இதன் முதல் பாகம்

புதுமைகள்

300 க்கும் மேற்பட்ட புதிய, முன்னேற்ற சமாச்சாரங்களை உள்ளடக்கியது என்று ஆப்பிள் விளம்பரித்தது. இதில் சாரளத்தின் மூலை கூர்மையாக இருப்பதற்குப் பதிலாக மழுங்கலாக இருப்பதெல்லாம் புதுமை என்பதைக் காற்றில் விட்டுவிட்டாலும்கூட கொஞ்சம் புதுமையான விஷயங்கள் நிச்சயம் உண்டு. தோற்றத்திலும் அமைப்பிலும் சில மாறுதல்களைச் செய்திருக்கிறார்கள். இவற்றில் சில நன்றாக இருக்கின்றன, சில அபத்தமாக இருக்கின்றன. நல்ல விஷயத்தில் மின்னஞ்சல் பொதியின் குறும்படத் தோற்றம், அபத்த விஷயத்தில் டாக் (Dock)-ன் முப்பரிமாண தோற்றம் போன்றவற்றைச் சொல்லலாம். இதெல்லாம் சில்லரைச் சமாச்சாரம். முக்கியமான முன்னேற்றம் வரைகலைக்கு ஆதாரமான Quartz GL இப்பொழுது அளவு பெரிதாக்கினாலும் பளிச்சென்று தீர்க்கமாக இருக்கிறது. ஆப்பிள் க்வார்ட்ஸை Resultion Independent ஆக மாற்றியிருக்கிறது.

என்னுடைய மதிப்பீட்டில் முதலாவதாகத் தோன்றியது – இதன் வேக முன்னேற்றம். டைகர் ஆப்பிள் இண்டெல் சில்லுகளுக்கு மாறியபின் முதன் முதல் வந்த இயங்குதளம். அதில் இருந்த சில சிக்கல்களை விடுவித்து மாக் இயக்குதளத்தை இண்டெல் சில்லுகளுக்கு ஏற்றவகையில் முழுமையாக மாற்றியிருக்கிறார்கள். எனவே மாபெரும் பொதிகளான மைக்ரோஸாஃப்ட் எக்ஸெல், அப்பிள் அப்பெர்ச்சர் போன்றவை முன்னிலும் வேகமாக இயங்குகின்றன. (மைக்ரோஸாஃப்ட் ஆபீஸ் பொதிகள் இன்னமும் இண்டெல் மாக்கிற்கு ஏற்றபடி வடிக்கப்படவில்லை, இருந்தபோதும் புலியைவிட சிறுத்தை வேகமாகத்தான் ஓடுகிறது). இதன் ஆதார அமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆர்வமிருப்பவர்களுக்கு ஆர்ஸ் டெக்னிக்காவின் இந்த அற்புதான மதிப்பீட்டை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன் (ஒரு மென்கலனின் விமர்சனம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ஆர்ஸ்-ஸின் கட்டுரை மிக அற்புதமான உதாரணம்).

ஆப்பிள் இயக்குதளம் கோப்பு பட்டியலிடுதலை (Journaling) மிகத் திறமையாகச் செய்கிறது. (இதைவிட நல்ல பட்டியலாக்கம் செய்யக்கூடிய ஒரே இயக்குதளம் சன் மைக்ரோஸிடத்தின் ZFS, ஆப்பிள் விரைவில் இதைத் தன் இயக்குதளத்தில் சேர்க்கும் என்று தெரியவருகிறது). இதன் உதவியுடன் மேசையமைப்பிலிருந்து எல்லாவற்றையும் விரைவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடிகிறது. இது நிச்சயமாக விஸ்டா, லினக்ஸ் இவற்றைவிடத் திறமையானதுதான்.

மின்னஞ்சல், நாட்காட்டி

ஆப்பிள் மெயில், நாட்காட்டி, முகவரிப் புத்தகம் இவை மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று இயைந்து செயல்படும் வசதிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. மின்னஞ்சல்களில் இருக்கும் முகவரிகள் அடையாளம் காணப்பட்டு புத்தகத்தில் நேரடியாகச் சேமிப்பது எளிதாக இருக்கிறது. அதேபோல உள்வரும் அஞ்சல்களில் இருக்கும் நாள், நேரங்கள் அடையாளம் காணப்பட்டு நேரடியாக நாட்காட்டியில் சேர்ப்பது எளிதாக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் நாட்காட்டி சென்ற பதிப்பிலேயே மிகத் திறமையாகச் செயல்பட்டது. அதை இன்னும் மேம்படுத்தியிருக்கிறார்கள். அசிங்கமாக சந்திப்புகள் குறித்த விபரம் தனி இடது ஒட்டுச்சாரளத்தில் வந்துகொண்டிருந்தது நீக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக சம்பவத்திலேயே அதன் விபரங்களை மாற்றியெழுதும் வசதி வந்திருக்கிறது.

leopard_isync.jpg

இவற்றும் இணைந்து செயல்படும் iSync இன்னும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்காட்டி, முகவரிப்புத்தகம் போன்றவற்றில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை இப்பொழுது மிக எளிதாக என்னுடைய Nokia E50 செல்பேசியில் ப்ளூடூத் வழியாக சிக்கலில்லாமல் சமச்சீராக்க முடிகிறது.

இந்த இடத்தில் விண்டோஸ் விஸ்டாவுடன் ஒப்பீடு வருவது தவிர்க்க முடியாது. மின்னஞ்சல், நாட்காட்டி, முகவரிப்புத்தகம் இவற்றில் எதுவுமே சிறுத்தை அளவுக்குத் திறமையாக விஸ்டாவில் இயங்குவதில்லை. ப்ளூடூத் வழியாக இவற்றை நேரடியாக செல்பேசிகளில் கடத்துவதும் அவ்வளவு எளிதில்லை. என்னுடைய செல்பேசிக்கு நோக்கியாவின் Nokia PC Suite என் மனைவியின் செல்பேசிக்கு Sony Ericsson PC Suite என்று தனித்தனியாக நிரலிப்பொதிகள் தேவைப்படுகின்றன. மாறாக ஆப்பிளின் அடிப்படை அமைப்பில் இருக்கும் iSync மட்டுமே நேரடியாக இந்த செல்பேசிகளுடன் அருமையான இணைப்பைத் தருகின்றன.

வெளிகள்
leopard_spaces.jpg
லினக்ஸைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு Virtual Desktop Spaces என்பது மிகவும் பரிச்சயமான ஒன்று. 1997-ல் நான் பயன்படுத்திய எக்ஸ்விண்டோ அமைப்பில் மேசைத்தளத்தின் பரப்பை நான்கு மடங்காக்கும் வசதியிருந்தது. ஒரு தளத்தில் ஃப்யர்ஃபாக்ஸ், ஒரு தளத்தில் வேலைக்கான கோப்பைத் திறந்து வைத்துக்கொண்டு, இன்னொன்றில் பாடலுக்காக எம்பி3 இயக்கியை வைத்துக்கொள்வது மிக வசதியானது. ஆப்பிளின் முந்தைய வடிவமான டைகரில் ஒரு சிறிய இலவச நிரலியைக் கொண்டு இதைச் செய்துகொள்ள முடிந்தது, சிறுத்தையில் இந்த வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது செயல்படும் விதத்தில் சில குளறுபடிகள் இருக்கின்றன. உதாரணமாக மைக்ரோஸாஃப்ட் வேர்ட் மூன்றாவது மேசையில் திறக்க வேண்டும் என்று அமைத்திருந்தாலும், சில சமயங்களில் மூடிவிட்டுத் திறக்கும்பொழுது வேறு இடத்தில் முளைக்கிறது. இதை ஆப்பிள் விரைவில் சரிகட்டும் என்று நம்புகிறேன்.

Cover Flow
coverflow.jpg

ஐட்யூன்ஸையோ புதிய ஆறாம்தலைமுறை ஐபாடையோ பயன்படுத்தியவர்களுக்கு இவற்றில் இருக்கும் ஆல்பம் படங்களின் தோற்றமும் விரைவாக இவற்றை அலச உதவும் அமைப்பும் மிகவும் பரிச்சயமாக இருக்கும். கண்ணுக்குக் கவர்ச்சியாக இருக்கிறது என்பதைத் தாண்டி, விரைவாக ஒரு இசைக்கோப்பைக் கண்டுபிடிக்க ஆப்பிளின் Cover Flow உதவியாக இருக்கிறது. இதே நுட்பத்தை நீடித்து பலவிதமான கோப்புகளை நோட்டமிட உதவியாக மாற்றியிருக்கிறார்கள். கோப்புகளின் பெயரைப் பார்வையிடும்பொழுது Spacebar விசையைத் தட்டினால் உடனே கோப்பின் உள்ளடக்கம் விரைவாக திரைக்கு வருகிறது. விசையெலியை மேலும்கீழும் நகர்த்தி முழுக்கோப்பின் உள்ளடக்கத்தையும் பார்வையிட முடிகிறது. இந்த முறைமூலம் மைக்ரோஸாஃப்ட் ஆபீஸ் கோப்புகள், அக்ரோபாட் கோப்புகள், jpeg, png, gif உள்ளிட்ட பல பட வடிவங்கள், இன்னும் முழு சலனப்பட உள்ளடக்கத்தையும் அவற்றுக்கான செயலிகளைத் திறக்காமலேயே உள்ளடக்கத்தைப் பார்வையிட முடிகிறது. சிறுத்தையின் மிகப் பயனுள்ள முன்னேற்றங்களில் இது முக்கியமான ஒன்று.