ் கருத்தை விரித்தும் மறுத்தும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் எழுதும் வாய்ப்பு வலைப்பதிவுகளில் கிடைக்கிறது. இதுபோன்ற ஆர்கானிக் கருத்துப் பரிமாற்றம் பின்னூட்டப்பெட்டிகள் மூடப்பட்ட நிலையில் சாத்தியமில்லை. ஏன்? முதலாவதாக தான் எழுதியது உடனடியாக சேரவேண்டிய இடத்தைச் சேரப்போகிறது (அது சேர்ந்த விபரமும் தனக்குத் தெரியக் கிடைக்கும்) என்ற தீர்மானம் இருக்கும் நிலையில் சொல்லவந்த கருத்தைத் தயங்காமல் சொல்லும் ஆர்வம் கிடைக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் இணையத்தில் வளரும் இன்றைய தலைமுறை ஓய்வற்ற அலைச்சல் கொண்டது; பொறுமையற்றது. இன்னொருவர் பதிவில் கருத்தெழுதி அதற்கு அடுத்த பத்து நிமிடத்தில் பதில் கிடைக்கும் என்று தெரியும்பொழுது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பதில் வரப்போவதில்லை என்ற ஐயமிருக்கும் சேர்ப்பிடத்தை நோக்கி எழுதப்போவதில்லை.

ஆர்வமுள்ள வாசகன் எப்பாடுபட்டேனும் ஆசிரியனுடன் உரையாடுவான் என்று சொல்லக்கூடும். இதற்கு ஒரே பதில் யாரும் தவிர்க்க முடியாதவர் அல்லர். இன்றைய தலைமுறைக்குத் தகவல் தொடச்சியாக வந்து கொண்டிருக்கிறது (இந்த இடத்தில் தகவல் என்று நான் பொதுமைப்படுத்துவதில் புனைவிலக்கியம், ஓவியம், இசை, சலனப்படம் என்று பலவும் அடக்கம்). அவர்கள் கவனம் ஒரு இடத்தில் நிலைப்படுவது குறைவு. இன்னும் சொல்லப்போனால் நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடன் ஊடாட விழையாத யாரையும் அவர்கள் விரும்புவதில்லை. (மின்னஞ்சல் தொடர்புள்ள/ தொடர்பற்ற தமிழ் எழுத்தாளர்களையே கேட்டுப்பார்க்கலாம்). பின்னூட்டப்பெட்டியைச் சுமந்து திரிவது எழுத்தாளருக்குச் சுமை என்றொரு வாதம் இருக்கிறது. பின்னூட்டப் பெட்டி மாத்திரமல்ல; இடுகைப் பெட்டியும்தான். வாழ்க்கையில் எல்லாமே சுமைகள்தாம்; அவற்றை எதிர்கொள்ளும் திறனைக்/நேர்மையைக் குறித்தது இது. நுட்பத்தின் வீச்சுகள் அனைத்தையும் ஒருவர் உடனடியாகக் கைகொண்டுவிடமுடியாது என்ற வாதமும் பயனற்றது. எட்டு வயது என் மகனுக்கு post, feedback, hyperlink, trackback, aggregator என்ற ஐந்தாறு நடைமுறைகள் மிக எளிதாகப் பிடிபடுகிறது என்ற பொழுது லத்தினமெரிக்கச் சூழலையும் அதன் புலத்தில் எழுதப்படும் மாய எதார்த்தப் புனைவுகளை லத்தினமெரிக்கர்களின் பார்வையிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரெஞ்சு இருத்தலியல் மனநிலையைப் புரிந்துகொண்டு வியாசம் செய்யும் அளவுக்குத் திறனுள்ளவர்களுக்குப் பின்னூட்டத்தையும், பின் தொடர்தலையும் புரியாது என்பது வறட்டு வாதம். நுட்பப் பிரிவினை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

இந்த இடத்தில் எழுத வரும் அச்சுக்காரர்கள் எல்லோரும் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டுதான் வரவேண்டும் என்று நான் சட்டையைப் பிடித்துக் கேட்கவில்லை. கட்டாயமாக அது அவர்களது பிறப்புரிமை என்பதில் ஐயமில்லை. என்னுடைய இந்தத் தொகுப்பின் முழு சாரம்சமும் இதுதான்; இன்றைய நுட்பம் உரையாடலுக்கு இடம் தருகிறது, மிக எளிதாக, மிக பரந்துபட்டதாக. அந்த நுட்பத்துடன் விளையாடுபவர்கள் அதனுடைய சாத்தியங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் (மீண்டும் – தனியொருவர் இல்லை; அந்த ஊடகத்திலிருந்து வருபவர்களின் பெரும்பான்மையானவர்கள்) அவர்களின் உளநோக்கு என்னவாக இருக்கும் என்பதை ஆராய்வது மாத்திரமே. தனிப்பட்ட சிலரைத் தவிர்த்த உரையாடல்களை அவர்கள் தவிர்ப்பதற்கான நோக்கங்கள் எவை?

பெட்டியில் பின்னூட்டம் பெறுவதற்கும் மின்னஞ்சல் பெறுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்: பெட்டியில் வரும் பின்னூட்டம் உங்கள் எழுத்தைப் படிக்கும் அனைத்து வாசகர்களையும் சேருகிறது. அது உங்கள் இடுகையை ஒட்டியிருக்கும் நிலையில் வாசகர் கூடுதல் தகவல் பெறுகிறார், வெட்டியிருக்கும் பொழுது உங்கள் இடுகையின் குறைகள் சுட்டப்படுகின்றன. மூன்றாம் வாசகருக்குத் தலைப்பின் மீதான முழுப்பார்வை சாத்தியமாகிறது. தனியஞ்சல் விழைவதன் மூலம் வாசகனுக்கு உங்கள் பார்வையை மட்டுமே காட்டி அதன் எதிர் சாத்தியங்களை மறைக்கிறீர்கள். ஒரு வகையில் இது நேர்மையற்ற கருத்துத் தணிக்கை. ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் – பெரும் விவாத அரங்கில் (சட்டமன்றத்தில்) முதல்வர் பேசி முடித்தவுடன் இன்னொரு உறுப்பினர் பேசுவதற்கும் அமர்ந்த முதல்வரின் காதுகளில் அருகிலிருப்பவர் கிசுகிசுப்பதற்கும் உள்ள வித்தியாசம். அறிஞர்கள் இருக்கும் சபையில் இதற்குப் புருவங்கள் உயர்த்தப்படும். மன்னர்களுக்கு மாத்திரமே சதியாலோசனை தேவை; மக்களாட்சியில் பொதுவிவாதம்தான் நடைமுறை. இணையம் என்பது மக்களாட்சி

தீவிர விமர்சனத்தை வைக்க வேண்டும் என்பவர் தனியாக ஒரு வலைப்பதிவில் எழுதிக் கொள்ளட்டுமே என்ற வாதமும் நியாயமானதே. ஒருவகையில் ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகள், வேண்டுமென்றால் நகராட்சி பள்ளிக்குப் போகட்டுமே என்று சொல்வதைப் போன்றதுதான் இதுவும். எல்லாமே சாத்தியம்தான்; ஆனால் எது சிறந்த வழி என்பதைப் பற்றிய உரையாடல்தான் இது. வலைப்பதிவு உலகில் வெட்டியும் ஒட்டியும் தனிப்பதிவு எழுதுவது ஒன்றும் புதிதல்ல; நுட்பத்தின் ஒரு கூறுதான் இதுவும், இதன் பெயர் பின் தொடர்தல் (Trackback). ஆனால் இப்படி எழுதப்படுபவை பெரும்பாலும் பின்னூட்டப் பெட்டியில் (அல்லது நேரடி நுட்ப வசதியில் பின் தொடர்தல் பெட்டியில்) சுட்டப்படுகின்றன. நீளமான பின்னூட்டங்கள் அலுப்பைத் தரக்கூடியவை என்பதால் அவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்து எழுதுவது முறை. கடந்த சில நாட்களில் நடந்த வலையாடல்களை பெரும அளவில் பார்க்க இப்படியொரு வடிவம் கிடைக்கிறது;

இங்கே தொடர்புள்ள வாதங்களையும் எதிர்வினைகளையும் எவ்வளவு எளிதில் கண்டடைய முடிகிறது. தனியாக வலைப்பதிவில் என்னைப் பற்றிய விமர்சனம் வருகிறதே என்று சொல்லும் வாதத்தின் வலுவின்மை பிடிபடுகிறதா? உங்களை ஒட்டி எழுதுபவரின் பதிவிலிருந்து உங்களை அடைய முடியும், மாறாக உங்கள் பதிவிலிருந்து எந்த மறுகருத்தையும் சென்றடைய முடியாது. நுட்பம் எளிதில் தரும் வசதிகளை வாசகனுக்கு மறைப்பது ஒருவகையில் நேர்மையற்றது என்பது இதனால்தான்.

* * *

வலைபபதிவுகள் ஆழமற்றவை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது. நுட்பம் தரும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு இந்த வாதத்தின் அர்த்தமின்மை எளிதில் பிடிபடும். உரையாடலைத் துவக்கல், தொடர்புள்ள அனைத்துத் தகவல்களுக்கும் சுட்டிகளைத் தருதல், எழுதப்பட்டதற்குப் பின்னும் வருவனவற்றைப் பின் தொடர்தல் மூலம் தானாக இணைத்தல், பின்னூட்டத்தின் வழியே வாசகருடன் உரையாடல் என்று பல வழிகளில் வலைப்பதிவுகள் தனியொரு எழுத்தாளர் தரும் ஆழத்தைவிடப் பலமடங்கு வலிமையானவை. கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் நம் ஒருவனால்தான் வாசகனுக்குக் கரைத்துப் புகட்டமுடியும் என்ற அகந்தை/அறியாமைதான் ஆழமற்றவை என்ற குற்றச்சாட்டுக்கு அடிகோலுகின்றன. ஒரு காலத்தில் அதற்கான அவசியம் இருந்தென்னமோ உண்மைதான்; இன்றைக்கும் அதே மனோபாவத்தில் இருப்பது காலத்தில் உறைந்துபோனதைத்தான் காட்டமுடியும்.

* * *

ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் எழுதும் சிறுகதைகள், புதினங்கள் பற்றிய ஒப்பீடு இங்கே அர்த்தமற்றது எனப் புரியும் (ஜமாலனை முன்வைத்து). இது அவர்களின் புனைவுகள்- வலைப்பதிவு குறித்த ஒப்பீடு அல்ல. நான் இவர்கள் ஒவ்வொருவருடைய புத்தகங்களையும் தவறாது வாசிக்கிறேன்; இயன்றபொழுது வியந்து எழுதுகிறேன். இது அவரகள் வலைப்பதிவு எழுத வரும்பொழுது இந்த வடிவத்தையும், ஊடகத்தையும் எப்படித் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றியதுதான். நாவல் இலக்கணம், சிறுகதை எழுதுவது எப்படி என்றெல்லாம் அவர்களிடமிருந்து நாம் அறிந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். அந்த அளவில் மின்னூடகத்தின் சாத்தியங்கள் என்ன என்று புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இதை எழுதுவதால் நான் இங்கே கரைகண்டு பாடம் எடுக்கிறேன் என்று பொருளல்ல, இந்த ஊடகத்தின் வசதியே இதுதான், படைத்தல்-தூய்த்தல் இடையான இடைக்கோடு அழிந்துபோகக் கற்றுக்கொள்ளும் நிலையிலேயே கற்றுக் கொடுக்க முடியும். ஆய்வுத் துறையில் இருப்பவன் என்பதால் இதன் செயல்முறையை நான் அறிவேன். முதல் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் கையைப் பிடித்து எழுதச் சொல்லித் தரவேண்டும். ஆராய்ச்சி ஆசிரியருக்கு மாணவியுடன் உரையாடல்தான் சாத்தியமாகும்.)

வலைப்பதிவுக்கு என்று தனி இலக்கணம் இருக்கிறது. மின்னூடகத்திற்கென தனி விதிகள் உண்டு, மசியால் எழுதுவதும் அதே முறையை இங்கே பெயர்த்துக் கொண்டு வருவது முறையல்ல என்பதை அறிவது நல்லது. பழைய உதாரணங்களைக் கொண்டு சொல்ல வேண்டுமென்றால் இது மேடைக் கச்சேரியல்ல; எசப்பாட்டு. இணையம் தரும் வசதிகளால் உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒலிக்கும் பிரம்மாண்டமான எசப்பாட்டு. இதற்கான எதிர்குரல்கள் எல்லா முடுக்குகளிலிருந்தும் எழும்பும். அதற்குத் தயாரான மனநிலை அவசியம். எனக்குப் பிடித்தமான பக்கவாத்தியங்களுடன் மேடைக் கச்சேரி செய்யத்தான் எனக்குத் தெரியும், அதைத்தான் நான் செய்வேன் என்று சொல்வது தனிப்பட்ட தெரிவு. ஆனால், களை பறிப்பவனுக்கு வேறு வேலையிருக்கிறது, அவனால் இங்கே மூன்று மணிநேர தோடி ஆலாபனையைக் கேட்கமுடியாது, கால் கடுத்துப் போனால் அவன் விரைவில் நகர்ந்துவிடுவான்.

* * *

அச்சு ஊடகமும் மின்னூடகமும் வெவேறானவையா? மின்னூடகத்தில் ஆழமான புனைவிலிகள், புதினங்கள் சாத்தியமற்றவையா? இதைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். அங்கே வருங்காலத்தைப் பற்றிய சோதிடம் எல்லாம் எழுத வேண்டும் என்பதால் என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள கொஞ்சம் வேற்று மனநிலைக்கு மாற வேண்டும்.