அதிகார்வபூர்வமாக இப்பொழுது ஜகுவார், லாண்ட் ரோவர் இரண்டும் டாடாவின் கையில். இந்திய உற்பத்தித்துறையில் இது ஒரு முக்கியமான மைல்கல்.

அதிசொகுசு கார் டாடாவினால் மாசுபடப்போகிறது என்று எழுந்த கூக்குரல்கள்கள் எதுவும் எடுபடாமல் போய்விட்டன (என் முந்தைய பதிவு – அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகுவார், ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்). சமீபகாலமாக இந்தியா தகவல் நுட்பம் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் சொல்லிக்கொள்ளத்தக்க உலக அதிர்வுகளை உண்டாக்கிவருகிறது. குறிப்பாக மருந்து உற்பத்தி மற்றும் தொழில்பொருட்கள் உற்பத்தித் துறை. ஆனால், மற்றெல்லாவற்றையும்விட இது பெரிய அதிர்வை உண்டாக்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக எங்கள் ஊர் டொராண்டோவில் (தற்பொழுது உலகிலேயே கார் உற்பத்தியில் முதலிடம் ஒண்டாரியோ மாநிலம்தான்). ஒரு காலத்தில் ஜகுவார் பிரிட்டனின் கனவுக் காராக இருந்தது. போர்ட் அதை வாங்கி அதன் பிம்பத்தைச் சிதைத்தது (தற்பொழுது நிறைய ஜகுவார் கார்களில் ஆளியக்கி மாற்றியம் (Manual Transmission) கிடையாது. ஸ்போர்ட்ஸ் கார் என்ற பிம்பத்தைத் தானியங்கி (Automatic) கொண்டு தூக்கிப் பிடிக்க முடியாது).

டாடா நானோ காரை அறிமுகப்படுத்தியபொழுது இங்கிருந்து பெரும் கூச்சல் எழும்பியது. ஒருபுறம் இதை பொம்மைக்கார் என்று சொன்னாலும் உள்ளூர இதே போன்ற பிம்பத்தைத்தான் டொயோட்டாவின் கொரோலாவும் ஹோண்டாவின் சிவிக்கும் தாங்கி உள்வந்ததையும் இன்று இவை இரண்டும் உலகிலேயே அதிகம் விற்கும் கார்களாக இருப்பதையும் அவர்களால் நினைவுகூறாமல் இருக்க முடியவில்லை (சிவிக் முதலில் வந்தபொழுது Passenger Side rear-view mirror அதில் கிடையாது). எனவே உலகத்தை மாசுபடுத்தப்போகிறது என்று பச்சைத் தொப்பியை அணிந்துகொண்டு எச்சரிக்கை விடுக்கிறார்கள். இங்கெல்லாம் புருஷன்-பொண்டாட்டி இரண்டு பேர் இருக்கும் வீடுகளில் மூன்று கார்கள் உண்டு. தினசரி வேலைக்குப் போக இருவருக்கும் தலா ஒன்று, வார இறுதியில் படகை இழுத்துச் செல்ல ஒரு SUV). இந்தியாவிலும் மொஸாம்பிக்கிலும் நானோ கார் ஓடினால் கரிவளி வானத்தை மாசுபடுத்திவிடாது. இப்பொழுது ஜகுவாரின் பெயரும் சேர்வதால் டாடாவினால் நானோவை முக்கியமான காராக்கமுடியும் என்று உறைக்கத் தொடங்கியிருக்கிறது.

டாடாவுக்கு ஜகுவாரைக் காட்டிலும் லாண்ட் ரோவரின் தொழில்நுட்பம் மிகவும் பயன் திறமையாகக் கையாண்டு விற்பனையைப் பெருக்கினால் இந்தியாவின் மதிப்பு கட்டாயம் உயரும். இந்தியாவில் இதைச் செய்வதற்கு இப்பொழுதைக்கு டாடாவைத் தவிர வேறு யாராலும் முடியாது. Good Luck!.