எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யவும் விவாதிக்கவும் ஒரு கூட்டு வலைப்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நான் எழுதிய ஒபாமா வெல்லட்டும் என்ற பதிவு தூண்டிய ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களின்பொழுது நண்பர்கள் பலருக்குத் தேர்தல் குறித்து எழுத ஆர்வம் இருப்பதாகத் தெரியவந்தது. இவற்றை ஒரே இடத்தில் பதிவு செய்ய வசதியாகக் கூட்டுப்பதிவு ஒன்றைத் துவங்கலாம் என்ற யோசனையில் இருந்தபொழுது சுந்தரமூர்த்தியும் இதே கருத்தைச் சொன்னர்.

முன்னெப்பொழுதும் இல்லாத ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் அமெரிக்க அரசியல் தற்பொழுது உள்ளது. இது அமெரிக்காவைத் தாண்டி பன்னாட்டு நடப்புகளைப் பெரிதும் பாதிக்கும் என்பதும் வெள்ளிடை. எனவே இந்தத் தளம் அமெரிக்கத் தேர்தலை முன்னிட்டு சர்வதேச நடப்புகளையும் குறித்த ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபடும் என்று நம்புகிறேன்.

US President 08 என்ற பெயரில் வேர்ட்பிரஸ்.காம் சேவை வழங்கியில் இந்தப் பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டு முயற்சியில் பங்கேற்க ஆர்வமிருப்பவர்கள் உங்கள் முகவரியை uspres08 {அட்}domesticatedonion.net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் பங்கேற்பு அழைப்பை அனுப்புகிறேன். (விரைவில் இந்த மின்னஞ்சல் முகவரியையும் ஓரிருவருடன் பகிர்ந்துகொள்ள உத்தேசம், எனவே ஆர்வமிருப்பவர்கள் அதையும் எழுதவும்).