• ஃப்ரிஸ்பீ-க்கு ஐம்பது வயது

    by  • June 18, 2007 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    frisbee.jpg நேற்றுடன் ஃப்ரிஸ்பீ (Frisbee) தட்டுக்கு ஐம்பது வயதாகிறது. Wham-O Inc என்ற நிறுவனத்தால் ப்ளூட்டோ ப்ளாட்டர் என்று அழைக்கப்பட்ட விளையாடுத்தட்டிற்கு ஃப்ரிஸ்பீ என்று பெயரிடப்பட்டு அரை நூறாண்டு ஆகிவிட்டது. இன்னும் இது மிகப் பிரபலமான விளையாட்டு சாதனமாக இருந்து வருகிறது. எனக்கு ஃப்ரிஸ்பீ தட்டுகளின்மீது தனியாத ஆர்வமுண்டு. முகாம்களுக்குச் செல்கையிலும் நண்பர்களுடன் கேளிக்கைகளிலும் ஃப்ரிஸ்பீ விளையாடத் தயங்கியதேயில்லை. இன்றைக்கும் என்னுடைய காரில் ஒரு ஃபிரிஸ்பீயாவது எப்பொழுதும் இருக்கும். சென்ற வருடம் ஒரு மாபெரும் ஆட்டோமொபைல் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். GM, Ford, Mercedes-Benz, Audi, Mazda என்று பல கடைகளில் இலவச ப்ரிஸ்பீக்களைக் கொடுத்தார்கள் (ஏன் எல்லோரும் ஃப்ரிஸ்பீ கொடுத்தார்கள் என்று தெரியாது). வெட்கமில்லாமல் எல்லா கடைகளிலும் ஒன்று வாங்கிவந்தேன். வீட்டில் இப்பொழுது கால்வைக்கும் இடமெல்லாம் இடறுகின்றன.

    ப்ரிஸ்பீ பறத்தல் மிக அற்புதமாக இருக்கும். சற்றே மிதமான காற்று இருக்கும் நாட்களில் காற்றின் போக்கைப் பயன்படுத்தி தட்டை எறிந்தால் அதன் நீண்ட நேர வளைபாதைப் பயணம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பழகமுள்ளவர்களால் காற்றில் நீண்ட நேரம் தட்டை மிதக்கவைக்க முடியும். இது எப்படிச் சாத்தியமாகிறது?

    வீசியெறியப்படும் எல்லா பொருள்களையும் போலவே ஃபிரிஸ்பீயின் மீது புவியீர்ப்பு விசை (Gravitational Force) செயல்படுகிறது. மறுபுறத்தில் ஃபிரிஸ்யை எறியும் பொழுது துவக்க திசைவேகம் (Initial Velocity), கோண உந்தம் (Angular Momentum) போன்றவை புவியீர்ப்பு விசைக்கு எதிர்த்திசையில் செயல்பட அதற்கு மிதப்பதும் நீண்ட நேரப் பயணமும் சாத்தியமாகின்றன. மிதப்பையும் (lift) கோண உந்தத்தையும் அதிகரிக்கும் வகையில் ஃப்ரிஸ்பீயின் மேற்பரப்பில் பல வளைய வடிவங்களால் உருவாக்கப்பட்டிருக்கும். தட்டின் மேல்பரப்பில் நகரும் காற்றின் திசைவேகம் அடிப்பரப்பின் திசைவேகத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தட்டால் மேலெழும்பிச் செல்லமுடியும். கூட கோண உந்தம் சுழலும் தட்டின் சுழல்வேகம் குறைவதைத் தொடர்ச்சியாக எதிர்த்துக் கொண்டிருக்கும் (உந்தமாறாக் கோட்பாடு). எழும்பு விசையும், கோண உந்தமும் தொடர்ந்து ஃப்ரிஸ்பீயை மிதக்க/பறக்கச் செய்கையில், புவியீர்ப்பு விசை தட்டைத் தரை நோக்கி இழுக்கவும், காற்றின் உரசலில் ஏற்படும் உராய்வு விசை (Frictional force) தட்டின் சுழற்சி வேகத்தைக் குறைக்கவும் செய்யும். புவியீர்ப்பும், உராய்வும் வெற்றிபெறும்பொழுது ஃபிரிஸ்பீ தரையில் விழும்.

    ஃபிரிஸ்பீயை வைத்துக் கொண்டு பல அடிப்படை இயற்பியல் கருத்துக்களை விளக்க முடியும். இந்தக் கேள்விகளுக்கு பதில்களை முயற்சித்துப் பாருங்களேன்:

    1. ப்ரிஸ்பீயை நெட்டுகுத்தாக வைத்துக் கொண்டு நேரே மேலே செலுத்தினால் என்னவாகும்?
    2. நன்றாகப் பறக்கவைக்க ப்ரிஸ்பீயை எப்படிச் செலுத்த வேண்டும்?
    3. ஃப்ரிஸ்பீயைப் போலவே இன்னொரு விளையாட்டிலும் (மிகப் பிரபலமானது) புறப்பரப்பில் காற்றின் பங்கு உண்டு. இது என்ன விளையாட்டு? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் உண்டு).

    * * *

    உன்னத இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃப்யென்மான் தனக்கு குவாண்டம் மின்னியக்கியல் (Quantum Electrodynamics) துறையில் நோபெல் பரிசு கிடைக்க ஃப்ரிஸ்பீ பறத்தல் குறித்து தனக்கு எழுந்த கேள்விகளும் அதன் மூலம் உருவான புரிதலும் ஒரு காரணம் என்று சொல்லியிருக்கிறார்.

    7 Responses to ஃப்ரிஸ்பீ-க்கு ஐம்பது வயது

    1. பொன்ஸ்
      June 19, 2007 at 1:11 am

      1. அதே நேர்ச் செங்குத்துப் பாதையில் பயணித்து திரும்பிவிடும். கீழிருந்து சுண்டிவிடும் வேகத்துக்கு ஏற்றாற்போல் உயரம் போகும்.
      2. கையைக் கொஞ்சம் பின்னோக்கி எடுத்து வந்து அப்புறம் செலுத்த வேண்டும். அதிக உயரமும் இல்லாமல், அதிகம் தாழவும் தாழ்த்தாமல் தோள்பட்டை உயரத்தில் செலுத்துபவர்களின் ஃபிரிஸ்பீக்கள் வெகு தூரம் பறப்பதைப் பார்த்திருக்கிறேன். (நான் வீசி ஒரு முறை கூட அப்படிப் பறந்ததில்லை ;) )
      3. இது என்னங்க? கிரிக்கெட்டா? ;)

    2. June 21, 2007 at 2:11 pm

      1) Will try and let you know, the physics involved in this.
      2) I usually try 45 degrees angle.
      3) Soccer, cricket, football and baseball. Not sure about Tennis.

    3. வெங்கட்
      June 22, 2007 at 1:19 pm

      பொன்ஸ், ராஜேஷ் – மௌனத்திற்கு மன்னிக்கவும்.

      நிறைய பேர் ஆர்வம் கொண்டு இக்கேள்விகளை முயற்சிப்பார்கள் என்று காத்திருந்தேன், கூடவே இதை எழுதியதிலிருந்து வேலைப்பளு வேறு.

      1. ராஜேஷ் முயற்சிப்பதற்காகக் காத்திருக்கலாம்.
      2. 30-40 பாகை கோணம்தான் சரியானது. பொன்ஸ் சொன்னதுபோல அதிக உயரமும் தாழ்வும் இல்லாமல் செலுத்துவது சிறந்தது. துல்லியமாகச் சொல்லப்போனால் இடுப்பளவிலிருந்து தோள் அளவிற்குள்ளான உயரம் சரியானது.
      3. உதைபந்தில் பெக்ஹமின் புகழ்பெற்ற வளை ஃப்ரீ கிக்கில் இப்படி பந்தின் மேற்பரப்பிலும் அடிப்பரப்பிலும் பாயும் காற்றின் ஓட்டத்தால்தான் பந்து வளைகிறது.
      கிரிக்கெட் – அதி வேகப் பந்துவீச்சாளரின் Swinging in the air, அதேபோல Baseball இவற்றிலும் இதே இயற்பியல் அடிப்படையில்தான் காற்றில் திசைமாறும் பந்துகள் சாத்தியமாகின்றன.

      பொன்ஸ், ராஜேஷ், மீண்டும் – ஆர்வத்துக்கு நன்றி! (பக்கத்துல இருந்தீங்கன்னா ஒரு ஃப்ரிஸ்பீ பரிசா கொடுத்துருப்பேன் :) )

    4. June 22, 2007 at 1:40 pm

      Living (almost) close to you in Boston :) . When you visit here, do not forget a frisbee :)

    5. பொன்ஸ்
      July 2, 2007 at 8:12 am

      வெங்கட், முதல் கேள்விக்கான விடை?
      அப்பப்ப இது போல் கேள்வி கேளுங்க.. படிச்சதெல்லாம் நினைவிருக்கான்னு பார்த்துக்க உதவியா இருக்கு ;)

    6. July 6, 2007 at 12:43 pm

      1980-களில் நம்மூரில் பிரபலமான ஃப்ரிஸ்பீ காலங்களை நினைவுபடுத்திவிட்டீர்கள். எங்கள் காலனியில் சாயங்காலமானால் சிறியவர் பெரியவர் என்று எல்லோரும் பங்கேற்ற விளையாட்டு இது!

      45 பாகைக்கும் அதிகமாக ( > 45 டிகிரி) செலுத்தினால் பூமராங்/boomerang போல நம்மிடமே திரும்பி வரும் சிலசமயம்.

      3வது கேள்விக்கு, “பட்டம்”னு பதில் சொல்லத் தயாராயிருந்தேன்.. ஹிஹி.

    7. July 6, 2007 at 5:18 pm

      http://jayabarathan.wordpress.com/ [எனது வலைப்பூ]

      அன்புள்ள நண்பர் வெங்கட்,

      நலமா ? உங்கள் வலைப்பூவைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

      உங்கள் வலைப்பூவில் எனது வலைப்பூவுக்கு இணைப்பு அளித்திடுங்கள்.

      அன்புடன்,
      சி. ஜெயபாரதன்,

      கின்கார்டின்
      அண்டாரியோ, கனடா

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *