அறிவுத் தேட்டத்தின் உச்சம் மனிதன் தன்னைக் குறித்தே அறிந்துகொள்வது. மூளையின் செய்ற்பாடுகள் குறித்த புரிதல்கள் மிகவும் தொடக்க நிலையிலேயே இருக்கின்றன. மூளையின் அமைப்பை அதன் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்வது மிக முக்கியமான உத்தி. பேரா. விலயனூர் ராமச்சந்திரன் இந்தத் துறையின் மிக முக்கியமான நிபுணர்களில் ஒருவர். நிழலில் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்; அதே போல நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் பல அற்புதங்களைப் பற்றி நாம் ஒருகணமும் சிந்திப்பதில்லை. உதாரணமாக கண் பார்ப்பதைக் கையால் பிடிப்பது. மிகச் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொண்ட இந்த திறமையை நீங்கள் ஒரு நாள் இழக்கிறீர்கள் என்றால் அன்றைய தினம் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

குறைப்பாடுள்ள மூளையின் அமைப்பையும் அது இழந்துபோன செயற்பாடுகளையும் குறித்த ராமச்சந்திரனின் ஆராய்ச்சி மனித மூளையின் செயற்பாடுகளை நமக்கு விளக்குகிறது. இவரது Phantoms in the Brain : Probing the Mysteries of the Human Mind, மற்றும் A Brief Tour of Human Consciousness: From Impostor Poodles to Purple Numbers இரண்டு புத்தகங்களும் மிக அற்புதமான, எளிய நடையில் எழுதப்பட்ட, மிக முக்கியமான புத்தகங்கள். மனித மூளையின் செயற்பாட்டைப் பற்றிய ஆர்வம் இருப்பவர்கள் தவறாது படிக்கவேண்டியது A Brief Tour… புத்தகம். ராமச்சந்திரன் ஒரு அற்புதமான ஆசிரியரும்கூட. கவர்ந்திழுக்கும் நடையில் மிகச் சிக்கலான அவரது ஆய்வுகளை எளிமைப்படுத்தி விளக்குகிறார்.

எச்சரிக்கை:
ராமச்சந்திரனின் ஆய்வுகள் மனித மனத்தின் செயற்பாடுகளை தத்துவார்த்த ரீதியிலும், கவர்ச்சியுடனும் (Romantic approach) அனுகுபவர்களுக்கு அதிர்ச்சிகளைத் தரக்கூடும். பல தத்துவக் கேள்விகளைக் கட்டுடைத்து படிப்படியான அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி மனிதனின் செயற்பாடுகளை முழுமையான அறிவியல் கண்ணோட்டத்தில் அறிய முயலும் காலம் துவங்கிவிட்டது. ஜல்லியடிகாரர்களுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.