கால இயந்திரம்
time_machine.png

வெளியிடப்பட்ட அன்றே சிறுத்தையை நான் வாங்கி சோதித்துப் பார்க்க முக்கியமான காரணம், ஆப்பிள் விளம்பரித்த Time Machine என்ற அமைப்புதான். இன்றைய வைரஸ் உலகில் கோப்புகளின் பாதுகாப்பும், அவற்றைப் பாதுகாப்புக்காக பிரதியெடுத்து வைப்பதும் மிகவும் முக்கியமானவை. ஆனாலும் பலரும் இவற்றை ஒழுங்காகச் செய்வதில்லை. இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு; ஒன்று பிரதியாக்கம் ஒரு அசுவாரசியமான விஷயம், மற்றது, அது சிக்கலானது. பல நேரங்களில் குறுவட்டுகளிலும், அடர்வட்டுகளிலும் பாதுகாப்புக்காகச் சேமித்துவைக்கப்பட்ட ஒரு பழைய படத்தையோ, பாடலையோ தேடி எடுப்பது மிகவும் சிக்கலானது.

ஆப்பிளின் காலயந்திரம் இந்த இரண்டிலும் கவனம் செலுத்தியிருக்கிறது. கண்கவரும் திரைச்சலனங்களை உருவாக்கியிருப்பதன்மூலம் ஆப்பிள் இதைச் சுவாரசியமாக்கியிருக்கிறது. மறுபுறத்தில் பிரதியாக்கம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. USB அல்லது FireWire இணைக்கக்கூடிய புறக் கடினவட்டு ஒன்றை இணைத்தால் போதுமானது. உடனே காலயந்திரம் வேலையைத் துவக்கி, முழு கடினவட்டையும் பிரதியாக்குகிறது. அடுத்ததாக ஓவ்வொரு மணி இடைவெளியிலும் மாற்றங்களை உடனடியாக புறவட்டில் பிரதிபலிக்கிறது. நீக்கப்பட்ட கோப்புகளுக்கான இணைப்பு நீக்கப்படுகிறது (கவனிக்கவும், கோப்பு நீக்கப்படுவதில்லை), புதிதாக உருவாக்கப்பட்டவை சேர்க்கப்படுகின்றன. நீங்கள் தவறுதலாக ஒரு கோப்பை நீக்கிவிட்டால் பல நாட்கள் கழித்தும் காலயந்திரத்தின் உதவியுடன் அதை மீட்டெடுக்க முடியும்.

நான் இதேபோன்ற அமைப்பை லினக்ஸிலும், லினக்ஸ் உதவியுடன் விண்டோஸிலும் பயன்படுத்துகிறேன். இந்த அமைப்பில் ஒரு கோப்பின் ஒன்று மேற்பட்ட பிரதிகளைச் சேமிப்பது சாத்தியம். இதற்கு அதிக இடம் தேவையில்லை. முதலாவது பிரதியில் முழுமையாக கோப்பு சேமிக்கப்படும், இரண்டாவது பிரதியாக்கத்தில் (கோப்பில் எந்தவித மாறுதலும் இல்லாத பட்சத்தில்) பழைய கோப்பிற்கு ஒரு இணைப்பு மாத்திரமே உருவாக்கப்படும். கோப்பை நீக்கினால், கடைசியான பிரதியாக்கத்தில் இருக்கும் இணைப்பு மாத்திரமே நீக்கப்பட, அதற்கு முந்தைய நாளில் பிரதியில் கோப்பு முழுமையாகக் கிடைக்கும்.

இதே அடிப்படை அமைப்பை ஆப்பிள் நீட்டித்து, இன்னும் கொஞ்சம் மேம்படுத்தியிருக்கிறார்கள். கடினவட்டின் விலைகள் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் (500 GB 3.5 inch – $110), ஒரு 500 கிகா வட்டை வாங்கினால் 160 கிகா இருக்கும் என்னுடைய மடிக்கணினியின் கடினவட்டுக்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிரதிகளைச் சேமிப்பது சாத்தியம். இன்னும் Finder தேடலுடன் காலயந்திரத்தையும் நெருக்கமாகப் பிணைத்திருப்பதால் மேசையில் தேடும் கோப்பு இல்லாவிட்டால் அங்கிருந்து நேரடியாகக் காலயந்திரத்தில் கடைசியாகச் சேமித்த வடிவத்தைக் கண்டெடுப்பது மிக எளிதாக இருக்கிறது.

(ஆப்பிள் USB/FireWire வழியே இணைக்கப்படும் புறவட்டுகளுக்கும், ஆப்பிள் வழங்கிகளில் இருக்கும் சேமிப்பிடத்திற்கும் மாத்திரமே இந்த காலயந்திர அமைப்பைத் தருகிறது. ஒரு சிறிய மாறுதலை ஏற்படுத்தியதன் மூலம் இதை லினக்ஸ் வழங்கியில் இருக்கும் சேமிப்பிடத்தில் பிரதியாக்க முடிந்தது. இதில் மறந்துவிடாமல் புறவட்டை இணைக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது, வலையில் இருக்கும்பொழுதெல்லாம் தொடர்ச்சியான பிரதியாக்கம் உறுதிசெய்யப்படுகிறது).

மிக எளிதான, மிகத் திறமையான பிரதியாக்க அமைப்பான காலயந்திரத்திற்காக மட்டுமே சிறுத்தைக்கு காசு கொடுத்து வாங்கலாம்.

முழுமையான யுனிக்ஸ்

ஆப்பிள் சிறுத்தை வடிவத்திலிருந்து முழுமையான யுனிக்ஸ் இயக்குதளமாகியிருக்கிறது. இதன்மூலம் யுனிக்ஸ் தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி எழுதப்பட்ட எல்லா நிரலிகளும் ஆப்பிளிலும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் இயங்கும். என்னுடைய கணினியில் VMWare Fusion மூலம் விஸ்டா, உபுண்டு லினக்ஸ் இரண்டையும் ஆப்பிளுடன் கூடவே இயக்கும் வசதியை வைத்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது மடிக்கணினியில் உபுண்டு இயக்க வேண்டிய தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது. அலுவலகத்தில் மைக்ரோஸாஃப்ட் தளத்தில் மாத்திரமே இயங்கும் சில பொதிகளை மாத்திரமே எப்பொழுதாவது விஸ்டாவில் இயக்குகிறேன். (மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை). இப்பொழுது வேலையில் பெரும்பாலும் ஆப்பிள் தளம்தான்.

மிகத் திறமையாக, சிக்கலில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த டைகர் வடிவத்தை எடுத்து அதை இன்னும் விரைவாக, அற்புதமாக இயங்கும்படி மாற்றிய ஆப்பிளுக்கு பாராட்டுகள்.