nexium.jpg இதன் முதல் பகுதி
நாம் சாப்பிடும் சாப்பாட்டைச் செரிப்பதற்கு வயிற்றில் சுரக்கும் அமிலம் மிகவும் முக்கியமானது. (இது எப்படி வேலை செய்கிறது என்று விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசையிருந்தால் சொல்லுங்கள், இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம்). அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பதால் மூன்றில் ஒருவர் அவதிப்படுகிறார் என்று மருத்துவப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா காலத்திலும் எல்லா நாடுகளிலும் இது ஒரு முக்கியமான, தீராத வியாதியாகத்தான் இருப்பதாகத் தெரிகிறது. நம்மூரில் வவுத்தெரிச்சல், வவுத்துல புளியக் கரைக்குது என்றெல்லாம் மிகச் சாதாரணமாகப் பேச்சுவழக்கில் சொல்கிறோம். இந்த அமிலச் சுரப்பைக் கட்டுபடுத்த, தாங்கிக் கொள்ள பல வழிகள் இருக்கின்றன. மிகச் சுலபமான வழி, சுரக்கும் அமிலத்தின் காரத்தன்மையைக் கட்டுப்படுத்துவது. ஜெல்லுஸில், டைஜின், டம்ஸ், மேலாக்ஸ் என்று இதற்குப் பல மருந்துகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு மாத்திரையை உரித்துப் போட்டுச் சப்பினால் நெஞ்சு எரிச்சல் கொஞ்சம் குறையும். இதற்கு அடுத்தபடியாக H2 எதிர்ப்பான்கள் (H2 Antagonists) என்று சொல்லக்கூடிய மருந்து வகை உண்டு. க்ளாக்ஸோ ஸ்மித்க்ளெய்ன் நிறுவனம் 1981-ல் அறிமுகப்படுத்திய இந்த வகை ஹிஸ்டமைன் என்ற அமினோ அமிலத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது. ரானிட்டிடைன் என்ற மருந்துப்பொருள் Zantac உள்ளிட பல பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஆனால் என்னைப் போன்ற தீவிர வவுத்தெரிச்சல்காரர்களுக்கு இதெல்லாம் சரியாக வராது. ப்ரோட்டான் ஊற்று நிறுத்திகள் (Proton Pump Inhibitors) என்றவகை மருந்துகள் எல்லாவற்றையும்விட அமிலத்தால் உண்டாகும் எரிச்சலுக்குச் சிறந்த மருந்துகளாகச் செயல்படுகின்றன. இந்த வகை மருந்துகள் அமிலச் சுரப்பியை அதன் ஊற்றுச் செல்களிலேயே நிறுத்துகின்றன. அமிலம் நீண்ட காலத்திற்கு அளவிற்கு அதிகமாகச் சுரப்பதால் குடலின் உள்பகுதி புண்ணாகிறது. பிபிஐ வகை மருந்துகள் நீண்டகால அமிலப் பெருக்கால் வரும் புண்களையும் குணப்படுத்துகின்றன. ப்ரைலோஸெக், நெக்ஸியம், அஸிபெக்ஸ், பாண்டொலாக், ப்ரெவஸிட், உள்ளிட்ட பல மருந்துகள் இந்த வகையைச் சேர்ந்தவை.

ஆஸ்ட்ரா ஸெனிக்கா உலகின் மூன்று பெரும் மருத்துவ நிறுவனங்களில் ஒன்று. 1995 தொடக்கம் ஐந்து ஆண்டுகளில் ஆஸ்ட்ராவின் ப்ரைலோஸெக் (பிபிபி வகை அமிலக் கட்டுப்படுத்தி) 26 பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது. மருந்தைக் கண்டுபிடிக்கும் நிறுவனங்களுக்கு அதைக் கொண்டு பணம் சம்பாதிக்கக் காப்புரிமைகள் உதவுகின்றன. குறிப்பிட்ட வருடங்களுக்கு அந்த நிறுவனத்தைத் தவிர வேறு யாரும் அதைத் தயாரிக்கவோ சந்தைப்படுத்தவோ முடியாது. பொன்முட்டை இடும் வாத்தான ப்ரைலோஸெக்கின் காப்புரிமை 2001 ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வரவிருந்தது. ப்ரைலோஸெக்கின் வருவாயை இழந்தால் ஆஸ்ட்ராஸெனிக்காவின் பங்குகள் சந்தையில் மோசமாக வீழ்ச்சியடையும். விரைவில் அது வேறு ஒரு பெரிய நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டு இணைத்துக்கொள்ளப்ப்டும் என்றெல்லாம் ஆரூடங்கள் வரத் தொடங்கின. இந்த நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரைவில் ஏதாவது செய்தாக வேண்டும் என்றபொழுது ஆஸ்ட்ரா உடனடியாக ஒரு பெரிய குழுவை நியமித்தது. அதில் விஞ்ஞானிகள், மருந்தாளுநர்கள், மருத்துவர்கள் எல்லோரும் உண்டு. இவர்களுக்குச் சம அளவில் சந்தை விற்பன்னர்கள், சட்ட நிபுணர்கள், வர்த்தக மேலாளர்கள் என்று ஒரு கூட்டமும் உண்டு. ஒருபுறத்தில் அறிவியல் குழு புதிய மருந்துகளுக்கான தேடலை நடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் இந்த வர்த்தகச் சுறாக்கள் சந்தையின் போக்கு, சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள், அரசியலில் ஆதாயம் போன்ற திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இது ஒன்றும் புதிதில்லை. பெரும்பாலான பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களில் இப்படித்தான் நடக்கும். ஆனால் ஆஸ்ட்ராஸெனிக்கா கொஞ்சம் புத்திசாலிததனமாகச் செய்தது. அறிவியல் ஆய்வுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கறிஞர்களும், சந்தை விற்பன்னர்களும் கூடவே இருந்தார்கள். எனவே மிக நல்ல மருந்து மட்டுமே அறிவியலின் இலக்காக இல்லை; அதன் சந்தை சாத்தியமும் கூடவே பிணைக்கப்பட்டிருந்தது.

இந்த இடத்தில்த்தான் லூயி பாஸ்ட்யூரின் ஆவி அவர்களுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும். ப்ரைலோஸெக் என்று சந்தைப்படுத்தப்படும் மாத்திரையின் மருந்துப் பெயர் ஒமெப்ரஸோல் (Omeprazole). இது ரேசமிக் அமிலத்தைப் போல ஒளி வினை இல்லாதது (முனைவாக்கம் கொண்ட ஒளி இதனால் எந்தச் சுழற்சியையும் அடைவதில்லை). இதே வேதிப்பொருளை ஒளிவினை கொண்ட வடிவத்திலும் தயாரிக்கமுடியும் என்று ஆஸ்ட்ராவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். அது ஒன்றே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஒருபுறத்தில் மருத்துவர்களும், வேதியியலாளர்களும் அதன் பண்புகளையும், அதன் மருத்துவ பலாபலன்களையும் ஆராய்ந்து எங்கேயாவது கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினார்கள். மறுபுறம் வர்த்தக, சட்ட முதலை இதற்கு எப்படிக் காப்புரிமை பெறுவது, அதை எப்படி தீவிரமாகச் சந்தைப்படுத்துவது என்று மண்டையைக் குடைந்துகொண்டிருந்தார்கள்.

ஆஸ்ட்ராவின் நல்லகாலம், ஒளிவினை கொண்ட ஈஸோமெப்ரஸோல் (Esomeprazole) பழைய சரக்கைவிட கொஞ்சம் சக்தி கூடுதலாக இருந்தது என்று தெரியவந்தது (இது உண்மையில்லை என்று இப்பொழுது சந்தேகிக்கப்படுகிறது). விரைவில் தயாரிப்பு மேம்பாடு, காப்புரிமைப் பாதுகாப்பு, என்று எல்லா சுபகாரியாங்களும் நடந்தன. கூடவே, ஆஸ்ட்ரா தன்னுடைய சந்தைத் திறமையையும் காட்டியது. பல பில்லியன் டாலர்கள் சந்தைப்படுத்தலுக்காக மட்டுமே செலவிடப்பட்டன. எல்லா பத்திரிக்களிலும் ஈஸோமெபரஸோலின் கல்யாண குணங்கள் பறைசாற்றப்பட்டன. வயிற்று மருத்துவர்களைக் கூட்டி கோலாகலமான விருந்துகளுடன் நெக்ஸியம் (Nexium) என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஈஸோமெப்ரஸோல் அறிமுகப்படுத்தப்பட்டது. அமில வியாதிக்கு முடிவு வந்துவிட்டது என்று ஆஸ்ட்ரா முழங்கத்தொடங்கியது. மலிவான விலையில் கிடைப்பவை எல்லாம் நல்ல மருந்துகள் அல்லன என்ற பெருவழக்கம் இன்னொருமுறை உறுதி செய்யப்பட்டது. செரிப்பு அமில வியாதி இருப்பவர்கள் தினமும் இதற்கான மருந்தைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் (எடுத்துக் கொள்கிறேன்). பழைய ப்ரிலோஸாக் மருந்துககான மாதாந்திர செலவு (அமெரிக்காவில்) 28 டாலர்கள்தான். புத்தம் புதிய நெக்ஸியத்தின் விலையோ 180 டாலர்கள். (ஐந்து மடங்கு விலை இருந்தால் ஐந்து மடங்கு திறனும் இருக்குமல்லவா?)

[youtube]http://www.youtube.com/watch?v=g0HWjr6eeMo[/youtube]

ஆனால், நெக்ஸியத்திற்கான சோதனைகளின்போது பல அறிவியல் வழிமுறைகள் மீறப்பட்டன. ப்ரைலோஸெக்-குடன் ஒப்பிட நடத்தப்பட்ட சோதனைகளில் அதைவிட அதிகமான அளவு நெக்ஸியம் கொடுக்கப்பட்டது (ஒரு மாத்திரையை இரண்டு மாத்திரையுடன் ஒப்பிடுவதைப் போல). அதிக திறனைக் காட்டவேண்டி நெக்ஸியம் அமிலம் குறைப்புக்கும் மேலான சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படத்து. நீண்ட கால அமிலக் கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கு குடலின் உள் சுவற்றில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகும். நெக்ஸியம் இதையும் குணப்படுத்தவல்லது என்று விளம்பரிக்கப்படுகிறது. சராசரி அமிலக்கோளாறு உள்ளவர்களுக்கு விலை குறைவாகக் கிடைக்கும் பிரிலோஸாக்கைவிட நெக்ஸியம் எந்த அளவிலும் விசேட குணம் கொண்டதில்லை. குடல் சுவர் புண்ணைக் கட்டுப்படுத்த நெக்ஸியம் ஓரளவுக்கு உதவுகிறது).

நெக்ஸியம் இப்பொழுது அமெரிக்காவில் அதிகமாக விற்கும் மருந்துகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. (பணக்கார நாடுகளில் இந்த மருந்துகளிடையே அதிக வித்தியாசம் இல்லை). வருடத்திற்கு $4.4 பில்லியன் வருமானம் ஆஸ்ட்ராஸெனிக்காவுக்கு. இதன் விற்பனையில் முக்கிய பங்கு சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்கள். ஃபைஸர், மெர்க், ஆஸ்ட்ராஸெனிக்கா, ப்ரிஸ்டால் மேயர், க்லாக்ஸோ-ஸ்மித்க்ளெய்ம் போன்ற இராட்சத மருத்துவ நிறுவனங்கள் வருவாயில் சராசரியாக 16% மருத்துவ ஆராய்ச்சியில் செலவிடுவதாகப் பெருமையாகக் சொல்கின்றன (ஆட்டோ, எரிபொருள் துறை போன்றவற்றுடன் ஒப்பிட்டால் இது அதிகம்தான்). ஆனால் சந்தைப்படுத்தலுக்காக இவர்கள் சராசரியாக 30% வருவாயைச் செலவிடுகின்றன. நெக்ஸியத்தின் விற்பனைக்கு அதன் விளம்பரங்கள் முக்கிய காரணம். நெக்ஸியத்தை ஒருவர் மருந்துக்கடையில் சென்று நேரடியாக வாங்கிவிட முடியாது, அதற்கு மருத்துவரின் பரிந்துரை தேவை. அப்படியிருக்க அதற்குத் தொலைக்காட்சியிலும் நாளிதழிலும் விளம்பரிக்க அவசியம் என்ன?

இங்குதான் நிறுவனங்கள் நோயாளிகளின் உளவியலைப் பயன்படுத்திக் கொள்கின்றன. நெக்ஸியம், வயாகர, லிப்பிடார், ஸெலெப்ரெக்ஸ், உள்ளிட்ட பல பரிந்துரை மருந்துகளுக்கு தொடர்ச்சியாகத் தொலைகாட்சியில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளிவருகின்றன. நெக்ஸியம் விளம்பரத்தில் “செய்துமுடிப்பவர்” என்று தன்னை அறிவித்துக் கொள்பவர் நாடுவது நெக்ஸியம். எல்லாவற்றையும் அவர் முடிவுக்குக் கொண்டுவந்தாலும் அவருடைய அமிலப் பிரச்சனையை அவரால் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. அதற்கு நெக்ஸியம் தேவை. இதைப் பார்க்கும் அன்பர் மருத்துவரிடம் சென்று நேரடியாக “எனக்கு நெக்ஸியம் பரிந்துரையுங்கள்” என்று கேட்கிறார். “வேண்டாம், உங்களுக்கு அதைவிட விலை குறைந்தது போதும்” என்று சொன்னால் உடனே “சக்தி குறைந்த மருந்தைத் தந்தால் வேறு மருத்துவரிடம் மாறிவிடுவேன்” என்று நோயாளி பயமுறுத்துவார். எனவே மருத்துவர் பரிந்துரைப்பில்தான் வழங்கப்பட வேண்டும் என்று விதியுள்ள பல மருந்துகள் நோயாளிகளின் பரிந்துரையில் எழுதித் தரப்படுகின்றன. மருத்துவக் காப்பீடுக்குக் கொடுக்கும் பணத்திற்கு அதிக விலையுள்ள் (எனவே அதிக சக்திவாய்ந்த) மருந்தைப் பெற்றுக் கொள்வதால் நோயாளிக்கு சந்தோஷம். நோயாளியைத் தக்கவைத்துக் கொள்வதில் மருத்துவருக்கு இலாபம். ஆமாம், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் இதில் தலையிட்டு நிறுத்துவதில்லை? காப்பீட்டு நிறுவனங்கள் ஒருபோதும் நஷ்டத்தில் இயங்குவதில்லை. மருத்துவச் செலவு அதிகமானால் காப்பீட்டுத் தொகையை உடனே அதிகரித்துவிடுவார்கள். அதிகப் பணம் புரண்டால் இலாபமும் அதிகரிக்கும்தானே! இப்படித் தொடர்ச்சியாக மருத்துவச் செலவுகள் அதிகரித்த்துக் கொண்டே இருக்கின்றன.

ஆஸட்ராஸெனிக்காவின் நெக்ஸியம் மாத்திரமல்ல. இன்னும் பல மருந்துவ நிறுவனங்களும் காப்புரிமை முடிவுக்கு வரும் காலங்களில் தங்கள் மருந்துகளில் சற்றே மாற்றம் செய்து மீண்டும் காப்புரிமை பெற்றுவிடுகின்றன. எலி லில்லி (Eli Lilly) நிறுவனத்தின் ப்ரோஸாக் (Prozac) காப்புரிமை முடிவுக்கு வரும்பொழுது இதே முறையில் ஒளிவினை கொண்ட (S)-Fluoxetine என்ற இரண்டாம் வடிவத்தைத் தயாரித்து காப்புரிமையைத் தக்கவைத்துக் கொண்டது. இன்னும் இருக்கும் மருந்தின்மீது இன்னொரு படலப் பூச்சைச் சேர்த்து (இப்படிச் சேர்ப்பதன்மூலம் அது மெதுவாகக் கரைந்து நீண்ட நேரத்திற்குச் செயல்பட்டுப் பலனளிக்கிறது என்று நிறுவுகிறார்கள்), அல்லது வேறு ஒரு எந்த மருத்துவக் குணமும் இல்லாத இன்னொரு பொருளைச் சேர்த்து – இப்படிப் பல வழிகளில் காப்புரிமைகளைத் தக்கவைத்துக்கொள்கின்றன.

கடந்த இருபது வருடங்களில் அமெரிக்கத் தேர்தலில் மருந்து நிறுவனங்கள் செலவழிக்கும் பணம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1990-ல் $3.2 மில்லியன் செலவிட்ட மருந்து நிறுவனங்கள், கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட $20 மில்லியன்கள் செலவிட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் இதுவரை $10 மில்லியன்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றன. (இப்பொழுது முன்னோட்டத் தேர்தல்கள்தான் நடக்கின்றன). கடந்த இரண்டுமுறை தேர்தல்களுக்காக ஜார்ஜ் புஷ் கிட்டத்தட்ட இருபது மில்லியனகள் தானமாகப் பெற்றிருக்கிறார் என்று opensecrets.org தளம் தெரிவிக்கிறது. இதற்குக் கைமாறாக மருத்துவக் காப்பீடுகளில் அரசாங்கத்தின் நிலையை மிகவும் பலவீனப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் நிலை பிற நாடுகளையும் கட்டாயம் பாதிக்கிறது. எனவேதான் உலகம் முழுவதும் மருந்து நிறுவனங்களின் இலாபம் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டிருக்கிறது.

சந்தைப்படுத்தல், அரசியல், விளம்பரம், போன்றவற்றில் செலவு குறைந்து உண்மையான அறிவியல் ஆராய்ச்சியில் முதலீட்டை அதிகரிக்காவிட்டால் நம் தலையில் இன்னும் பல வருஷங்களுக்கு பழைய மருந்துகளையே புதிய மொந்தையில் அடைக்கப்பட்டு தலையில் கட்டப்படும். அறிவியலில் எவ்வளவு முன்னேற்றம் நடந்தாலும் அதன் பலன்கள் நம்மிடம் வந்தடையப் போவதில்லை.

மேலதிக விபரங்களுக்கு:

ஒளிவினை பற்றிய விளக்கங்களுக்கு Crystals and Optics, Elizabeth Wood, Dover Publications

Pill Pushers, Forbes, May 08, 2006

High Prices – How to think about drugs, New Yorker, Oct. 25, 2004

US Presidential Elections – Long term contribution trends, Pharmaceuticals/Health products,