sujatha.pngசற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது.

ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா-வைக் காணமுடியும்.

என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் உருவகித்துக் கொண்டு ஸ்டெப் கட்டிங், சாக்பீஸைத் தூக்கிப்போட்டு வாயால் பிடித்தல் என்று தங்களுக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் எனக்காக நான் வரித்துக் கொண்ட தோற்றம் வஸந்த். அது “மோபெட்டில் ஏறி ஆக்ஸ்லரேட்ட எட்டு நொடிக்குள் அறுபது” என்று செயலில் துரிதம் காட்டுவதிலும், அடுத்தத் தெரு உஷாவிடம் அபத்த ஜோக் சொல்லவும், மதியம் தூங்கி எழுந்தவுடன் பேச்சு குளறும் பாட்டிக்கு வந்திருப்பது மயஸ்தேனியா க்ராவிஸ் என்று வாயில் நுழையாத பெயரைச் சொல்லி மாமாவைப் பயமுறுத்தவும், நீண்ட நேரமாக கட்டைப் போட்டு ஓவர்களை வீணடிக்கும் பீக்காசுவை ‘ஹேபியஸ் கார்பஸில்’ வெளியே அழைக்கிறேன் என்று எதிர் காப்டனிடம் சொல்லவும், செஸ்ஸில் தோற்றுப் போன வக்கீல் மாமாவிடம் ரை லோபெஸ் ஒப்பனிங்க்கு நைட்டை வெட்டுக்கொடுத்ததுதான் உங்கள் தோல்விக்குக் காரணம் என்று அவர் முகத்தில் பேஸ்த் அடிக்கச் சொல்லிவிட்டு நகர்வதற்கும் இன்னும் இத்யாதி மூளை, ஆண்மை, இளமை சமாச்சாரங்களுக்கும் நம்மிடம் இருக்கும் வஸந்த்-தனம்தான் காரணம் என்ற பதின்மக் கதாநாயகக் கனவுகளுக்குப் பேருதவியாக இருந்தது.

வானொலி மாமா சோதனைகள் என்று குழந்தைத்தனமாகவும், பொழுதுபோக்கு பௌதீகம் என்று வறட்சியாகவும் வாசித்துக் கொண்டிருந்த தமிழில் சிலிக்கன் சில்லுப் புரட்சியைக் கொண்டு வந்தவர் சுஜாதா. ஸ்பான், ஸ்பூட்னிக், கூரியர், சயண்டிபிக் அமெரிக்கன், நேஷனல் ஜியாகரபிக் சமாச்சாரங்களை ‘சுடச்சுட” அந்தக் காலங்களில் தமிழுக்குக் கொண்டுவந்தவர். என்னுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றியமைத்ததில் அவருக்கும் கொஞ்சம் பங்குண்டு. நான் பத்தாம் வகுப்பு முடித்து +2 செல்லும்பொழுது மிகச் சூடாக இருந்தது “காமெர்ஸ் க்ரூப்” படிப்பு (எக்கனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்ஸி, கணக்கு) என்னுடன் படித்த சகாக்கள் எல்லோரும் சிஏ-ஆவதைக் கனவாகக் கொண்டு வர்த்தகப்படிப்பில் நுழைந்த பொழுது இயல்பியலிலும், பொறியியலிலும் சுஜாதா (யா.பெர்ல்மான், ரைட்னிக், ஈறாக) கட்டுரைகள் என்னை வர்த்தக வழிசெல்லாமல் தடுத்தாட்கொண்டு அறிவியலுக்கு வரவழைத்தது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கணினி வருகிறது என்று சுஜாதா எழுதும்பொழுதுதான் காகிதங்கள் வாயிலாக மாத்திரமே அறிந்திருந்த ஒன்றிலிருந்து நாம் நீண்ட காலம் தப்பமுடியாது எனவே இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று படிக்கும் ஆர்வம் வந்தது.

பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் பல தமிழ் மன்ற ஆண்டு விழாக்களுக்கு சுஜாதாதான் ஆஸ்தான தலைவர்). ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது சிலமுறைகள் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகளில் அவரது கூர்மையான அவதானிப்பை நேரடியாக அறியமுடிந்தது. முதல் தடவை ஒரு சாவகாசமான சனிக்கிழமை காலை, இரண்டு மணி நேர இலக்கில்லா அரட்டைக்கு இடையில் மழைவிட்டிருந்த பொழுது காப்பி குடிக்கச் சென்றோம். ஓய்ந்த மழைக்குப்பின் ஐஐஎஸ்ஸின் சாலைகள் கழுவிவிடப்பட்டதுபோல் கருப்பாக, பளபளப்பாக மிகக் கவர்சியாக. சாலையின் இரு ஓரங்களிலும் கரையிட்டதுபோல் மஞ்சள் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அந்தப் பூக்களைப் பற்றிய பேச்சு வந்தது. இது என்ன பூ என்றார். நான் சரக்கொன்றை என்றேன். இதுக்கு இங்கிலீஷ்ல என்ன பேர் தெரியுமா என்று கேட்டார்? அவர் அறிந்திருக்கவில்லை. என் நண்பர் ஒருவர் இண்டியன் லேபர்னம் என்று சொன்னார். இந்தச் சந்திப்புக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கல்கியில் ஒரு புதிய தொடரை ஆரம்பித்தார் (தலைப்பு நினைவில் இல்லை, அது ஒரு பெங்காலி பேராசிரியரையும் அவரது இளம் மாணவியையும் பற்றிய கதை). அந்தக் கதையே இப்படித்தஅன் துவங்கும் “இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் இன்னதேதியில் சொல்லிவைத்தால்ப்போல் பெங்களூர் சாலையோரமெங்கும் மஞ்சள் பூக்கள் பூக்கட்டும்” எங்களுக்கும் சுஜாதாவுக்கும் நடந்த அதே இண்டியன் லேபர்னம் உரையாடல் எந்த மாற்றமுமில்லாமல் அந்த ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையில் கதையில் நடந்தது.

இரண்டாம் முறை இன்னும் சுவாரசியமானது. அப்பொழுது விகடனில் ‘நிலா நிழல்’ ‘என் இனிய இயந்திரா’ தொடர் மிகப் பிரபலமாக நடந்துகொண்டிருந்தது. அதில் ஸ்டார் வார்ஸைப்போல லேசர் ஆயுதமெல்லாம் வரும். ஒரு இடத்தில் லேசர் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தப்படும்பொழுத்து ஜீனோ என்ற இயந்திர நாய் நிதானமாக உன்னிடம் இருக்கும் லேசரின் பவர் அதன் கொகரென்ஸில் இருக்கிறது, நான் அதைப் போக்கி உன் துப்பாக்கியை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று சொல்லும். அந்த சந்திப்பின் பொழுது எங்கள் ஆய்வகத்திலிருந்த லேசர்களை அவருக்கு இயக்கிக் காட்டிக்கொண்டிருந்தோம். (அந்தத் தொடருக்காகவே எங்கள் லாப்-க்கு வந்தாரோ என்று தோன்றுகிறது). அப்பொழுது coherence என்பது லேசரின் அடிப்படைப் பண்பு என்றும் அதை அவ்வளவு எளிதில் மாற்றமுடியாது என்றும் அவரிடம் சொன்னோம். தொடர்ந்து அப்பொழுது இந்திய இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திற்காக நான் செய்துகொண்டிருந்த Optical Phase Conjugation என்ற சோதனையை அவருக்கு விவரித்தேன். அதன் முக்கியமான இலக்கு ஒரு auto-tracking ஆடி போன்ற அமைப்பை உருவாக்குவது. இது ரொனால்ட் ரீகனின் ஸ்டார் வார்ஸ் ப்ரொக்ராம்க்குப் (Strategic Defense Initiative) பதில் சொல்ல வேண்டி இந்தியாவின் முயற்சிகளில் ஒன்று. வானில் பறக்கும் விமானத்திலிருந்து ஏவப்படும் லேசரை அதனிடமே திருப்பியனுப்பும் உத்தி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுத்த வாரம் கதையில் ஜீனோவின் decoherence எல்லாம் பம்மாத்து சும்மா சுடு என்று சக காவலனிடம் ஒருவன் சொல்ல, அவன் சுட ஜீனோ phase conjugate mirror ஐப் பயன்படுத்தி அவனிடமே லேசரைத் திருப்பியனுப்பி அழிக்கும். நான் பழகிய மனிதர்களில் இத்தனைக் கூர்மையான அவதானம் கொண்டவர்கள், அந்த அவதானத்தை சுவரசியாமான உரைநடையாக்கம் செய்யும் திறன் கொண்டவர்கள் மிகச் சிலரே.

சுஜாதாவின் முதல் திரைப்பிரவேசம் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும் என்று தொடர்ச்சியாக அவர் கதைகள் திரைச்சேதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இரண்டாம் வருகையில் அவருக்கு மாபெரும் வெற்றி ரோஜா, முதல்வன், இந்தியன், அந்நியன், ஆய்த எழுத்து, சிவாஜி என்று அவர் பங்களித்த படங்களில் பல மாபெரும் வெற்றியைப் பெற்றவை. எழுத்துக்கும் திரைக்கும் இடையில் சப்தமில்லாமல் சில நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதினார். பூர்ணம் விஸ்வநாதன் உதவியுடன் அபத்தத் துணுக்குத் தோரணங்களிடமிருந்து மேடை நாடகங்களை மீட்டெடுக்கும் முயற்சி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும்கூட என்னைப் பொருத்தவரை அவர் ஆத்மார்த்தமாகச் செய்த ஒரே காரியம் இதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

பலரும் எழுத்துத் துறையில் சுஜாதா அசாத்திய சாதனைகளைச் செய்து முடித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அவர் எழுதுபதுகளில் கட்டியம் கூறிய வருகை நிறைவேறவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் வர்த்தக ரீதியான அவரது அசாத்திய சாதனைகள். அலுங்காமல் போகிற போக்கில் எழுதுபவை பெருவெற்றியைப் பெறுவதும் ஒன்றிரண்டு உண்மை முயற்சிகள் தோல்வியைத் தருவதும் அவரது எழுத்தின் போக்கை முழுமையாக நிர்ணயித்துவிட்டன. அதன் காரணமாகவே அவர் எந்த ஆழமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாவற்றிலும் தகவல் தெரிய ஒரு சுஜாதா போதும் ஆனால் எவற்றிலும் முழுமையான புரிதலை அவர் தந்ததில்லை. பெயர் உதிர்த்தல், ஜல்லியடி போன்று அவர் பிரபலமாக்கிய சில வார்த்தைகள் அவருக்கே முழுமையாகப் பொருந்திப்போவது வருத்தமான விஷயம்.

வேலைக்கிடையில் எந்தவிதமான ஆழமான முயற்சிகளுக்கும் இடமில்லாத நிலையில் பெங்களூரில் இருந்தவரை அவரால் அதுதான் சாத்தியம் என்று தோன்றியது. ஓய்வுக்குப் பின் அவர் மாபெரும் படைப்புகளை உருவாக்கப் போகிறார் என்றிருந்தது. வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது.

So long, Sujatha! Thanks for everything.