• பேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு

    by  • March 26, 2007 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    srinivasa_varadhan.jpg

    இன்றைக்கு அலுவலகத்துக்கு வந்தவுடன் என் சீன நண்பன் சொல்லித் தெரியவந்த விஷயம் இது. நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீநிவாஸ வரதனுக்கு இந்த ஆண்டின் ஏபெல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. நோபெல் பரிசுகள் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் உடற்கூறியல், பொருளியல் மற்றும் சமாதானம் என்ற ஐந்து துறைகளிலும் வழங்கப்படுகின்றன. இதில் கணிதம் கிடையாது; இந்தக் குறையைப் போக்க 2001 ஆம் ஆண்டு நார்வே நாட்டின் அறிவியல் கழகம் புகழ்பெற்ற நார்வீஜிய கணிதவியலாளர் ஹெந்ரிக் ஏபெல் (Henrik Abel) நினைவாக வருடாந்திர கணிதப் பரிசை அறிமுகப்படுத்தியது. இது அறிவியல் கழகத்தின் பரிந்துரையின்படி நார்வே மன்னரால் வழங்கப்படுகிறது. இதன் பரிசுத் தொகை நோபெல் பரிசுகளுக்குச் சமமானது. இதை கணிதத்திற்காகன நொபெல் பரிசாகக் கொள்ளலாம் (இருந்தபொழுதும் கணிதத் துறையில் இதைவிட ஃபீல்ட்ஸ் பதக்கத்திற்கே அதிக மதிப்பு இருக்கிறது.)

    பேரா. ஸ்ரீநிவாஸ வரதன் இந்த ஆண்டிற்கான ஏபெல் பரிசைப் பெற்றிருக்கிறார். நிகழ்தகவு (Probability) குறித்த அவரது ஆராய்ச்சிகளுக்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. குவாண்டம் இயற்பியல் உள்ளிட்ட பல துறைகளில் நிகழ்தகவு கணிதம் முக்கிய பங்காற்றுகிறது. வரதனின் பங்களிப்புகள் உயிர்த்தொகை இயங்கியல் (Population Dynamics), குவாண்டம் இயங்கியல் (Quantum Dynamics) தொடங்கி சாலைப் போக்குவரத்து (Traffic Engineering) குறித்த புரிதலுக்கும் பயன்படுகிறது என்று பரிசு குறித்த விளக்கம் தெரிவிக்கிறது.

    வரதன் சென்னையில் பிறந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் இளமறிவியல் பட்டம் பெற்றவர். தொடர்ந்து கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1963 ஆம் ஆண்டு தொடக்கம் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கௌராண்ட் கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் அமெரிக்கக் கணிதவியல் கழகத்தின் பெரும்பரிசையும் பெற்றவர்.

    ஏபெல் பரிசுக் கழகம் பேரா. வரதனின் வரலாற்றுக் குறிப்பைப் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியிட்டிருக்கிறது. தமிழ்க் குறிப்பை அவசியம் படிக்கப் பரிந்துரைக்கிறேன். அதிலிருந்து ஒரு சுவாரசியமான பகுதி,

    முனைவர் படிப்பில் இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் இந்திய புள்ளியியல் மேதை திரு சி.ஆர். ராவ் (C.R. Rao). முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை நேர்காணலின்போது இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ததாகக் கூறப்படுகிறது: விளக்க விவாதத்தின்போது அறையில் வரதன் அறியாத மற்றொரு நபரும் இருந்தார். அவர் வரதனைத் துளைத்தெடுக்கும் பல கேள்விகளைக் கேட்டார். தேர்வு முடிந்த பிறகுதான் அந்த நபர் ரஷ்யாவின் கணித மேதையும், சாத்தியக்கூற்றியல் நிபுணருமான ஏ.என். கோல்மொகொரோவ் (A.N. Kolmogorov) என்று வரதனுக்குத் தெரிந்தது. கோல்மொகொரோவ் இந்தியா வருவதை முன்னரே அறிந்திருந்த பேராசிரியர் ராவ், தன் சிறந்த மாணாக்கரின் திறமையை அவருக்குக் காட்டுவதற்காக திட்டமிட்டே அவ்வாறு ஏற்பாடு செய்திருக்கிறார். கோல்மொகொரோவின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

    3 Responses to பேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு

    1. March 26, 2007 at 12:53 pm

      பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்! செய்தி தந்த உங்களுக்கு நன்றி.

    2. anaany
      March 27, 2007 at 2:36 am

      பார்பனர்களுக்கு அவர்களாக தந்துகொண்ட பரிசு.
      எங்கே கோட்டா, லோட்டா எல்லாம்?.
      இப்படி பின்னூட்டங்கள் வரும்.

    3. anaany
      March 27, 2007 at 2:43 am

      ஒரு நல்ல தகவலை தந்தீர்கள், நன்றி.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *