கணினியும் இசையும் – 1 : குறுவட்டிலிருந்து MP3 மாற்றுதல்
by வெங்கட் • April 15, 2007 • இசை, கணினியும்-இசையும் • 6 Comments
இதற்கு நாம் பயன்படுத்தப் போவது நிரலி CDex. இதைத் தெரிந்தெடுக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமான சில;
- இது முற்றிலும் இலவசமான, GPL உரிமம் கொண்ட தளையறு மென்கலன்.
- நானறிந்தவரையில் இதனுடைய குறுவிரி (குறுக்கும் விரிக்கும் நிரலி, COmpression-DECompression) மிகத் திறமையானது. திறமூலம் என்பதால் இது நன்றாகச் சோதிக்கப்பட்டு முன்னேற்றப்பட்டுள்ளது.
- இது எம்பி3க்கு மாற்றும்பொழுது குறுவட்டில் இருக்கும் கீறல்கள், அழுக்குகள் போன்றவற்றால் வரும் இரைச்சல்களைப் பெருமளவிற்குக் கட்டுப்படுத்துகிறது. அப்படி முடியாத பொழுது அதைப்பற்றிய விபரங்களை வெளிப்படையாக அறியத்தருகிறது.
- இசைத்தட்டில் ஒரு பாடல் அதிக சப்தத்திலும், மற்றது குறைந்த சப்தத்திலும் இருந்தால் இது பாடல்களுக்கு இடையிலிருக்கும் ஒலியளவு ஏற்றத்தாழ்வுகளைத் தானாகச் சரிசெய்கிறது. எனவே காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு (ஐபாட், வாக்மேன்) கேட்கும்பொழுது திடீரென இரைச்சல் வந்து காதைக் கெடுக்காது.
- இதை குறுவட்டிலிருந்து மட்டுமல்லாது வேறு குறுவிரிகளில் (உதாரணமாக Wave, WMA போன்றவற்றுக்கும் மாற்ற உதவும்.) எனவே எம்பி3 வடிவில் இருக்கும் கோப்புகளை உங்கள் சிடி இயக்கிகளில் ஓட்ட ஏற்ற இசைத்தட்டாக (Audio CD) இதைக் கொண்டு எதிர்மாற்றம் செய்ய முடியும்.
- இதை உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை. இதை ஒரு அடைவில் சும்மா விரித்து வைத்தால் போதும். கணினியில் நிறுவாமல் இயங்கும் நிரலிகளால் எந்தத் தொல்லையும் இல்லை.
- இதன் மூலம் எம்பி3 ஆக மாற்றும் பொழுது பாடலுக்கான விபரங்களையும் அவற்றுடன் இணையம் வழியே பெற்று சேமிக்க முடியும்.
தேவையானவை :
கணினி (சொல்லத் தேவையில்லை), எம்பி3 வடிவில் மாற்ற வேண்டிய குறுவட்டு
நிரலியைப் பெறும் முறை:
இந்த இலவச நிரலியை CDex தளத்திலிருந்து இறக்கி கொள்ள முடியும். என்னுடைய தெரிவு யுனிகோட் வசதி கொண்ட zip கோப்பு. இதை இறக்கி ஒரு அடைவில் விரித்துக் கொள்ளவும். அங்கிருந்து CDex.exe என்ற குறும்படத்தில் சொடுக்குவதன் மூலம் இதைத் திறக்கலாம்.
செய்முறை:
{செய்விளக்கப் படங்களின் குறும்படத்தில் சொடுக்கினால் பெரிய வடிவில் காணமுடியும். ஒரு படத்தின் வலது மையத்தில் சுட்டினால் அடுத்த படத்தைத் திறக்க முடியும், இடது மையத்தில் சொடுக்க முந்தைய படம் திறக்கும். முடிந்தவுடன் வலது கீழ் மூலையில் சொடுக்கி மீண்டும் இந்தப் பதிவுக்குத் திரும்ப முடியும்}
திறந்த உடன் உங்கள் கணினியில் படம்-1 வடிவில் இருக்கும். இதனுடைய Options பகுதிக்குச் சென்று விருப்பங்களை மாற்றிக் கொள்ள முடியும் . ஆனால் இப்போதைக்கு இதில் துவக்கத்தில் இருக்கும் அமைப்புகளை மாற்றத் தேவையில்; இவை பெரும்பாலான கணினிகளில் திறம்படச் செயல்படுகின்றன. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை இதில் இட்டால் இணையம் வழியே பாடல்கள் குறித்த மேலதிகத் தகவல்களையும் நேரடியாகப் பெறமுடியும். இது பற்றி விரிவாகப் பின்னர் பார்க்கலாம்.
Options திரையில் இருக்கும்பொழுதே அதில் இரண்டாவது பட்டியான Filename என்பதைத் தெரிவு செய்யவும். இதில் மாற்றப்படும் எம்பி3 கோப்பை எங்கே சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடவும் (படம் 2). ஒவ்வொரு புதிய குறுவட்டிற்கும் அந்த் இடத்தில் ஒரு புதிய அடைவை உருவாக்கி ஆல்பங்களைத் தானாகத் தனித்தனியே சேமிக்கும். இதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள் முதன் முறை இதனை இயக்கும்பொழுது மட்டுமே. பின்னர் இந்தத் தெரிவுகள் இவற்றில் நிரந்தரமாகச் சேமிக்கப்படுவதால் அடுத்தமுறை இவற்றைச் செய்யத் தேவையில்லை.
நீங்கள் மாற்ற வேண்டிய இசைத்தட்டை கணினியில் பூட்டவும். CDex உங்கள் இசைத்தட்டைப் படித்து எத்தனை பாடல்கள் இருக்கின்றன என்று காட்டும். (படம் 3). இப்பொழுது Options தெரிவு செய்யவும். இதில் Read From Remote CCDB என்பதைத் தெரிவு செய்யவும் (படம் 4). பாடலைப் பற்றிய தகவல்கள் இணையத்திலிருந்து படிக்கப்பட்டு உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் எம்பி3 ஆக மாற்றும்பொழுது இந்த விஷயங்களும் உங்கள் கோப்புகளில் பதிவு செய்யப்படும். (படம் 5).
பெரும்பாலான இசைத்தட்டுக்களில் அது என்ன ஆல்பம், இசைக்கலைஞர்கள் யார், பாடலில் நேரம் எவ்வளவு, உள்ளிட்ட பல மேல்தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். திருட்டுத்தனமாக நகலெடுக்கப்பட்ட இசைத்தட்டுகளில் இதுவும் சேமிக்கப்பட்டிருக்க உத்தரவாதம் கிடையாது. அதேபோல ஒலிநாடக்களிலிருந்து இசைத்தட்டாக மாற்றப்பட்டிருந்தாலும் இந்த விஷயங்கள் கிடைக்காது. மேலதிகமாக, இந்தியாவிலிருந்து வரும் தமிழ்த்திரையிசை, கர்நாடாக இசை உள்ளிட்ட பெரும்பாலான இசைத்தட்டுக்களில் நிறுவனங்கள் இந்தத் தரவுகளை உள்ளிடுவது கிடையாது, எனவே பல நேரங்களில் இது உங்களுக்கு உதவப் போவதில்லை. (ஏன் இந்த விஷயங்கள் எம்பி3 கோப்புகளில் வேண்டும், அவற்றை எப்படிச் சேர்க்கலாம் என்பது குறித்த பாடம் இந்தத் தொடரில் பின்னர் வரும்).
மாற்ற வேண்டிய பாடல்களை விசையெலி கொண்டு தெரிவு செய்யவும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களைத் தெரிவு செய்ய Shift பொத்தானை அமுக்கிக் கொண்டு விசையெலியால் சேர்க்கலாம்.
இனி, வலதுபக்கம் இருக்கும் பட்டியில் இரண்டாவதாக இருக்கும் குறும்படத்தின்மீது விசையெலியைக் கொண்டு சென்றால், அதில் Extract CD track(s) to Compressed Audio File(s) என்று வரும். அதைத் தெரிவு செய்யவும். உடனடியாக உங்களுக்குத் தேவையான பாடல்கள் எம்பி3 ஆக மாற்றப்படும்.
மிகச் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு இசைத்தட்டை எம்பி3 ஆக மாற்ற இந்த நடைமுறைகளை மாத்திரம் செய்தால் போதும்,
- இசைத்தட்டை உள்ளிடவும்.
- (தேவையென்றால் Remote CD DataBase க்குச் சென்று பாடல்கள் பற்றிய மேல் விபரங்களைப் பெறவும்.)
- மாற்றத்தேவையான பாடல்களை விசையெலி கொண்டு தெரிவு செய்யவும்.
- வலதுபட்டியில் இரண்டாவதாக இருக்கும் குறும்படத்தில் சொடுக்க, பாடல்கள் விரைவாக எம்பி3 ஆக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.
இனி அடுத்ததாக ஒலிநாடாவிலிருந்து எப்படி எம்பி3 க்கு மாற்றுவது என்று பார்க்கலாம்.
வெங்கட்,
அருமையான உபயோகமான தொடர்.
>>>
{செய்விளக்கப் படங்களின் குறும்படத்தில் சொடுக்கினால் பெரிய வடிவில் காணமுடியும். ஒரு படத்தின் வலது மையத்தில் சுட்டினால் அடுத்த படத்தைத் திறக்க முடியும், இடது மையத்தில் சொடுக்க முந்தைய படம் திறக்கும். முடிந்தவுடன் வலது கீழ் மூலையில் சொடுக்கி மீண்டும் இந்தப் பதிவுக்குத் திரும்ப முடியும்}
—–
இதுவும் நல்லா இருக்கு. ஆனால் பயர்பாக்ஸ் இல் மையப்பொத்தானை அமுக்கி அடுத்த டாப்-இல் திறக்கும் போது ‘பிட் மாப்’ தான் வருகிறது. ஒரு குறிப்புக்காகத்தான். எதையும் மாற்றவேண்டாம்.
அருள்
நல்லா இருக்கு.
எல்லா பாடல்களையும் இசையின் அளவை ஒழுங்கு படுத்துவது சிடி எழுதும் மென்பொருளுடன் கூடவே வருகிறதல்லவா?
கொஞ்சம் முன்னாடி ஓடவா…
DVD வட்டில் MP3 (ஆடியோ)பண்ணமுடியுமா?டேடா டிஸ்காக எழுத வேண்டுமா?
நான் வேறு மாதிரி செய்தேன்.. வேண்டாம் நீங்கள் சொல்லுங்கள்.
அருள் – ஃபயர்ஃபாக்ஸில் புது டாபில் திறக்கச் சொல்லும்பொழுது அது படத்தை மட்டுமே திறக்கும், அதுதான் அமைப்பு. இந்த Ajax Script பக்கத்துக்குள் இருந்துதான் வேலை செய்யும். அடைசல் இல்லாமலும், படிக்க இடைஞல் இல்லாமலும் படம் காட்ட இதுதான் சிறந்த வழியாகத் தோன்றுகிறது.
குமார் – எல்லா சி.டி எழுதும் மென்கலனும் இசையின் அளவைச் சீர்படுத்தாது. அதிகம் காசுகொடுத்து வாங்கும் சில் மற்றுமே இதைச் செய்யும்.
உங்கள் இரண்டாவது கேள்வி புரியவில்லை. டீவீடி தட்டில் ஆடியோ சிடி செய்ய முடியுமா என்று கேட்கிறீர்களா?
அருள்,
அது bitmap வகை அல்ல. Jpeg image – அளவு குறைக்கப்பட்டது. இந்தப்படமே பிட்மேப்பாக இருந்தால் சுமார் பத்து மடங்கு பெரிதாக இருக்கும். உங்கள் உலாவியில் அது இறங்கித் தெரிவதற்குள் இரெண்டு அடைகளை சாப்பிட்டுவிடலாம். (நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். ஹிஹி!)
வடுவூர் குமார்,
அது நீங்கள் பாவிக்கும் டிவிடி எழுதுகருவியைப் பொறுத்தது. நீரோவில் எம்.பி3-டிவிடி-யாக நேரடியாக எழுதமுடியும். ஆடியோ சிடியைக்கூட எம்பி3-யாக மாற்றி எழுதிவிடும்.
ஆனால் டேட்டா டிஸ்காகவும் எம்பி3 கோப்புகளை டிவிடியில் எழுதலாம். ஒன்றும் வித்தியாசமில்லை. நான் என் கர்நாடக இசை எம்.பி3 பாடல்களை டிவிடிக்க்களில் அப்படியே காப்பி செய்து வைத்துள்ளேன்.
வெங்கட்,
நீங்கள் Lightbox javascript-ஐ நேரடியாக செயல்படுத்துகிறீர்களா? நான் என் பதிவுத்தளத்தில் அந்த செயல்பாட்டுக்காக ஒரு wordpress உட்செலுத்தி (plugin) இட்டுள்ளேன். அதனை என் சமீபத்திய தமிழ்ப்பதிவில் காணலாம்.
அன்புடன்
எஸ்.கே
Pingback: கணினியும் இசையும் « கதம்ப மாலை