என்னுடைய வலைப்பதிவுகளின் அமைப்பில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறேன். இது குறித்த உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாயிருக்கிறேன்.

முதலாவதாக பழைய Pentium II 233 MHz, Fedora Core 2 Linux -ல் இயங்கிக் கொண்டிருந்த என் வழங்கியிலிருந்து புதிய ( இதுவும் பழைய பெட்டிதான்). இந்த புதிய பெட்டி Pentium 4, 1.3 GHz, Ubuntu Linux-ல் இயங்குகிறது. இதுவும் என் இல்லத்திலிருந்துதான் இயக்கப்படுகிறது.

சிதறிக்கிடந்த என்னுடைய தமிழ் வலைப்பதிவு இடுகைகளை புதிய வேர்ட்பிரஸ் 2.1 ல் தொகுத்திருக்கிறேன். BlogCMS பொதியை முற்றாக ஒதுக்கி வேர்ட்பிரஸ்க்கு மாறியிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட 650 இடுகைகள், 3,500 கருத்துக்கள், பின் தொடர்தல்களை ஒருவழியாக ஒருங்கிணைத்திருக்கிறேன். என்னுடைய பழைய இடுகைகள் அனைத்தையும் தேடல் பெட்டியிலிருந்து அடையமுடியும். பழைய இடுகைகளின் படங்களையும் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன். பழைய இசைப்பதிவுகளின் பாடல் கோப்புகளை இன்னும் ஒழுங்குபடுத்தவில்லை. வருகின்ற சிலநாட்களில் அதையும் செய்வேன். அதைச் செய்தவுடன் இசைப்பதிவுகளைத் தொடர உத்தேசம். (பிரகாஷ்! நீங்க சொன்னது காதுல விழுந்திருச்சு)

BlogCMS-ல் இருந்து WordPress பொதிக்கு எப்படி மாற்றினேன் என்பதைப்பற்றி விரிவாக என் ஆங்கிலப்பதிவில் எழுதியிருக்கிறேன். இப்பொழுது ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாகப் பதியத் தொடங்கியிருக்கிறேன். என் ஆங்கில இடுகைகளில் புதியனவற்றை இந்தப் பதிவின் வலது பத்தியில் காணலாம். இதேபோல Google Reader வழியாக நான் படிக்கும் செய்திகள், கட்டுரைகள் குறித்த பகிர்வையும் இங்கே தருகிறேன். இதிலிருப்பவை உங்களில் யாருக்கேனும் சுவாரசியமாக இருந்தால் தெரிவிக்கவும். (இதைத் தொடர்ந்து வெளியிடுவதா இல்லை நீக்குவதா என்று முடிவெடுக்க உதவும்).

பல நாட்களாக யோசித்துக்கொண்டிருந்த என் Photoblog ஐயும் தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படங்களை Flickr தளத்தில் சேர்க்கிறேன். பிறகு Flickr -லிருந்து நேரடியாக என் வலைப்பதிவில் அவற்றை இணைக்கிறேன். இப்படிச் செய்வதால் என்னுடைய வழங்கியில் அதிகம் படங்களைச் சேமிக்கத் தேவையில்லை. மேலும் படங்கள் Flickr -லிருந்தே நேரடியாகப் பரிமாறப்படுவதால் என்னுடைய அகலப்பாட்டை இணைப்பும் அதிகம் பயன்படுத்தபடாது.

Flickr -ல் நான் புதிதாகச் சேர்த்த படங்களின் செய்தியோடையும் இந்தப் பக்கத்தில் இருக்கிறது. இந்தப் பக்க அமைப்பிற்குப் பெரிதும் வெள்ளையில் இருக்கும் ஆடையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இது படிக்க எளிதாக் இருக்கிறதா என்று சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். (முந்தைய பதிவில் கவி-யும், கிருபாவும் சொன்ன இடது மார்ஜின் அதிகரிப்புக் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுகிறேன்).

இந்தத் Flickr, WordPress, Photoblog, DynDNS தொழில்நுட்பங்களைப் பற்றிய தகவல்கள் யாருக்காவது தேவைப்பட்டால் எழுதவும். என்னாலான உதவியைத் தருகிறேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

My English Blog

My Photoblog

My Google Reader Shares