• கணினியும் இசையும்

    by  • April 14, 2007 • அறிவிப்புகள், இசை, கணினியும்-இசையும் • 12 Comments

    புதிதாக ஒரு தொடர் எழுத உத்தேசம். என்னிடம் பல நாட்களாகப் பலர் இதைப் பற்றி எழுதச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சோம்பேறித்தனத்தால் துவங்கவில்லை. இன்றைய சுபயோக சுபதினத்தில் இதை ஆரம்பித்துவிடலாம் என்று உத்தேசம்.

    நம்மூரில் பலரிடமும் நிறைய ஒலிநாடாக்கள் குவிந்து கிடக்கின்றன. குறுவட்டும், எம்பி3-ம் வந்த பிறகு பலரும் இவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் தூக்கியெறிய மனமில்லாமல் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் இவற்றை எம்பி3 ஆக மாற்றிக் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது. ஒலிநாடாக்களைப் பயன்படுத்தாமல் வைத்துகொண்டிருந்தால் அவற்றில் பூஞ்சைகாளான்கள் பிடிக்கச் சாத்தியமிருக்கிறது. (குறிப்பாக ஈரப்பதமும் வெப்பமும் அதிகமுள்ள நம்மூரில்). ஏன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாடக்களே கொஞ்சம் நாட்களில் வீணாகிவிடும். இதிலிருக்கும் காந்தத் துகள்கள் பலமுறை இசைத்தால் கலைந்துப்போய் பாடலின் தரம் குறைந்துவிடும். ஒலிநாடாக சிக்குண்டு இழுபட்டு பயனற்றுப் போவதும் உண்டு. எனவே, இவற்றை விரைவில் எம்பி3 ஆக மாற்றிக் கொண்டுவிடுவது உத்தமம். ஆனால் பலருக்கும் ஒலிநாடாவிலிருந்து மிகத் தரமான வடிவில் எம்பி3 ஆக மாற்றுவது எப்படியென்று தெரியவில்லை. தனிப்பட்ட நண்பர்களுக்கு (அவர்களுடைய பெற்றோர்களுக்கும்தான்) தனித்தனியாக எழுதுவதற்குப் பதிலாக இப்படிப் பொதுவில் எழுதுகிறேன்.

    இன்னும் சிலருக்குக் குறுவட்டிலிருந்து எப்படி எம்பி3 ஆக (மிக நல்ல தரத்தில்) மாற்றிக்கொள்வது என்றும் தெரியவில்லை. எனவே, இவற்றையெல்லாம் ஒரு தொடராகப் பின்வருமாறு எழுதலாம் என்று உத்தேசம். இந்தத் தொடர் மிக எளிதாக விஷயத்திலிருந்து சிக்கலான விஷயங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும்.

    1. குறுவட்டிலிருந்து எம்பி3க்கு மாற்றுவது? (CD to MP3 conversion)
    2. ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு எப்படி மாற்றுவது? தொடர்ந்து இதை எப்படி எம்பி3 ஆக மாற்றலாம்? (ஒலிநாடா என்ற பொழுதும் பழைய LP, Spool போன்றவையும் இவற்றில் அடங்கும்.) (Tape to MP3 conversion)
    3. பழைய பாடல்களை எம்பி3 ஆக மாற்றும்பொழுது அவற்றின் ஒலித்தரத்தை எப்படி மேம்படுத்தலாம்? அவற்றிலிருக்கும் இரைச்சல்களைக் குறைப்பது எப்படி? (Noise reduction in MP3 Files)
    4. எம்.பி3 கோப்புகளில் பாடல்களைப் பற்றிய மேலதிக தகவல்களைச் சேர்ப்பது எப்படி? (Tagging MP3 files)
    5. ஆல்பங்களின் மேலட்டைகளை எப்படிப் பெறுவது? (Adding Album Art to MP3)
    6. நிறைய பாடல்கள் இருந்தால் கணினியில் எப்படி ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பது? (Maintaining a music library)
    7. இசைத் தொடர்பான மேலதிக கணினிப் பயன்பாடுகள் (Other Audio Tools)