பிரபு ராஜதுரையின் இந்தக் கேள்வி (‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?)மிகவும் முக்கியமானது.

ஞாநியின் கட்டுரை ஒன்றை முன்வைத்து சஞ்சிகைகளில் பத்தி எழுதுபவருக்கு எந்தவிதமான மொழியறிவும் தேவையில்லை போலிருக்கிறதே என்று வியந்திருக்கிறார். இது கட்டாயமாக அவலநிலைதான். ஞாநியின் அந்தக் கட்டுரையின் இடத்தில் வேறு எந்தத் தமிழ்ப்பத்தியாளரின் கட்டுரையையும் போட்டு இதே விமர்சனத்தை முன்வைக்க முடியும். சான்றான்மை என்று ஒரு பதம் உண்டு; தான் செய்யும் காரியம் அனைத்திலும் தன் முழு எத்தனத்தையும் பயன்படுத்தி காரியம் எல்லாவற்றிலும் முழுமையடைவது சான்றோர்கள் குறித்த வரையறை. துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.

மொழியாளுமையைத் தாண்டி விஷயத்திலும் அவர்கள் அப்படியொன்றும் வித்தகர்கள் அல்லர். தமிழில் பத்தியெழுதுபவர்களில் பலர் உளறிக்கொட்டுவதை அடுத்த நொடியிலேயே இணையத்தில் விவாதித்திப்பது வழக்கம்தானே!. அது பின்நவீனத்துவமோ, மரபு மாற்றமோ, சூடேற்றமோ, சூடான் அரசியல் விவகாரமோ இவர்கள் பல சமயங்களில் மேம்போக்காக மேய்ந்துவிட்டு அடுத்தவாரமே தங்கள் மேதமையை அச்சிலேற்றிவிடுவார்கள். தன் வாசகர்கள்மீதுதான் பத்திரிக்கைகளுக்கு எவ்வளவு நம்பிக்கை!

இன்றைக்கு முதல்தர எழுத்தாளர்களாக அச்சில் அடையாளம் காணப்படுபவர்கள் பலருக்கும் செய்நேர்த்திக்கு முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை. இலக்கியவாதிகள் என்றும் பேரழிவிலிருந்து தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் மீட்டெடுப்பவர்கள் என்றும் தங்களை அடையாளம் காண்பவர்களுக்கு சுயவிமர்சனம் என்றொரு விஷயம் இருப்பதாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தமிழில் முதன்மை எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்கள் (அல்லது தாங்களாகவே முன்னிருத்திக் கொள்பவர்கள்) இணையத்தில் எழுதுபவர்களைக் குறித்து போகிற போக்கில் “அங்க யாரும் சீரியஸ் கிடையாது. கொழுத்த பணம் சம்பாதித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மிச்சமிருக்கும் நேரத்தில் இவர்கள் கிறுக்கித் தள்ளுவது” என்ற வகையில் அவ்வப்பொழுது அச்சுப் பத்திரிக்கைகளில் ஏளனம் செய்வார்கள்.

சொல்லப்போனால் இணையத்தில் ‘மேம்போக்காக’ எழுதும் பல நண்பர்கள் உள்ளடக்கத்திலும், மொழியாளுமையிலும் அதிகமே கவனம் செலுத்துகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன; முக்கியமான ஒன்று சக-விமர்சனம். வலையில் எழுதுபவர்கள் பலரும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சகர்களாக இருக்கிறார்கள். மிகச் சாதாரணமான சின்ன விஷயங்கள்கூட நொடியில் விமர்சிக்கப்பட்டுவிடுகின்றன. (பல சமயங்களில் படைப்பாளர் இதற்கு நேரடி பதில் சொல்வதுண்டு). உதாரணமாக சென்றவாரம் நான் எழுதிய நாலுவரி “டாடா-ஜகுவார்” செய்தி விமர்சனத்தில் டாடா என்று எழுதுவதில் இருக்கும் ஒலிக்குறை சுட்டப்பட்டது. இப்படி அவசரமாக ஒலிக்குறையைக் கவனிக்காமல் எழுதிவிட்டோமே என்று என்னை நானோ நொந்துகொண்டது உண்மை. அச்சு ஊடகங்களில் இதுபோன்று கிடையாது. அதிமுக்கியமான கருத்துப்பிழைகளைக் கூட பலரும் சுட்டுவதில்லை. அப்படியே செய்தாலும் அதற்கு ஒளிவட்டம் தாங்கி உலாவரும் மேதைகளிடமிருந்து எந்த மறுவினையும் இருக்காது. இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பத்தி எழுதுபவர்கள் நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

மின்வடிவத் தகவல்கள் உயிரூட்டமானவை. எழுதப்பட்ட விஷயம் சரியா தவறா என்று அடுத்த நொடியிலேயே இன்னொரு உலாவி சாரளத்தைத் திறந்து தேடிப்பார்க்க முடியும். தவறு விரைவிலேயே வெளிவந்துவிடும் என்பதால் எழுதுபவர்கள் (முதல்தர வலை எழுத்தாளர்களை மாத்திரம்) இயன்ற அளவுக்குத் தவறில்லாமல் எழுத முனைகிறார்கள். ஆனால் செத்தமரத்தில் இப்படியில்லை. அது எழுதி எட்டு நாளுக்குப்பிறகுதான் அச்சில் வரும், சுருட்டிப் பிடித்துக்கொண்டு வாசிப்பவர்கள் வாசித்துமுடித்தவுடன் சுருட்டியெறிந்துவிட்டுப் போய்விடுவார். இணையத்திலோ ஐந்துவருடங்களுக்கு முன்னால் எழுதியதைக் கூட ஒன்றிரண்டு முக்கிய வார்த்தைகளை உள்ளிட்டு தேடல் இயந்திரம்மூலம் நோண்டியெடுப்பது சாத்தியம். எனவே போகிற போக்கில் எழுதுபவையாகச் சொல்லப்படுபவை ஒருவகையில் நிரந்தரமாக விமர்சனத்துக்கு உள்ளாவதும் அழியாத காகிதத்தில் அச்சிடப்பட்டவை தேடக்கிடைக்காமல் போக கருங்குழியில் விழுவதும் மேலுக்கு முரணாகத் தோன்றினாலும் மறுக்கமுடியாத உண்மை.

ஒருவகையில் சொல்லப்போனால் இன்று அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் பலரும் விஷயதானத்திற்கு இணையத்தையே முற்றாக நம்பியிருக்கிறார்கள். வலைக்குறிப்புகளும் இணைய சஞ்சிகைகளும் இவர்கள் எழுதுபனவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அச்சிலேறுபவை எல்லாம் இணைய உலகில் வ(வா)சிக்கும் பலரையும் சென்றடைவதை இவர்கள் அறிவதில்லை. இந்த வாசகர்களின் உலகம் வேறு, இங்கே பிம்பங்கள் தொழப்படுவதில்லை. அது எழுத்தாளர்-வாசகர் என்ற இடைக்கோடு அழிந்துபோன வேற்று உலகம் என்பதைப் பழமையில் ஊறிய படைப்பாளிகள் அறிவதில்லை. மேல் நின்று உபதேசிப்பது இங்கே எடுபடாது; எதுவுமே சக-விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. கறாரான விமர்சனங்கள் முன்வரும்பொழுது அவர்களால் அந்த வீச்சை எதிர்கொள்ளமுடிவதில்லை. மறுபுறத்தில் இவ்வூடகத்தில் கிடைக்கும் பல வசதிகள் அவர்களைத் தொடந்து கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் இவர்களில் பலரும் மறுபிறவி எடுத்து வலைப்பதிய வருகிறார்கள். இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள். இது ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பா. ராகவன், வெங்கடேஷ், உள்ளிட்ட பலருக்கும் பொருந்தும்.

பழமையில் ஊறிப்போன படைப்பாளிகளாலும், விமர்சகர்களாலும் இதைப் புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றவில்லை. பத்திரிக்கைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

* * *
கடைசியாக பிரபு இவர்கள் தமிழில் (தமிங்கலத்தில்) எழுதுவதைவிட என்னால் ஆங்கிலத்தில் நன்றாகவே எழுதமுடியும், எனவே எனக்கு ஆங்கிலத்தில் பத்தி எழுதும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். பதில் – கட்டாயம் கிடைக்காது. டைரக்டர், சினிமா, சப்ஜெக்ட்டு ரீதியில் எழுதும் மொழி தெரியாதவர்களுக்கு (அல்லது கொஞ்சமேனும் சிரத்தை எடுத்துக்கொண்டு திருத்தமாக எழுதமுயலாதவர்களுக்கு) ஆங்கிலத்தில் வாய்ப்பு கிடைக்காது. ஆங்கில வாசகர்கள் என்ன தமிழ் வாசகர்களைப் போல இளிச்சவாயர்களா?