sexualityandu.jpg

புத்திசாலித்தனமாகவும், கலைநுட்பத்துடனும் உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் எப்பொழுதுமே ஒரு நல்ல கலைப்படைப்பைத் துய்த்தலுக்கு நிகரான மகிழ்ச்சியைத் தரக்கூடியன. இனி தொடர்ந்து அவ்வப்பொழுது காணும் நல்ல விளம்பரங்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதலாமென உத்தேசம். ஆர்வமுள்ள நண்பர்களுடன் இவற்றைப்பற்றி அலசவும் ஆவல். இவற்றில் பெரும்பாலானவை பொதுநல விளம்பரங்களாகவும் இருக்கும்.

முதல் தவணை இதோ: கனடாவின் பெண்நல மருத்துவர்கள் கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு (குறிப்பாக, பதின்ம வயதினருக்கு) பால், கலவி, ஆணுறை, பெண்ணுறை, சுய இன்பம், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களில் இற்றைப்படுத்தப்பட்ட மருத்துவத் தகவல்களை அறிவிப்பதற்காகவும், சந்தேகங்களைக் களைவதற்காகவும், அதற்கும் மேலாக அச்சங்களையும், தவறான நம்பிக்கைகளையும் போக்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட இணைய தளம் Sexuality and U. மேலேயுள்ள படத்தில் அவர்கள் கணினியின் விசையெலியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கும் அற்புதமான குறும்படங்களைக் காணலாம்.

விசையெலியின் மேல் குடை – கர்பத்தடை, ஆணுறையில் விசையெலி – பால்நோய் தடுப்பு, பக்கவாட்டில் விசையெலி – சூலுற்ற வயிறு, பல வண்ண விசையெலி – மாறுபட்ட பால் தெரிவுகள், இன்னும் விந்து, மார்புக்கச்சை என அற்புதமான கலைத்திறனுடன் விசையெலியை பல வடிவங்களாகவும், அவற்றைக் குறியீடாகவும் பயன்படுத்துவதைப் பார்க்கமுடியும். இந்தப் படங்கள் சில நாட்களுக்கு டொராண்டோ பாதாள இரயில்களில் விளம்பரிக்கப்பட்டன. பதின்ம வயதினரை இலக்காகக் கொண்ட இந்தத் தகவல் தளம், பதின்ம வயதினரின் மனதுக்கு நெருக்கமான கணினி/விசையெலியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது மிகவும் புத்திசாலித்தனமனது.

நம்மூரில் இதுபோல மிகச் சமீபத்த்திய அறிவியல் அறிதல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்குப் பால் கல்வியூட்டும் தளங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஓவ்வொரு மொழியிலும் இது மிக அத்தியாவசியமான தேவை. கலவி, கர்பத்தடை, சுய இன்பம் என்று விஷயம் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் ஒவ்வொருவரும் இந்தத் தளத்தைத் தைரியமாக நாடலாம். ஆணுறையை முறையாக எப்படிப் பயன்படுத்துவது என விளக்கப்படம் கூட உண்டு.

இந்தத் தளத்தில் இருக்கும் பல விளம்பரங்கள் மிகவும் அழகாக, எந்தவிதமான கொச்சைப்படுத்தலும் இல்லாமல் அதே சமயத்தில் ஆர்வம் ஊட்டுபவனவாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

விக்கிப்பீடியாவிற்காகத் தமிழ்க் கட்டுரைகளையும் குறிப்புகளையும் எழுதும் நண்பர்களுக்கும் இந்தத் தளம் உதவியாக இருக்கும். சொல்லத் தேவையில்லை; பல முக்கிய விளம்பரப் பரிசுகளைப் பெற்ற தளம் இது.