அறிவியல் கோட்பாட்டின் வளர்நிலைகள்
by வெங்கட் • March 21, 2007 • அறிவியல்/நுட்பம் • 2 Comments
ஒரு முழுமையான அறிவியல் கோட்பாடு எப்படி உருவாகிறது என்பது குறித்த அருமையான விளக்கம் இங்கே கிடைக்கிறது. அவசியம் படிக்கும்படி எல்லோருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்தக் கட்டுரையின் சாரத்தைத்தான் என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்தின் முதல் கட்டுரையான ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’-வில் நானும் கையாண்டிருக்கிறேன்.
டைஹோ ப்ராஹே காலத்தில் உலகத்தின் மையம் பூமி என்று கருதப்பட்டது (தாலமியின் புவிமையக் கருதுகோள்). ப்ராஹே இதைத் துல்லியமாக வரையறுக்கப் பொறுமையாக கோள்களின் நாளாந்த இடத்தையும் அவற்றின் பாதைகளையும் தொலைநோக்கி கொண்டு அளவிட்டு குறிப்புகளைக் குவித்து வைத்தார். அறிவியல் மொழியில் சொன்னால் ப்ராஹே ஒரு அற்புதமான நோக்கர் (Observer).
குவிந்த தரவுகளைக் கொண்டு ஒரு நல்ல கோட்பாட்டை உருவாக்குவது அவருக்கு வாய்க்கப்பெறவில்லை. அவருடைய மாணவரான கெப்ளர் இந்தத் தரவுகளை ஆராய்ந்து அவற்றைக் கொண்டு கோள்களின் இயக்கம் குறித்த மூன்று விதிகளை வரையறுத்தார். இவரை ஒரு நல்ல நிகழ்வாய்வாளர் (Phenomenologist) என்று சொல்லலாம். இவர் கோள்களின் இயக்கம் குறித்த திறமான வரையறைகளைத் தந்த பொழுதும் அவருடைய விதிகள் கோட்பாடுகளல்ல. அதாவது கோள்களின் இருப்பிடம் அவற்றின் பாதை, வேகம் இவற்றைக் கணக்கிட முடிந்தாலும் அவற்றுக்கான இயற்பியல் ரீதியான விளக்கங்கள் கிடையாது.
இவரைத் தொடர்ந்துவந்த நியூட்டன் இதை ஒரு திறமான கோட்பாடாக நீட்டித்தார். இரண்டு கோள்களுக்கு இடையேயான தூரமும் அவற்றின் பாதையும் அவற்றுக்கு இடையேயான ஈர்ப்பு விசையால் தீர்மானிக்கப்படுகிறது. அறிவியல் வரையறைகளுக்கு உட்பட்டு வருவிக்கப்படும் இந்த ஈர்ப்பு விசை கோள்களுக்கு இடையேயான ஊடாட்டை மாத்திரமல்லாது மரத்திலிருந்து கீழே விழும் பழத்தின் ஈர்ப்பையும் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது. அந்த வகையில் நியூட்டன் ஒரு முதல்தர கோட்பாட்டாளர் (Theorist).
அற்புதமான இந்தத் தொடர் அறிவியலின் வளர்நிலைகளை அழகாக விளக்குகிறது. நோக்கர்-நிகழ்வாய்வாளர்-கோட்பாட்டாளர் (Observer-Phenomenologist-Theorist) இவர்களின் பங்கு அறிவியலில் மிகவும் இன்றியமையாதது. பேராசிரியர் ராப் நாப் இதைத் தெளிவாக விளக்குகிறார்.
வெகுநாட்களுக்கு முன்பே (பள்ளிநாட்களோடு) அறிவியல் நூல்களை வாசிப்பதிலிருந்த முனைப்பு குறைந்துபோனதென்றாலும் வலையுலகில் உங்களைப் போன்றவர்கள் எழுதும் அறிவியல்சார்ந்த ஆழமான விடயங்களைப் படிக்கும் ஆர்வம் உண்டு.
சுடர் படித்தேன். வலையுலக எழுத்துக்கள் பற்றிய அவதானிப்புகள் முற்றிலும் சரி. வெற்றிடத்தை வெற்றிடமாகவே விட்டுவிடாமல் நீங்கள், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இன்னபிற நண்பர்கள் எல்லாம் தொடர்ந்தெழுதாவிடினும் அவ்வப்போதாவது எழுதி நிரப்பக்கடவது:))
நன்றி, செல்வநாயகி.