இல்லாத (சொத்து)உரிமையை நிலைநாட்ட வழக்குபோடமாட்டோம் என்று சொல்கிறது மைக்ரோஸாஃப்ட். இது என்ன அபத்தமான வாக்கியமாக இருக்கிறதே என்று வரும் சிரிப்பை ஒத்திப்போட்டுவிட்டு மேலே படியுங்கள். இது சிரிப்பதற்கான விஷயமில்லை, மிகவும் சிக்கலானது.

ஃபார்ச்சூன் சஞ்சிகையின் கடந்த இதழில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் லினக்ஸ் இயக்குதளம் தங்கள் அறியுரிமைகள் பலவற்றை மீறியிருக்கிறது, எனவே எந்த ஒரு லினக்ஸ் பயனர்மீதும், சேவை வழங்குநர்கள்மீதும் தங்களால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயமுறுத்தியது.

(சட்டபூர்வமாக மூன்று உரிமைகள் இருக்கின்றன; Patent, Copyright and Trademark, இவற்றில் பின்னதை ‘வர்த்தகச்சின்னம்’ என்று அழைக்கிறோம். முன்னது இரண்டுக்கும் பொதுவாகத் தமிழில் காப்புரிமை என்று சொல்கிறோம். ஆனால் இவற்றுள் Copyright மட்டும்தான் ‘காப்புரிமை’ என்று சொல்லப்பட வேண்டும். அறிவுபூர்வமான கண்டுபிடிப்புக்குத் தரப்படும் உரிமையைத் தெளிவாக ‘அறியுரிமை’ என்று கூறலாம் என்று முன்வைக்கிறேன். இராம.கி போன்ற மொழி வல்லுநர்கள்தான் தெருட்ட வேண்டும்).

இது ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை. ஐபிஎம், ரெட் ஹாட், நாவெல், ஹெச்.பி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பல லினக்ஸ் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குகின்றன. ஒருகாலத்தில் திறமூலத்தின் அடிப்படையிலான லினக்ஸ் தரக்குறைவானது என்று எள்ளிநகையாடிக்கொண்டிருந்தது மைக்ரோஸாஃப்ட். கடந்த பத்து வருடங்களாகத் தொடர்ச்சியாக இந்த சவால்களை எதிர்நோக்கி லினக்ஸ் மற்றும் பல திறமூல நிரலிகள் மைக்ரோஸாஃப்ட் மற்றும் பல வர்த்தகரீதியான மறைமூலப் பொதிகளைவிட நுட்பரீதியாக மேலானவை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில் லினக்ஸ்=தரக்குறைவு வாதம் எடுபடாமபோனதால் தன்னுடைய சந்தையை இழந்துவரும் மைக்ரோஸாஃப்ட் வேறுபல உத்திகளைக் அவ்வப்பொழுது கையாண்டுவருகிறது.

இதன் முக்கிய கட்டமாக ஸ்கோ நிறுவனத்தைத் தூண்டிவிட்டு ரகசியக்காப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு யுனிக்ஸ் இரகசியங்களை வாங்கிய ஐபிஎம் தங்கள் காப்புரிமைகளை லினக்ஸ் உலகிற்குத் திறந்து காட்டிவிட்டார்கள் என்று வழக்கு தொடுக்க வைத்தது. இந்த வழக்கை நடத்துவதற்காக மைக்ரோஸாஃப்ட் தங்கள் சட்ட உதவி, பண உதவி, விளம்பர உதவி என்று பல வழிகளிலும் ஸ்கோவைத் தாங்கிப்பிடித்தது. ஆனால் ஐபிஎம் இன்னொரு சட்ட முதலை. அதனிடம் இந்த உத்தி செல்லுபடியாகவில்லை. விளைவு – இன்றைய நிலையில் ஸ்கோ திவாலாகும் தருவாயில் இருக்கிறது.

இப்படி ஸ்கோ-வை உப்புக்குச் சப்பாணியாக வைத்து விளையாடிய மைக்ரோஸாஃப்ட் இப்பொழுது லினக்ஸ், ஓப்பன் ஆபீஸ் உள்ளிட்ட பல திறமூல நிரலிகள் 235 அறியுரிமைகளை மீறுகின்றன, எனவே எந்த ஒரு பயனரும் இதன்மூலம் குற்றம் இழைத்தவர்களாகிறார்கள். அவர்கள் மீது நாங்கள் வழக்கு தொடருவோம் என்று எச்சரித்தது. இதன் முக்கிய நோக்கம் பல இராட்சத பன்னாட்டு நிறுவனங்கள் லினக்ஸ் உலகை நோக்கித் திரும்பும் நிலையில் அவர்கள் மீது பநிச (பயம், நிச்சயமின்மை, சந்தேகம், Fear, Uncertainity and Doubt, FUD) ஐ விதைப்பது. பொதுவில் பெரும் நிறுவனங்கள் தரக்குறைவான பொருட்களுக்கு பணத்தை அள்ளித்தரக்கூடத் தயங்கமாட்டார்கள், ஆனால் நிச்சயமின்மையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. பல மில்லியன் டாலர்கள் செலவில் தங்கள் தகவல் சேவைகளை லினக்ஸ்க்கு மாற்றும்பொழுது நாளை மைக்ரோஸாஃப்டை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற பயமும் நிச்சயமின்மையும் அவர்களை மைக்ரோஸ்ஃப்ட் பொருள்களில் (தே)தங்க வைக்கும். இதுதான் மைக்ரோஸாஃப்டின் வர்த்தக உத்தி.

ஆனால் இது மைக்ரோஸாஃப்டிற்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. இந்த ஃபார்ச்சூன் கட்டுரை வெளியான உடனேயே பல தரப்புகளிலிருந்தும் இது குறித்த அலசல்களும் விமர்சனங்களும் வெளியாயின. (முக்கியமாக இந்தக் கட்டுரை). 235 என்று சொன்ன மைக்ரோஸாஃப்ட் லினக்ஸ் மீறும் ஒரு அறியுரிமை குறித்துக்கூட முழுத்தகவல்களை வெளியிடவில்லை. அப்படி வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவதாக லினக்ஸை ஆதரிக்கும் நிறுவனங்கள் மைக்ரோஸாஃப்ட் சுட்டும் அந்த அறியுரிமை திறந்த ஞானம் (அதாவது மைக்ரோஸாஃப்ட் காப்புரிமை பெறும் முன்னரே இது இரகசியமாக இல்லாமல் வேறு ஆராய்ச்சியாளர்களால் பதிப்பிக்கப்பட்டுவிட்டது) என்று நிறுவ முயற்சிக்கும். இதற்கான வழக்கு விபரங்கள் பல வருடங்கள் இழுத்தடித்துக் கொண்டே போகலாம். மறுபுறம், இப்படிச் சிக்கல் இருப்பவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து இனி வரும் திறமூலங்கள் புதிய வழியில் அதே காரியத்தைச் சாதிக்கும் நிரல்களை எளிதில் எழுதுவது சாத்தியம்.

வழக்குக்குப் போனால் மைக்ரோஸாஃப்ட்க்குப் பெரிய தலைவலிதான். இங்கே நிருபணத்தின் சுமை (Burden of Proof) சுட்டுவிரலை நீட்டும் வாதியான மைக்ரோஸாஃப்ட்டுக்குத்தான். அவர்கள் குற்றங்களை அடுக்க அடுக்க லினக்ஸ் நிறுவனங்கள் எதிர்வாதங்களை அடுக்குவார்கள். இது வழக்கை நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கும். மாறாக எந்த ஒரு அறியுரிமையையும் சுட்டாமல் மானாவாரியாக பயத்தை விதைப்பதுதான் மைக்ரோஸாஃப்ட்டின் பெரும் உத்தி.

இதையும் முறியடிப்பதற்காக நேற்று முன் தினம் Sue Me First, Microsoft என்ற இணைய தளம் துவக்கப்பட்டது. இங்கே லினக்ஸ் பயனர்கள் தாங்களாவே முன்வந்து “நான் லினக்ஸ் பயன்படுத்துகிறேன். எனவே நீங்கள் சொல்லும் அறியுரிமை மீறுகிறேனா என்று நிரூபியுங்கள். தயவு செய்து என்மீது வழக்கு தொடருங்கள் என்று தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்”.

அறியுரிமை பெற்ற நிறுவனம் அது மீறப்படுவதாகத் தெரிந்த உடனேயே நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் அதன் அறியுரிமையை நிலைநாட்ட அதற்கு ஆவல் இல்லை என்று வருங்காலத்தில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கக்கூடும். (இதற்கான அடிப்படை; அறியுரிமை மீறுகிறார் ஆனால் அவர் தயாரிப்பு சந்தைக்கு வந்து அதன் வருவாய் பெருகட்டும். அதற்குப் பிறகு வழக்குத் தொடுத்து விற்பனையின் பெரும்பங்கைப் பெறாலம் என்று காத்திருக்க முயல்வார்கள். இது அநியாயம் என்று பன்னாட்டுச் சட்டங்கள் கருதுகின்றன).

மறுபுறத்தில் எதிர்ப்பை நேரடியாகப் பதிவு செய்வதன்மூலம் மைக்ரோஸாஃப்ட் விளைக்கும் பயம், நிச்சயமின்மை, சந்தேகம் இவற்றின் தீவிரத்தைக் குறைக்க முடியும். இதன் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்கள் உரிமையை இழப்போம் என்று மைக்ரோஸாஃப்டைத் தீவிரப்படுத்த முடியும். (காத்திருந்து வசதியான தருணத்தில் தாக்க எதிராளிக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் நேரடியாக உடனடி சண்டைக்கு அழைப்பது).

இந்த உத்தி பல வழிகளில் செயல்படும். இதன் முதல் உடனடி விளைவாக நாங்கள் யார் மீதும் வழக்கு தொடரப்போவதில்லை (தனிநபர்கள் என்று வாசிக்கவும்) என்று மைக்ரோஸாஃப்ட் அறிவித்திருக்கிறது.

இது மைக்ரோஸாஃப்ட் – திறமூலப் போட்டியை இன்னும் தீவிரமாக்கியிருக்கிறது. இதுவும் ஒருவகையில் நல்லதற்குத்தான்.