புளூட்டோவும் செவ்வாய் தோஷமும்
தொடர்பான விக்கிப்பசங்க கட்டுரையை முதலில் படிக்கவும்.
இந்த புளூட்டோ சமாச்சாரத்தில் அறிவியல் செயல்படும் விதம் இன்னொருமுறை தீர்மானமாக வெளிப்பட்டிருக்கிறது. இங்கே எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடமில்லாமல் கோள் என்றால் என்ன என்பதை தீர்க்கமாக மறுவரையறை செய்து புளூட்டோவை வெளியில் தள்ளிவிட்டார்கள். மறுபுறத்தில் அறிவியல் அடிபப்டை கொண்டது என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கும் ராகு, கேதுக்கள் (இவர்களெல்லாம் யார்?) சூரியன், சந்திரன் இவையெல்லாவற்றையும் வெள்ளி, புதன், வியாழன், சனி கூடச் சேர்த்து நாம் இன்னும் நவக்கிரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
அன்றைய அறிவியல் புரிதலின்படி பூமியை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றுகின்றன என்ற கருதுகோளின் அடிப்படையில் சூரியன், சந்திரன், எல்லாவற்றையும் உள்ளே சேர்த்து நம்மூரில் நவக்கிரகங்களை வரையறுத்தார்கள். அற்புதமான விஷயம். தொடர்ந்து இவற்றின் பாதைகளைக் கண்டாராய்ந்து (எப்படி என்று தெரியாது) கோள்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணக்கிடவும் செய்தார்கள் (பஞ்சாங்கம்) - அதியற்புதம். விண்ணிலிருக்கும் கோள்கள் மனிதனின் மீது நுண்மாற்றங்களை (Celestial perturbations) விளைவிக்கிறது என்று தீர்க்கமில்லாத அறிவியல் கருதுகோள் உருவானது.
அவ்வளவுதான், அறிவியலை நம்மூரில் மதம் கடத்திக் கொண்டுபோய்விட்டது. நுண்மாற்றங்களைக் கொண்டு ஜாதகங்கள் எழுதப்பட்டன. நுண்மாற்றங்கள் இருக்கிறாதா இல்லையா என்பதே தெளிவில்லாத விஷயம் (இன்றைய அறிவியலில் இதைக் கணக்கிடுவது சாத்தியமற்ற செயல் என்பது தீர்மானமான உண்மை). ஆனால் இந்த ஒற்றை (அரை)அறிவியல் விஷயத்தைப் பிடித்துக்கொண்டு ஜோதிடம் என்ற சாத்தான் புறப்பட்டது. வருங்காலத்தை முன்கூட்டி வரையறுப்பது என்ற ஏமாற்று வித்தை வளர்ந்தது. பரிகாரங்கள் என்ற பம்மாத்துகள் புறப்பட்டன. நவக்கிரகங்களைச் சுற்றுவது என்ற உடற்பயிற்சியில் தொடங்கி, அவற்றின் தலையில் பாலைக் கொட்டுவது என்ற மூடநம்பிக்கையில் வளர்ந்து, பசுமாட்டை பார்ப்பனனுக்குத் தானமாகப் பரிந்துரைக்கும் ஏமாற்றுவித்தையாகப் பரிணமித்து, செவ்வாய் தோஷத்தால் இயற்கைக்குச் சற்றும் ஒவ்வாத இனைசேரத் தடை வரையான பயங்கரவாதம் உள்ளிட்ட அபத்தங்கள் வளர்ந்தன. எந்தவிதக் கேள்விகளுக்கும் இடம்கொடாமல் சொல்வதை நம்புவது என்ற அறிவற்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.
தொலைநோக்கி வந்தாலும் சூரியனும் சனியும் நவக்கிரகங்களில் இடம் மாறாது. ராகு கேது சிலைகள் வேறு வடிவம் கொள்ளா. சந்திரனைக் கழித்து நெப்ட்யூனைக் கூட்டமுடியாது. எள் விளக்கு மாத்திரமே இதில் சாத்தியம், எலுமிச்சம் பழம் விற்பனையை அதிகரிக்க வேண்டுமென்றால் அதன் மூடியில்தான் விளக்கேற்ற வேண்டும் என்று எளிதாக மார்க்கெட்டிங் செய்யமுடியும்.
மாறாக அறிவியலும் புவிமையக் கோட்பாட்டில்தான் (Geocentric) தொடங்கியது, பின்னர் பரிதிமையக் கோட்பாட்டுக்கு (heliocentric) மாறியது. சந்திரன் பூமிக்கு மட்டுமல்ல அதைவிட அதிக எண்ணிக்கையில் ஜுபிட்டருக்கும், சனிக்கும் உண்டு என்று தெளிவாகியது. 1930களில் புளுட்டோவைச் சேர்த்தது, 2006-ல் புளூட்டோவைக் கழித்தது.
இதுதான் அறிவியலுக்கும் பொய்-அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு. பொய்யறிவியல் (Pseudoscience) மூடநம்பிக்கைக்கு மாத்திரமே துணைபோகிறது.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
வெங்கட், உங்கள் கருத்துக்களுடன் உடன்பட்டாலும் மொழியும் நடையும் எனக்கு ஒப்புமை இல்லை. சோதிடங்களின் ஏகபோக உரிமையை நாம் கொள்ள முடியாது. அது கலாசாரங்களுக்கும் குமுகாயங்களுக்கும் அப்பாற்பட்டு பரவியுள்ளது. நான் பத்திரிகைகளில் இராசிபலன் பார்க்க ஆரம்பித்ததே Peter Vidal இன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை கொண்டுதான். நவகிரகங்களை கடவுளாகக் கொண்டாடுவது நாகங்களையும் அரசமரத்தையும் கொண்டாடுவது போல ஒரு மூட நம்பிக்கையே்.
இந்த மூடநம்பிக்கைகளை புறம்தள்ளினால் தொலைநோக்கி இல்லாமலே கிரகங்களின் நகர்தலை துல்லியமாக கணித்த முன்னவர்கள் பாராட்டுக்குறியவர்களே. தவிர, இராகுவும் கேதுவும் கிரகங்கள் இல்லை என்பது எந்த சோதிடரும் கூறுவார். அவை சாயா கிரகங்கள் என அழைக்கப் படும். சந்திரன், சூரியன் மற்றும் பூமியின் அச்சில் அமைந்திருக்கும். இரண்டும் எப்போதும் 180 பாகையில் எதிரெதிரில் அயனப்பாதையில் வரும். இவற்றைக் கொண்டே கிரகணங்களை துல்லியமாக சொல்ல முடிகிறது.
இதுதான் அறிவியலுக்கும் பொய்-அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு. பொய்யறிவியல் (Pseudoscience) மூடநம்பிக்கைக்கு மாத்திரமே துணைபோகிறது
This is a very naive view.Any historian of science or philosopher of science will tell you that such views were fashionable once.How do
you define science and pseudoscience. If you consider astrology as
pseudoscience it should mean that predictions of astrologers should
always fail. But in reality this does not happen.They are true sometimes
and not true sometimes.
அன்புள்ள் dont ask
பொய் அறிவியல் என்பது என்ன? இது அறிவியலைப் போலத் தோற்றமளிப்பது ஆனால் நம்பிக்கையின்பாற்பட்டது. இது “கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது” என்ற விஷயம்தான். அறிவியல் முறையில் பொய்ப்பித்தல் (falsifiablity) என்பது மிகவும் முக்கியமான விஷயம். அது பொய்யறிவியலில் செல்லுபடியாகது, அதை அவர்கள் அத்தியாவசியமான விடயமாகக் கொள்வதுமில்லை.
நீங்கள் சொல்வதைப் போல “எப்பொழுதாவது ஒரு முறை” நிகழ்வதெல்லாம் அறிவியல் கிடையாது. அப்படியான ஒரு ஆரூடத்திற்குக் கிரகங்களும் தேவதைகளும் தேவையில்லை. மானாவாரியாகச் சொல்லும் விஷயங்களிலேயே ஒரளவுக்கு நிகழ்ந்துவிடக்கூடும் நிகழ்தகவு உண்டு என்பதை நாம் அறிவோம்.
மறுபுறத்தில் அறிவியல் என்பது திரமான வழிமுறைகளாலும் கோட்பாடுகளாலும் கட்டியெழுப்பப்படுவது. எனவே “ஒவ்வொருமுறையும்” அறிவியல் ரீதியாக சொல்லப்படுபவை தீர்மானமான உண்மைகள்தான். (அன்றளவிலான நம் புரிதலின் அடிப்படையில்).
மணியன் - உண்மைதான் மூடநம்பிக்கைகள் நம் கலாச்சாரத்திற்கு மாத்திரமான பொதுச் சொத்துக்கள் அல்ல. உலகெங்கும் வியாபித்திருப்பது உண்மைதான். நானால் நம் உள்ளங்கைக் கரியை நாம்தானே கழுவிக் கொள்ள வேண்டும்.
ஜோதிடம் ஒரு நம்பிக்கையாக முழு வளர்ச்சியடைந்திருந்த காலத்தில்
நம் பார்வை உள்நோக்கியதாக நமது வாழ்க்கை பற்றியதாகவே இருந்ததால் அது புவியை மையமாகக் கொண்டிருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் ஜோதிடத்தை ஆழமாக அறிந்திருப்பவர்கள் அது சூரியனை மையமாகக் கொண்டதுதான் என்பதை நன்கறிவார்கள். இன்று அதன் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது. நம் பார்வை வெளிநோக்கி வெகுதூரம் சென்று விட்டது. முறைகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது என்பதற்காக அதை முற்றிலும் மறுத்தால் வாழ்க்கை பற்றிய நன் மதிப்பீடுகள் மிகவும் குறைந்துள்ள இந்தக் காலத்தில் அணுவாயுத யுத்தம் ஒன்று ஏற்பட்டு நம் சந்ததியே இல்லாமால் போகும்போது விஞ்ஞான அறிவைக் கொண்டு என்ன செய்துவிட முடியும்?
//ராகு, கேதுக்கள் (இவர்களெல்லாம் யார்?)//
அண்மையில் எங்கள் ஊர் புதுக் கோவில் விழாவில் சாப்பாட்டிற்கு நீண்ட வரிசையில் நின்றிருந்த போது, பகவத்கீதை விற்றுக் கொண்டிருந்த ஹரே கிருஷ்ணா கும்பல் இளைஞனிடம் பேச்சுக் கொடுத்தேன். “பிரபுலபாதா, அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போகவில்லை என்று சொன்னதாகப் படித்திருக்கிறேன், உண்மைதானா?” என்று கேட்டேன். அவன் “ஆம், சொல்லியிருக்கிறார். அமெரிக்கர்கள் போனது ராகு கிரகத்திற்குத்தான்.”, என்றான்.
கூகுளில் தேடினால், அவர்கள் “மனிதன் சந்திரனுக்கு போகவில்லை” என்று வைக்கும் வாதம் காணக் கிடைக்கிறது (http://science.krishna.org/Articles/2000/08/00082.html). ஆனால் ராகுவைப் பற்றிய குறிப்புகள் என் ஊனக் கண்களுக்குத் தெரியவில்லை.

“The scientific theory I like best is that the rings of Saturn are composed entirely of lost airline luggage.”
Mark Russell