2007 நோபெல் பரிசுகள்
by வெங்கட் • October 10, 2007 • அறிவியல்/நுட்பம் • 13 Comments
எல்லோரும் சிவாஜி பற்றி மும்முரமாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில் கையில் சரக்கில்லாமல் காணமல் போன அதே நான் தான். யாரும் கண்டுகொள்ளாத வருடாந்திர விஷயம் வந்திருப்பதால் கொஞ்சம் எழுதலாமே என்று….
* * *
இந்த வருடத்திற்கான மருத்துவம்/உடற்கூறியல், இயற்பியல் மற்றும் வேதியியல் நோபெல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த வருடம் இந்த மூன்று துறைகளிலும் இந்த வருடம் மிக சுவாரசியமான கண்டுபிடிப்புகள் கவனம் பெற்றிருக்கின்றன. கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் இவை ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன்.
மருத்துவத்துறையில் முதன் முறையாக வளர்கரு மூலச் செல்கள் (Embryonic Stem Cells) குறித்த கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் ஊட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரியோ கப்பேச்சி, பிரிட்டனின் கார்டிஃப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த சர். மார்ட்டின் எவான்ஸ் மற்றும் அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆலிவர் ஸ்மித்திஸ் மூவருக்கும் பரிசு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. வலதுசாரி தீவிரவாதிகள் ஒருபுறத்தில் வளர்கரு மூலச் செல்கள் குறித்த ஆராய்ச்சிகளை நசுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த நோபெல் பரிசு மிக முக்கியமானது. அறிவியல் அடிப்படைகளைப் பற்றி எழுதும்பொழுது இதில் நடக்கும் அரசியல் பற்றியும் கொஞ்சம் எழுதலாம்.
இயற்பியல் துறைக்கான நோபெல் பரிசு மிக அற்புதமான கண்டுபிடிப்பு. நான் இந்திய அறிவியல் கழகத்தில் மாணவனாக இருந்தபொழுது இரண்டு கண்டுபிடிப்புகள் தொய்ந்துபோயிருந்த இயற்பியல் துறையைத் துள்ளியெழச் செய்தன, ஒன்று லேசர் துறையில் போஸ்-ஐன்ஸ்டைன் ஒருக்கம் (Bose-Einstein Condensation) மற்றது மாபெரும் மின்காந்தத் தடைகாந்த மின்தடை (Giant Magnetoresistance). இவற்றில் முந்தையை கண்டுபிடிப்புக்கு சில வருடங்களுக்கு முன் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இந்த வருடம் மாபெரும் மின்காந்தத் தடை காந்த மின்தடை பரிசைப் பெறுகிறது. ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆல்பெர் ஃபெர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் க்ருண்பெர்க் இருவரும் பரிசைச் சமமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்றைக்குப் பத்திரிக்கைகளில் ஐபாட்-க்கு ஆதாரமான கண்டுபிடிப்பு என்று ஐபாட் படத்தைப் பெரிதாகப் போட்டு விஞ்ஞானிகள் பெயரைச் சிறிய எழுத்துக்களில் நுணுக்கியிருக்கிறார்கள். மருத்துவப் பரிசு அரசியல் முக்கியத்துவம் கொண்டது என்றால் இயற்பியல் பரிசு வர்த்தக முக்கியத்துவம் கொண்டது. இதிலும் அறிவியலுக்கு வெளியே சுவாரசியமான விஷயங்களுக்குத் தொடர்பு உண்டு; எழுதுகிறேன்.
சற்று நேரம் முன் வேதியியல் துறைக்கான பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் அறிவியல் பரிசுகள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பகிரிந்துகொள்ளப்படுகின்றன. இந்த வருடத்திய வேதியியல் பரிசு தனியாக ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர்ஹார்ட் எர்ட்ல் என்பவருக்கு வழங்கப்படுகின்றன. பரப்பு வேதியியல் (Surface Chemistry) சமிப காலங்களில் மிக முக்கியமான துறையாக இருக்கிறது. எர்ட்ல்-ன் கண்டுபிடிப்பு பரப்பு வேதிவினைகளில் வினையூக்கிகளின் (Catalyst) பங்கை அறிய உதவுகிறது. இந்தத் துறையும் நுட்பரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
வரும் சில நாட்களில் இவற்றைப் பற்றி விரிவாக.
ஐபோடை பெரிசாக போட்டு,விஞ்ஞானி பெயர் சிறியதாகவா!!?
வியாபர தந்திரம் இதிலுமா?
நல்ல விரிவா எழுதுங்க. என்னை மாதிரி அ.கை.நா. ஆளுங்களுக்குப் (அறிவியல் கை நாட்டு ஆளுங்கப்பா) புரியற மாதிரி எழுதுங்க.
வெங்கட்,
உங்கள் தொடர் பதிவுக்கான அழைப்பை பலநாட்கள் கழித்துப்பார்த்தேன். அழைப்புக்கு நன்றி. முடியும்போது எழுதப் பார்க்கிறேன்.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
முன் அறிவிப்பு:
இலக்கியம் மற்றும் அமைதிக்கான பரிசுகள் இன்னும் அறிவிக்கப் படவில்லை.
இது மேற்கத்திய கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பவர்களுக்கும் அவை அல்லாதவைகளை தூற்றுபவர்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.
நய்பாலைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அவர் இஸ்லாத்தை விமர்சித்து இரண்டு புத்தகம் போட்ட உடனே அவருக்கு இலக்கியத்திற்கான பரிசினைத் தட்டிச் சென்றார்.
மேற்கில் மாற்றுக் கலாச்சாரத்தைக் கொண்ட நாடு துருக்கி. ஓர்ஹான் பாமுக் துருக்கியை தனது புத்தகத்தில் தாக்கி இலக்கியத்திற்கான பரிசினை பெற்றார்.
பார்க்கலாம் இந்த தடவை எப்படி என்று.
தொகுதி எம்மெல்லே மாதிரி அடிக்கடி காணாமப் போயிடுறீங்களே .. அது ஒண்டிதான்.. கொஞ்சம்…
குமார், இ.கொ, கார்த்திக் – நன்றிகள்.
மாலிக் – இலக்கியம், அமைதி எல்லாம் பற்றி யாராவது விஷயம் தெரிந்தவர்கள் எழுதவேண்டும். பேசாமல் புஷ்க்கு 2002விலேயே ஒரு அமைதி பரிசு கொடுத்து அவர் பல்லைப் பிடுங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அது ஒன்றும் அதிகமான விலையல்ல. தவறு நடந்துவிட்டது.
பிரகாஷ் – இன்னா பண்றது, பொயப்பு.
(உண்மைல இந்தக் கோடையில் நிறையப் பயணம் மற்றும் வீட்டில் விருந்தாளிகள் என்று பொயப்பைத் தவிர மத்த விஷயங்களில்தான் பிஸி).
மின்காந்தத் தடை – magnetoresistance இந்த மொழிபெயர்ப்பு அறிவியல் பூர்வமாக சரியாக இருக்குமா. electromagnet -மின்காந்தம் என்றுதான் அழைக்கிறோம்.
காத்தப்புல மின் தடை மாற்றம் – இது சரியாக இருக்குமா.. தெரியவில்லை
//வலதுசாரி தீவிரவாதிகள் ஒருபுறத்தில் வளர்கரு மூலச் செல்கள் குறித்த ஆராய்ச்சிகளை நசுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த நோபெல் பரிசு மிக முக்கியமானது// very true.
கையேடு – காந்த மின்தடை என்று எழுத வேண்டியது அவசரத்தில் மின்காந்தத் தடை என்று எழுதிவிட்டேன். சுட்டியதற்கு நன்றி. திருத்தியிருக்கிறேன்.
பத்மா – நன்றி!
நோபல் பரிசு அறிவிப்புகள் வந்தவுடன் நினைச்சேன்…உங்க பதிவு இருக்கும்னு!
வந்தது வந்தீங்க..இதையும் கொஞ்சம் கவனிக்கிறது….
http://domesticatedonion.net/tamil/?p=686#comment-11130
நன்றி.
hi,
it’s interesting to read the scientific articles in the way you write in tamil. good work.
best regs
vaithi