• பெண்ணழகு – கான் பெரும்பரிசு விளம்பரம்

    by  • June 26, 2007 • கனடா, விளம்பரம் • 3 Comments

    YouTube Preview Image
    வருடாந்திர கான் (Cannes) திரைப்பட விருந்துகள் விழா திரையுலகில் உலக அளவில் முக்கியமான ஒன்று. திரைப்படங்களுடன்கூட விளம்பரங்களுக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டின் அதிமுக்கிய விளம்பர விருது (க்ரான் ஃப்ரீ) டொராண்டோ நகரில் உருவாக்கப்பட்ட Evolution என்ற ஒரு நிமிடப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இது விளம்பர உலகில் ஒரு மைல்கல்.

    யுனிலீவர் நிறுவனத்தின் டோவ் தயாரிப்புக்காக உருவாக்கப்பட்ட இந்த விளம்பரம், ஒருவகையில் பொதுநலச் சேவை விளம்பரமும்கூட. பெண்ணழகு குறித்த பிம்பங்கள் எப்படி உருவாக்கப்பட்டு நுகர்வோர் மனதில் விதைக்கப்படுகின்றன என்பதை ஒரு நிமிடத்திற்குள் அழகாகத் தெளிவுபடுத்துகிறது. விளம்பரத்தைத் தயாரித்தவர்கள் டொராண்டாவைச் சேர்ந்த ஓகில்வி & மாத்தெர்(Ogilvy & Mather) நிறுவனம். ஒரு சராசரி பெண்ணிற்கு எப்படி அலங்காரங்கள் செய்யப்பட்டு அவருடைய முகத் தோற்றம் எடுப்பாக்கப்படுகிறது என்பதைக் காட்டுவதோடு, ஃபோட்டோஷாப் உதவிகொண்டு கழுத்தை நீட்டிப்பது, புருவங்களை உயர்த்துவது, கன்னத்தைச் செதுக்குவது போன்ற சித்துவேலைகளால் உண்மைத் தோற்றத்திலிருந்து முற்றிலும் வேறான பிம்பம் எப்படிக் கட்டியெழுப்படுகிறது என்பதை சுவையாகக் காட்டுகிறது. Time lapse என்ற விரைநேர உத்தி சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சராசாரி பயனர் விளம்பரத்தட்டியிலிருக்கும் வடிவத்தைப் பார்த்துச் சிலிர்த்துப் போகையில் உண்மையான பெண் எப்படியிருந்திருப்பாள் என்ற சிந்தனை எழுவதில்லை.

    விளம்பர உலகில் மைல்கல் என்று சொல்வதற்கு முக்கிய காரணம் உண்டு. விளம்பரங்கள் பொதுவாக சஞ்சிகையில் அச்சிட, தொலைக்காட்சிக்கென, விளம்பரத் தட்டிக்கென பல வகையில் எடுக்கப்படும். மாதாந்திர சஞ்சிகைக்கு ஒரு மாதிரியான விளம்பரம் பயன்படும் என்றால் சில நிமிடங்களே படித்துவிட்டு (பார்த்துவிட்டு) வீசியெறியப்படும் நாளிழதளுக்கு முற்றிலும் வேறான விளம்பரம் தேவையாக இருக்கிறது. இந்த வழமையான ஊடகங்களை விடுத்து இவ்விளம்பரம் முதலில் யூட்யூப் வழியே வெளியிடப்பட்டது. எந்தவிதமான கூடுதல் செலவும் இல்லாமல் நேயர்கள் ஒருவருக்கொருவர் பரப்பியே இந்த விளம்பரத்தைப் பிரபலமாக்கினார்கள். இந்த முறை இப்பொழுது வைரஸ் விளம்பரம் என்று அழைக்கப்படுகிறது டோவ்-வின் பரிணாம் இப்படியான வைரஸ் விளம்பரம். கான் திரைப்பட விழாவில் வைரஸ் விளம்பரங்களுக்கென புதிய விருது ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது; அதைப் பெற்ற இவ்விளம்பரம் அடுத்தநாள் அனைத்து ஊடகங்களுக்கும் பொதுவான விளம்ப்ர க்ரான் ஃப்ரீ விருதையும் பெற்றிருக்கிறது. இது யூ ட்யூப் போன்ற புது ஊடகங்களின் தாக்கத்தைக் காட்டுகிறது.

    3 Responses to பெண்ணழகு – கான் பெரும்பரிசு விளம்பரம்

    1. பாலாஜி-பாரி
      June 26, 2007 at 2:50 pm

      கலக்கல்!! :)

    2. வெங்கட்
      June 26, 2007 at 2:53 pm

      பாலாஜி – யப்பா! எத்தனை நாளாச்சு. எப்படியிருக்கீங்க?

    3. kavya
      September 19, 2007 at 10:53 am

      venkat
      simply super paa

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *