SMH_poll_cricket.jpg இதைவிட யாரும் நேரடியாகச் சொல்ல முடியாது. இந்த வார்த்தைகள் பீட்டர் ரோபக்கிடமிருந்து ஸிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. ரோபக் தன் கருத்துரையை இப்படித் துவங்குகிறார்.

RICKY PONTING must be sacked as captain of the Australian cricket team. If Cricket Australia cares a fig for the tattered reputation of our national team in our national sport, it will not for a moment longer tolerate the sort of arrogant and abrasive conduct seen from the captain and his senior players over the past few days. Beyond comparison it was the ugliest performance put up by an Australian side for 20 years. The only surprising part of it is that the Indians have not packed their bags and gone home. There is no justice for them in this country, nor any manners.

ஆஸ்திரேலிய வாசகர்கள்கூட பீட்டர் ரோபக்-கின் கருத்தை முழுமையாக ஆதரித்திருக்கிறார்கள். (கருத்துக்கணிப்பைப் பார்க்க).

யாராவது ஒருவர் ஆஸ்திரேலியப் பூனைக்கு மணி கட்ட வேண்டும். அவர்களது பொய்யை அவர்கள் முகத்தில் அறைய வேண்டும். இப்பொழுதுகூட இந்தியா இதைச் செய்யாமல் போனால் அதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் – வர்த்தக நிர்ப்பந்தம். இதற்குப் பதில் கிரிக்கெட் நிர்வாகத்தை பெப்ஸி, நைக்கி, அடிடாஸ், கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டு வெளியே வந்துவிடலாம்.

* * *
ஹர்பஜன் செய்தது சரியா தவறா என்ற கேள்வி அடுத்ததாகத்தான் வருகிறது. பலருடைய கருத்துக்களையும் படித்தபிறகு என் மனதில் தோன்றியது – ஹர்பஜன் குரங்கு என்று சொல்லியிருக்கக்கூடும். இதற்கு பெரும் ஆதாரமாக நான் காண்பது அருகில் இருந்த சச்சின் நேரடியாக வெளியே வந்து ஹர்பஜன் அப்படிச் சொல்லவில்லை என்று மறுக்கவில்லை. ஹர்பஜன் சச்சினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் (முதல் இன்னிங்க்ஸ் முடிவில் சச்சினின் நேர்முகத்தைப் படிக்கவும்). அப்படிச் சொல்லியிருந்தால் ஹர்பஜன் செய்த மாபெரும் தவறு ‘குரங்கு’ என்ற வார்த்தைதான். இதற்குப் பதிலாக நாய், பன்றி, நரி என்று சொல்லியிருந்தால் (லும் கூட) ஆஸ்திரேலியாவிற்கு வாதிட ஒரு நல்லவிஷயம் கூடக் கிடையாது. ஆட்டம் முழுவதிலும் அவர்கள் அராஜகம் செய்திருக்கிறார்கள், நடுவர்கள் துணையுடன். ஆனால் குரங்கு என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றன.

ஆனாலும் உடனடி மூன்று ஆட்டத் தடை, நிறவெறியாளர் எல்லாம் பம்மாத்துகள்தான். பலமுறை இதுபோன்ற விவகாரங்களில் சூட்டைத் தணிப்பதற்காக முடிவு ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. ஆனால் ஹர்பஜன் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த அவசரம்? ஏனிந்த நிறவெறி பட்டம்?

* * *
இதற்கு முன்னால் அதிகமாக அப்பீல் செய்ததற்காக வீரேந்திர ஷேவாக்கிற்கு ஒரு ஆட்டத் தடை விதிக்கப்பட்டது. சிட்னி ஆட்டத்தில் தொடர்ச்சியாக அதிக முறையீடுகள் செய்தற்காகவும், பிடிக்காத கேட்சிற்குத் தொடர்ந்தும் அப்பீல் செய்ததற்கு, முதல் இன்னிங்க்ஸில் பந்து மட்டையில் பட்டது என்று தெரிந்தும் (இதை ஸைமண்ட்ஸ் பேட்டியில் பெருமையாகச் சொல்லியிருக்கிறார்) வெளியேறாமல் ஏமாற்றியதற்கும் பாண்டிங், ஸைமண்ட்ஸ், கில்கிறைஸ், கிளார்க் அணைவருக்கும் கூடவே ஒரு ஆட்டத் தடை விதிக்கக் கோர வேண்டும்.

* * *
ஸ்டீவ் பக்னர்?? ஒரு காலத்தில் இவர் மீது எனக்கு நிறைய மதிப்பு இருந்தது. இப்பொழுது கட்டாயம் கிடையாது. எப்பொழுது நேரடியாக ராகுல் திராவிடை கிண்டல் செய்ய பந்தை முகர்ந்து பார்த்தாரோ அப்பொழுதே இவர் நடுவுநிலைமை(யின்மை) – இந்தியாவிற்கு எதிராக – வெளிச்சமாகிவிட்டது.

இந்த ஆட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்தியாவிற்கு எதிராகத் தவறான தீர்ப்பளிப்பதில் காட்டிய விரைவும், ஆஸ்திரேலியாவிற்கென மூன்றாவது நடுவரைக் கூட துணைக்கழைக்காமல் விரைவாகச் செயல்பட்டதும் வெள்ளிடை. இவரை நடுவில் நிறுத்திக் கொண்டு அடுத்த ஆட்டத்தை இந்தியா விளையாட முயன்றால் அதைவிட அபத்தம் கிடையாது.

* * *
பொதுவில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பொறுத்தவரை நான் அதிகம் எழுதுவதில்லை, வெறும் நடப்புகளை அவதானிப்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இந்த நேரத்திலாவது ஆஸ்திரேலியாவைப் பற்றி எழுத வேண்டும்.

இப்பொழுது ஆட்டம் முழுவதும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் :

  1. ஹர்பஜன் உடனடி தடையை நீக்கக் கோரவேண்டும்; ஹர்பஜன் அப்படிச் சொல்லியிருந்தாலும் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட தடைதான் கொடுப்பது நியாயம் (முன்னுதாரணங்களின்படி)
  2. பொதுவில் ஒன்றுக்கு மேற்பட்ட இழி நடவடிக்கைகளுக்காக பாண்டிங்கைத் அடுத்த ஆட்டத்தில் தடை செய்யச் சொல்ல வேண்டும்
  3. விரேந்திர ஷேவாக் முன்னுதாரணத்தை வைத்து பாண்டிங், ஸைமண்ட்ஸ், கில்கிறைஸ்ட், கிளார்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோர வேண்டும்.
  4. ஸ்டீவ் பக்னரை அடுத்த டெஸ்ட்டில் நடுவராக இருக்க ஒத்துக் கொள்ளக்கூடாது.
  5. குறைந்தபட்சம் தொடரின் இனிவரும் போட்டிகளை அதிகார பூர்வமற்றவையாக மாற்ற வேண்டும். (சென்சூரியன் பார்க் உதாரணம்)

* * *

இந்த ஆட்டத்தில் இந்தியா பெருமையாகச் சொல்லிக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன, முதல் நாள் ஆஸ்திரேலியாவைத் திணற அடித்தது (ஸைமஸ்ட்ஸ்க்கு இரண்டாம் ‘கிச்சான்’ கிடைக்கும் வரை). இன்னொரு முறை கிரிக்கெட்டில் இந்த்தனை ஆரவரங்களுக்கு இடையிலும் அழகு மிஞ்சியிருப்பதை நிரூபித்தி லெக்ஷ்மண், அற்புதமான சச்சினின் அளவுபடுத்தப்பட்ட ஆட்டம், இரண்டாம் இன்னிங்க்ஸில் கங்கூலி ஆடிய விதம், அணில் கும்ளேயின் போராட்டகுணத்தைக் காட்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் என்று எத்தனையோ.

ஆனால் உண்மையாகவே தலைநிமிர்ந்து நிற்க வைத்தது பொங்கும் கோபத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு ஹர்ஷா போக்ளேக்கும் மார்க் டைலருக்கும் அவர் கொடுத்த ஆட்ட இறுதி நேர்முகம்.

காலம் கடந்து அனில் கும்ளே தலைவராகியிருப்பது இந்தியாவின் துரதிருஷ்டம்.