நம்மூர் சன், ராஜ் வகையறாக்களில் தங்கச்சி வாரம், ஓர்ப்படியாள் வாரம், கத்தரிக்காய் வாரம் என்று வருவது போல (டிஸ்கவரி சேனல் கனடாவில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான) டெய்லி ப்ளானெட் இந்த வாரம் முழுவது இந்தியாவைப் பற்றியது. திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. நேற்றைய நிகழ்ச்சியில் ஜெய்ப்பூர் கால்கள் தயாரிக்கப்படும் விபரம் குறித்து மிக நல்ல பகுதி ஒன்று வந்தது. அதற்கு முன்னால் பாடல்பெற்ற மும்பை டப்பாவாலாக்களைப் பற்றிய பகுதி (ஆகக் கூடி இரண்டு நாட்களில் இவைதான் காலர் உயர்த்தும் சமாச்சாரங்கள்). மற்றபடி பம்பாயில் கட்டப்பட்டுவரும் புதிய பாலத்தைப் பற்றிய விஷயம் ஒன்று (இதில் உலக அளவிலான தொழில்நுட்ப சாதனை எதுவுமில்லை. கூடவே இதன் வடிவமைப்பில் கனடாவிற்குப் பெரும்பங்கு உண்டு). HAL வடிவமைக்கும் 14 சீட் விமானம் (இது பெரிதும் Reverse Engineering வகையைத்தான் சேரும்) சரஸ் பற்றியது.

மற்றபடி எல்லைக் காவல் ஒட்டகத்தின் அம்பாரித்து நாட்டைக் காப்பது, பாம்பாட்டிகள் பழைய திருச்சி வானொலியை நினைவுபடுத்தும் சேர்ந்திசை (சரியாகச் சொன்னால் சேராயிசை) வாசித்தது, ராஜஸ்தானில் ஜெய்ஜெகதீஸ ஹரே பாட்டுக்குத் தீமித்து நர்த்தகிப்பது, வாயில் சாணியுருண்டை போட்டு தீயைக் கொப்பளிப்பது போன்ற இத்யாதி non-science, non-daily planet சமாச்சாரங்கள்தான். (டப்பாவாலா கூட டெய்லி ப்ளானெட் வகையில் வராது). இதில் டெய்லி ப்ளானெட்டைக் குறைசொல்ல ஒன்றுமில்லை. அதன் பல நிகழ்ச்சிகள் எங்கள் ஆய்வகத்தில் பதிவு செய்யப்பட்டன என்ற வகையில் Jay Ingram ஐ எனக்கு ஓரளவுக்குத் தெரியும், நேர்மையான மனிதர். உண்மை என்னவென்றால் இன்னும் உலகத்தரத்திற்குக் காட்ட நம்மூரில் சரக்கு வரவில்லை.

சிலமாதங்களுக்கு முன்னால் இதே போல சீனா வாரம் ஒன்று வந்தது. வாரம் முழுவதும் பிரமிக்கத்தக்க வகையில் Town Planning, Infrastructure development, Manufacturing Technologies, என்று பலவாறாக உலகத்தர விஷயங்களால் நிரப்பிக்கப் பட்டிருந்தது. நம்மூரில் நாராயணமூர்த்தி டெக்பார்க் நீரோடைக்குப் பக்கத்தில் ஆரோகணித்து பொருளாதாரத்தை Disposable Income கொண்டு நிரப்பிக்கும் தன் கனவை விரித்துக்கொண்டிருந்தார். (ஸாப்ட்வேர் சாதனைகளில் டிவியில் என்னத்தக் காட்டமுடியும். எட்டு For Loop ஐயும் சிக்கலில்லாமல் பின்னும் Visual Basic நிரல் பட்டியலை டிவியில் காட்ட முடியாது; அது photogenic கிடையாது). நேரத்தை நிரப்ப ஜே இன்கிராமுக்கு பதினாறு முழப் புடவையால் ராஜஸ்தான் தலைப்பாகை கட்டிவிட வேண்டியிருக்கிறது.

இரண்டு நாட்களில் காட்டிய இன்னொரு உருப்படியான விஷயம், தாராவி வீடுகளுக்கு விசேட வடிகட்டி கொடுத்து அவர்களுக்கான நல்ல குடிநீரை அவர்களே தயாரித்துக்கொள்ள வைக்கும் திட்டத்தைப் பற்றியது. துரதிருஷ்டவசமாக இதை நடத்துபவர் ஒரு வெள்ளைக்கார பெண்மனி.

நம்மூர் டைடல் பார்க்குகளும் சுனாமிச் சேரிகளுமாக பிளவு விரிந்துகொண்டே போகிறது. இது நல்லதிற்கில்லை. இளைஞர்கள் ஃபோரம் மால்-க்குப் போகும்பொழுது வழியில் இருக்கும் குடிசைகளைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்திப்பது – அவர்களுக்கே- நல்லது.

மற்றபடி இந்தியா வார்ர்ர்ரத்தில் இன்னும் மூன்று நாட்கள் பாக்கியிருக்கின்றன. டெய்லி ப்ளானெட் ஒரு மிக நல்ல நிகழ்சி (அமெரிக்காவில் உண்டா என்று தெரியாது) குறைந்தபட்சம் கனடாவில் இருக்கும் பேரன்பர்களாவது பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.