loreal_2008.jpg
அறிவியலில் சிறப்பான சாதனைகள் புரிந்த பெண் விஞ்ஞானிகளைக் கௌரவிக்கும் முகமாக லேரெல் நிறுவனத்தின் பணவுதவியுடன் வழங்கப்படும் யுனெஸ்கோ-லோரெல் பரிசுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன (இது குறித்த என் சென்ற வருடத்திய பதிவு இங்கே).

ஆசியா : பேராசிரியர் லிஹாத் அல்-கஸாலி (Prof. Lihadh Al-Gazali) ஐக்கிய அரபுக் குடியரசு

பேரா. அல்-கஸாலி மரபுவழி நோய்பரவல் குறித்த அவரது ஆராய்ச்சிக்காகப் பரிசு பெருகிறார். நோய்சார் மரபியல் துறை மரபு ரீதியாத் தொடரும் வியாதிகளைப் பற்றியது. இது நோய்களுக்கும் அவற்றைத் தாங்கி சந்ததியாகப் பரவும் மரபணுக்களுக்குமான தொடர்பை ஆராய்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் நெருங்கிய குடும்பங்களுக்குள்ளே திருமணம் செய்துகொள்வது மிகப் பரவலான வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் மரபணுக்களால் சந்ததி தோறும் தொடரும் நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. உதடு மற்றும் காதுகளில் வடிவச்சிதைவு நோய் இந்தப் பகுதியில் மிக அதிகம், இதைப்போலவே திராணியற்ற எலும்புகளும் பல சந்ததிகளாகத் தொடர்கின்றன. ஒருபுறம் நோய்ச்செல்களை நுண்ணோக்கிமூலம் ஆராயும் செல்மரபியல் (Cytogenetics) உத்திகளின்மூலம் அறிவியல் ஆய்வுகளை முன்னெடுக்கும் அல்-கஸாலி மறுபுறம் கடந்த பதினேழு வருடங்களாக சமூகத்தில் மரபு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப் பாடுபட்டு வருகிறார்.

ஆசியா-பசிபிக் : பேரா. நாரி கிம் (Prof. V. Narry Kim), ஸியோல் தேசியப் பல்கலைக்கழகம், தென்கொரியா

நாரி கிம் மரபணுக்களைக் கட்டமைக்கும் ஆர்.என்.ஏ அமைப்புகள் குறித்த பல புரிதல்களை வழங்கியதற்காகப் பரிசு பெறுகிறார். நுண்-ஆர்.என்.ஏ என்பவை தாவர, விலங்குச் செல்களில் காணப்படும் ஒற்றை இழை ஆர். என்.ஏ மூலக்கூறுகள். இனப்பெருக்கத்தின்பொழுது மரபணு அடுத்த தலைமுறையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நிலையில் இந்த ஒற்றையிழை ஆர்.என்.ஏ-க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனியொரு ஜீன்-தொடர் உருவாதலையும், இன்மையையும் தீர்மானிப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. இந்த நுண்-ஆர்.என்.ஏ-க்களைப் பற்றி பல முக்கியமான கண்டுபிடிப்புகளை வழங்கியவர் நாரி கிம்.

ஐரோப்பா: பேராசிரியர் அடா யோனத் (Prof. Ada Yonath), வைஸ்மான் அறியவியல் கழகம்,

புரத உற்பத்தியின் அமைப்பு மற்றும் ஆண்டிபயாட்டிக்கினால் அவற்றில் ஏற்படும் மாறுதல்கள் குறித்த புரிதலுக்க்கா பேரா. அடா யோனத்-க்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. செல்களில் புரத உற்பத்தியில் ரிபோஸோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை செல்லின் புரத உற்பத்தித் தொழிற்சாலைகள் என்று அழைக்கப்படுகின்றன. மரபணுக்களின் சங்கேதங்களை உணர்ந்து புரதங்களாக மாற்றும் செய்கையில் ரிபோஸேம்களின் பங்கு முக்கியமானது. புரத உற்பத்தி தடைபட்டால் செல்கள் செயலிழந்துபோகும். வியாதிக்கிருமிகளின் தாக்கத்தால் ரிபோஸோம்கள் பாதிக்கப்படுகின்றன. ஆண்டிபயாடிக் மருந்துகள் எப்படி கிருமி பாக்டீரியாவின் ரிபோஸோம்களை மட்டும் தாக்கியழித்து மனிதச் செல்லின் ரிபோஸோம்களைக் காக்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சிக்காக பேரா. அடா யோனத் பரிசு பெறுகிறார்.

தென்னமெரிக்கா: பேரா. ஆனா பெலன் எல்கோய்ஹென் (Prof. Ana Belén ELGOYHEN), ப்யூனெஸ் அய்ர்ஸ் பல்கலைக்கழகம், அர்ஜெண்டினா

காதுகளின் செயல்பாடு குறித்து மூலக்கூறு அடிப்படையிலான புரிதல்களைத் தந்ததற்காக பேரா. எல்கோய்ஹென் பரிசு பெறுகிறார். நம் காதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். புறச்செவி, நடுச்செவி மற்றும் அகச்செவி. அகச்செவியின் முக்கியமான பகுதி காக்லியா எனப்படும் சுருள் போன்ற வடிவம். ஒலி காதுகளில் விழும்பொழுது செவிப்பறை அதிருகிறது, அந்த அதிர்வுகள் மயிர்கால்களின் மூலமாக காக்லியாவுக்குக் கடத்தப்படுகின்றன. காக்லியா இவற்றை மின் அதிர்வுகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. காக்லியாவின் மூலக்கூறுகளை ஆராய்வதன்மூலம் அதிர்வுகளை மின் சமிஞ்சைகளாக மாற்றும் முறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது செவிக் குறைபாடுகளைப் போக்க வழிகளைத் தருகிறது. பேரா. எல்கோய்ஹெனின் ஆய்வுகள் காக்லியாவின் மூலக்கூறு அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்தவை.

வட அமெரிக்கா: பேரா. எலிஸபெத் ப்ளாக்பர்ன் (Prof. Elizabeth Blackburn), கலியோர்னியப் பல்கலைக்கழகம், சான் பிரான்ஸிஸ்கோ, அமெரிக்கா

செல்களில் உள்ள குரோமோஸோம்களின் பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுவது டெலோமெர்ஸ். குரோமோஸோம்கள் மரபுக்கூறுகளைத் தாங்குபவை. டெலோமெர்ஸ் கிட்டத்தட்ட ஒரு காலணி முடிச்சைப் போல குரோமோஸோம்களை ஒரு நிலையில் பிணைக்கின்றன. இந்த இழைபோன்ற டெலோமெர்ஸ்-ஸின் நீளம் டெலோமெரேஸ் என்ற என்ஸைமால் கட்டுப்படுத்தப்படுகிறது. இழையின் நீளம் குறைந்தால் என்ஸைம் சுரப்பு அதிகரித்து அதை மீண்டும் நீட்டுகிறது. சாதாரணமாக வயதாங்கும்பொழுதும் கான்ஸர் வியாதியின்பொழுதும் டெலோமெரேஸின் செயற்பாடு குறைந்துபோகின்றது. பேரா. எலிஸபெத்தின் ஆராய்ச்சி டெலோமெரேஸின் செயற்பாடுகளைக் குறித்தது. இது கான்ஸர் வியாதியின் செயற்பாடு பற்றிய புரிதலைத் தருகிறது.

இந்த வருடத்திய யுனெஸ்கோ லோரெல் பரிசுகள் அனைத்தும் உயிர்நுட்பத் துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஒரு புறத்தில் நவீன அறிவியலில் உயிர்நுட்பத்தின் மிக முக்கியமான இடத்தைச் சுட்டுவதாக இருந்தாலும் பிற துறைகள் அளவுக்கு அதிகமாகப் புறக்கணிக்கப்படுகின்றன என்ற ஐயம் எழுதுவதைத் தவிர்க்க முடிவதில்ல்லை.

கடந்த பத்து வருடங்களில் இந்தியாவிலிருந்து ஒரே ஒருவர்தான் (தில்லி அகில இந்திய மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த பேரா. இந்திரா நாத்) இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார். யுனெஸ்கோ-லோரெல் பரிசுகள் அதிக கவனத்துடன் வளரும் நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில் இந்தியாவின் வெற்றி போதுமானதாக இல்லை. இந்தியாவின் அறிவியல் துறையில் பெண்களை ஊக்குவிக்கப் போதுமான முனைப்பு இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.