vista_screenshot.jpg
{Click on the image to enlarge}

செந்தில்குமார் புச்சா லாப்டாப் வாங்கப்போறாராம். (கொடுத்துவச்சவரு). அதுல விஸ்டா இருந்தே ஆகனுமா? விஸ்டா புதுசு, கொஞ்சம் நாள் கழிச்சு அதுக்கு மாறிக்கலாமா? இப்படி அவருக்கு ஏகப்பட்ட விஸ்டேகங்கள்.

இதுக்குப் பதில் சொல்ல நான் சரியானா ஆளா இல்லியான்னு தெரியல. நான் தீவிர லினகஸ்வாதி-ங்கறது எல்லாருக்கும் தெரியும் (ஒரு காலத்துல லினக்ஸ் தீவிரவாதியாக்கூட இருந்தவன், இப்ப வேலை, பொண்டாட்டி புள்ளன்னு ஆனப்புறம் கொஞ்சம் அடங்கியிருக்கேன்). நான் மைக்ரோஸாஃப்ட் பத்தி என்ன சொன்னாலும் சந்தேகத்தோடத்தான் பாப்பாங்க (இது அந்த பாப்பா இல்லீங்கோ). அப்புடித்தான் பாக்கனும்னு நானே சொல்லிக்கிறேன்.
* * *

மைக்ரோஸாஃப்ட் ரெண்டு வாரத்துக்கு முன்னால விண்டோஸ் விஸ்டா-ன்னு ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (இதுக்குத் தமிழ்ல இயக்குதளம்னு பேரு) அறிமுகப்படுத்தியது. இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மைக்ரோஸாஃப்ட் வெளியிடும் புதிய இ.த. மைக்ரோஸாஃப்ட் வரலாறைப் பார்த்தா;

* Windows 3.0 – 1990
* Windows 3.1 – 1992 (Windows for Work Groups)
* Windows 95 -1995
* Windows 98 -1998
* Windows ME – 2000
* Windows XP – 2001

(இந்த வெளயாட்டுக்கு Windows NT, Windows 2000 எல்லாம் சேத்துக்கல. அதெல்லாம் ஆபீசுகாரங்களுக்கு. வூட்ல பிரயோசனப்பட்றதுக்குன்னு அவிங்க வுட்டது மேல இருக்கற அஞ்சும்தான்). இப்புடி ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா புதுசா இ.த விக்கறது மைக்ரோஸாஃப்ட் பழக்கம். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ புதுசா ஒன்ன வாங்கவைக்கறது அவுங்களோட வெயாபாரத் தந்திரம். இந்ததடவ அந்தமாரி செய்ய முடியல. (அப்புடித்தான் திட்டம் போட்டாங்க, ஆனா விஸ்டா தயாராகறத்துல நெறைய லேட்டாயிடிச்சி). அதெல்லாம் பத்தி நமக்குக் கவலை இல்லை. நம்ம கேள்வி, அது நமக்கு சரிப்படுமா, இப்பவே வாங்கியாவனுமா இல்ல இன்னும் கொஞ்சம்நாள் கழிச்சு வாங்கலாமா? ( இல்ல வாங்காமயே இருக்கலாமா-ன்னும் ஒரு கேள்வி உண்டு).

மொதல்ல இந்த விஸ்டா-வுல புதுசா என்ன இருக்குங்கறதப் பாக்கலாம்? கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னால கொஞ்ச நாளைக்கு மைக்ரோஸாஃப்ட் விஸ்டா-வை இலவசமா சோதனைக்குன்னு கொடுத்தாங்க. ஒருக்காலத்துல எங்க ஆபிஸ்-ல ஒரு கைப்பிடியளவுக்கு மைக்ரோஸாஃப்ட் ஆபீஸ் பொதிக்கு லைஸன்ஸ எம்பேருல வாங்கியிருந்ததால எனக்கு மைக்ரோஸாஃப்ட்லேந்து இதை சோதிச்சுப்பாக்க ஒரு கடுதாசி வந்தது. ஏதோ, பில் கேட்ஸே கேக்குறாறே-ன்னு சரின்னு சொன்னேன். (இன்னாபா, கொஞ்சம் உட்டா நம்மகிட்டய டகிள் வுட்றியே-ங்கிறியா, சும்மா தெரியாமயா வாத்தியார் சொன்னாரு “ப்ளாக் எல்லாம் படிக்காதே, அதெல்லாம் ஈகோ ட்ரிப்புன்னு”). அப்ப ஒரு ஐஞ்சாறுதடவ அத ஓட்டிப்பாத்தேன். அதுக்கப்புறமா இன்னிக்குத்தான் என்னோட ஒரு பொட்டில போட்டுருக்கேன். இன்னும் முழுக்க நோண்டியாகல.

விஸ்டா-ல ரொம்பப் பெருசா எல்லாரும் சொல்றது அதோட புது 3-டி ஏரோ விண்டோ அமைப்புதான். பில் கேட்ஸ் அண்ணாத்தே இதத்தான் எல்லா எடத்துலயும் “Wow Factor” அப்படீன்னு மார்தட்டியிருக்கார். இப்ப விண்டோஸ்-ல எல்லாம் பரப்பிவச்சாமாதிரி ஒவ்வோரு விண்டோவையும் பக்கதுல பக்கத்துலதான் வைக்க முடியும். (அதுனால ரெண்டு இல்லாட்டி மூனு விண்டோவைத் தொறந்தா மேசை ரொம்பிடும்). ஏரோ-ல ஒன்னுமேல ஒன்னா அடுக்கி வைக்கலாம். அப்புறம் தெறந்து மூட்றப்ப சும்மா பொசுக்குன்னு கீழ இருக்கற பட்டில போய் ஒக்காந்துக்காம டீல்வுட்டு வால் அறுந்த பட்டம் காத்துல ஆடுமே அதமாதிரி கொஞ்ச நேரம் ஃபிலீம் காட்டிட்டுத்தான் மறைஞ்சு போகும். இப்புடி ‘வாவ் ஃபாக்டர்’ நெறையவே இருக்கு.

பிலீம் காட்ற சமாச்சாரத்துக்கு அடுத்தபடியா மைக்ரோஸாப்ட் ரொம்ப பீத்திக்கிறது அதோட பாதுகாப்பு தீவிரமாயிருக்குன்னுதான். விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பாக் -2 போட்டவங்களுக்கு அதுல Security Centre -ன்னு ஒன்னு இருக்கறது தெரிஞ்சிருக்கும். அதுல (தீயரண்), வைரஸ் ஒழிப்பு சமாச்சாரம், விண்டோஸ் அப்டேட்டிங்க் (இற்றைப்படுத்தல்) இந்த மூனும் சேந்தத்துதான் செக்யூரிட்டி செண்டர். விஸ்டா-ல இந்த மூனையும் இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்காங்க. சொல்லப்போனா வைரஸ் ஒழிப்பு சமாச்சாரம் எக்ஸ்பி செக்யூரிட்டி செண்டர்ல கெடையாது. உங்க பெட்டில அது (நார்ட்டன் ஆண்டி வைரஸ், மெக்காஃபி) இருக்கா இல்லயான்னுதான் சொல்லும். விஸ்டாவுலயும் அதேதான். இப்ப மைக்ரோஸாஃப்ட் LiveOne அப்படீன்னு ஒரு வைரஸ் ஒழிப்பு பொதியை விக்குது. இந்த செக்யூரிட்டி செண்டர் அது இல்லைன்னா கத்தும். அதாவது பாதுகாப்பு இல்லைன்னா அதுவா பாதுகாப்பு தராது, ஆனா இல்லைங்கறத உங்களுக்குச் சத்தம்போட்டுச் சொல்லும். இன்னும் கொஞ்சம் காசு கொடுத்து லைவ் ஒன் வாங்குன்னு விளம்பரிக்கும்.

தீயரண்-ல கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. முன்ன இருந்ததவுட நெறய விஷயத்தைச் சரியா, தனித்தனியா, கட்டுப்படுத்த முடியும். முக்கியமான விஷயம் விஸ்டா உங்கள அடிக்கடி பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) தரச்சொல்லி படுத்தும். உதாரணமாக நீங்க மொதலாளி (Admin) ஆக உள்ளே போயிருந்தாலும் புச்சா எதுனாச்சும் ஸாஃப்ட்வேர் சேர்க்கனும்னா அப்பப்ப க.சொ சொல்லிக்கிட்டே இருக்கனும். இது கொஞ்சம் பாதுகாப்பை அதிகரிக்கும். நெறைய கெட்ட சமாச்சாரம் (malware) எல்லாம் அட்மின் வேலைல இருக்கும்போதுதான் காரியத்தைச் செய்யும். (அதுக்கு எல்லா பவரும் வேணும்). ஆனா எதாவது முக்கியமா செய்யனும்னா பாஸ்வேர்டை திரும்ப அடிக்கனும்னு இருந்திச்சின்னா கெட்டசமாச்சாரத்துக்கு ஒன்னும் செல்லுபடியாவாதுதான. (இது எத்தனை நாளைக்கு ஒழுங்கா வேலைசெய்யும்னு தெரியல. கெ.ச கமுக்கமா குந்திகினு இருந்து நீங்க பாஸ்வேர்ட் அடிக்கறச்ச அதைப் படிச்சு வச்சுகிட்டு அப்பால அதைவச்சுகிட்டு தான் வேலையைக் காட்டறது சாத்தியம்தான்). இந்தமாரி அடிக்கடி பாஸ்வேர்ட் கேக்கறது லினக்ஸ்/யுனிக்ஸ் ஒலகத்துல ரொம்பநாளா இருக்கற பாதுகாப்பு. (sudo command). ஒன்னும் புச்சு இல்ல. இருந்தாலும் சுருக்கமா சொல்லனும்னா, விஸ்டா-ல கொஞ்சம் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்க. ஆனா, இதுல ஒன்னும் அப்படிப் புதுசா எதுவும் இருக்கிற மாதிரி தெரியல.

ரொம்ப நீளமா போய்ட்டதால, கொஞ்சம் ப்ரேக் உட்டு அப்புறம் எளுதுறேன்.

(இதே ரீதில போன நான் இந்த நீளத்துக்கு இன்னும் மூனு நாளு நாளுக்கு எளுதுவேன்னு தோணுது. இப்படி நீட்டி முழக்கி வெலாவரியா எளுதனுமா, பத்துவரிகளுக்கு மிகாமல் பதிலிறுக்கவுமான்னு சொல்லிப்புடுங்க, அடுத்த தபா எளுதறச்சே பெரயோசனமா இருக்கும்).