அறிவியலின் துறைகளுக்குள்ளே மனிதன் பெரிதும் விந்தையாய் காண்பது மூளையின் செயற்பாட்டை. நவீன அறிவியலின் புரிதல்கள் போதுமான அளவில் இல்லை என்று ஏக்கமும் வருத்தமும் கொள்ளவைப்பது மனித மூளையைப் பற்றிய புரிதல்களை. மறுபுறத்தின் அறிவியல் பயிற்சியும், அறிவியல் நோக்கும் இல்லாதவர்கள் மனித மூளையின் செயற்பாட்டை முழுவதுமாக அறிவியலின் எல்லைக்குள்ளே நின்று புரிந்துகொள்ள இயலாது என்று கூச்சலிடுகிறார்கள். காதலையும், காமத்தையும், கருணையையும், வீரத்தையும் ஹார்மோன்களின் கணக்கீட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பது இவர்கள் தரப்ப்பு வாதம். ஆனால் நவீன அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாக இதனை வெற்றி கொண்டு வருகிறது. இதற்கு அறிவியலுக்குப் பெரிதும் துணை நிற்பது குறைபாடுள்ள மூளையின் அமைப்பும் செயற்பாடும். ஸ்கீட்ஸோஃபெர்னியா, பார்க்கின்ஸன், மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற செயலிழப்புகளைக் கொண்டவர்களை நவீன அறிவியல் கருவிகளான செயல்முறை காந்த ஒத்திசை படக்கருவி (Functional Magnetic Resonance Imaging F-NMR) போன்றவற்றின் உதவியுடன் ஆராய்வது மூளையின் அமைப்பு-செயற்பாடு குறித்த புரிதல்களை உருவாக்கி வருகிறது.

இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிகம் வாய்க்காத ஒரு அனுபவம் டாக்டர் ஜில் டெய்லருக்கு (Dr. Jill Taylor) டிசம்பர் 10, 1996 அன்று கிடைத்தது. அவர் மூளையின் இடதுபுறத்தில் இரத்தநாளம் ஒன்று வெடித்து சிறிய இரத்தக்கட்டி (Hemorrhage) உருவானது. தன்னிலை இழக்கத் தொடங்கிய ஜில் டெய்லர் அசைவு, பேச்சு, ஞாபகம், சுயநினைவு என்று ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்கினார். அதிருஷ்டவசமாக, உடனடி மருத்துவ உதவி கிடைத்தது. அடுத்த சில நாட்களில் மூளையில் அறுவைசிகிச்சை மூலம் ஒரு சிறிய பந்தின் அளவிற்குப் பெருத்திருந்த இரத்தக் கட்டி நீக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து முழுக்குணமடைய எட்டு ஆண்டுகளானது.

தன் மூளையின் ஒரு பாகம் செயலிழந்ததையும் அதைத் தொடர்ந்து தன் நினைவுகள், உடற் செயற்பாடுகள் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் குறித்த அனுபவங்களை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொள்கிறார் டாக்டர் ஜில் டெய்லர்.