pasupathy.jpg
தமிழ் இலக்கியம், இசை கருத்தாடல் குழுக்களில் பங்கேற்பவர்களுக்குப் பேரா. பசுபதியைத் தெரிந்திருக்கும், குறிப்பாக செவ்வியல் இலக்கியக் குழுக்களில். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்னால் எங்களில் பலர் செவ்வியல் இலக்கியங்கள், தமிழ் இலக்கணம் போன்றவற்றைக் குறித்து நிறைய கருத்தாடல்களில் ஈடுபட்டிடுக்கிறோம். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு உருவான பெரும் இடைவெளிக்குப் பிறகு தமிழ் இலக்கணம் குறித்த பல சந்தேகங்களை பசுபதி தீர்த்து வைத்திருக்கிறார்.

ஆனால் பசுபதி தமிழ்ப் பேராசிரியர் கிடையாது. அவர் தகவல் நுட்பத் துறையில் விற்பன்னர். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் மற்றும் கணிபொறியியல் துறையில் 1973 முதல் பேராசிரியராக இருப்பவர். நேற்று மே 11, 2007 -ல் அவரது பணி ஓய்வை முன்னிட்டு டொராண்டோ IEEE மற்றும் அவருடைய துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாள் முழுவதும் அவரது சேவையைப் பாராட்டும் விதமாக “பேராசிரியர் பசுபதி பங்களிப்புகள் குறித்த பட்டறை” ஒன்றை நடத்தினார்கள்.

பேரா. பசுபதி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (தற்பொழுதைய அண்ணா பல்கலைக் கழகம்) BE பட்டமும், சென்னை ஐஐடியில் M.Tech பட்டமும் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் M.Phil, Ph.D ஆய்வுப் பட்டங்களைப் பெற்றார். அதன்பின் கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு வந்த பசுபதி, கடந்த 34 வருடங்களாக டொ.பல்கலைக்கழகத்தில் அரும்பணி ஆற்றியிருக்கிறார். மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட அர்பணிப்பு மிக்க ஆராய்ச்சிக் காலத்தில் அவர் தகவல் நுட்பத்துறை ஜாம்பவான்களான க்ளாட் ஷாணன், ஹாரி நைக்வ்ஸ்ட் போன்றவர்களின் ஆராய்சிகளை நேரடியாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். உதாரணமாக தன் மாணவருடன் இணைந்து அவர் கண்டுபிடித்த 36 பரிமாண ஒழுங்கில் அடர்த்தியாக தகவல் பொதிக்கும் முறைக்கு Kschischang-Pasupathy Lattice or KP36 Lattice என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் பசுபதி தகவல் நுட்ப உலகின் முன்னணி ஆராய்சி சஞ்சிகைள் பலவற்றில் ஆராய்சிக் கட்டுரைகளின் தரத்தை உறுதிசெய்யும் மதிப்பீட்டாளராக பல வருடங்கள் தொடர்ந்து பங்களித்திருக்கிறார். மேலும் IEEE Transactions on Communications, IEEE Communications Magazine போன்றவற்றில் இணை ஆசிரியராகவும் பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். அடர்த்தியான ஆராய்சிக்கட்டுரைகளுக்கு இடையே கணிதம், இயற்பியல், தகவல் நுட்பம், செவ்வியல் இலக்கியம், மர்மநாவல்கள், இசை போன்றவற்றின் அற்புதக் கலவையாக Light Traffic என்ற தொடரைக் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் IEEE Communications Magazine என்ற சஞ்சிகையில் அளித்து வந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்.

{பேரா. பசுபதியைக் குறித்த அறிமுகம் எனக்கு ஏற்பட்டது இந்த Light Traffic தொடர் மூலமாகத்தான். ஐஐஎஸ்ஸியில் படித்த காலத்தில் அருள் செல்வன் உட்பட எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இந்தத் தொடரின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறோம். பின்னர் முற்சொன்ன செவ்வியல் இலக்கிய ஆர்வலர்கள் குழுவில் மடலாடல் பரிமாற்றங்களுக்கிடையே ஒருமுறை சந்தேகத்தின் பேரில் அந்த பசுபதி நீங்கள்தான் என்று நான் கேட்க எங்களுக்கிடையேயான நெருக்கம் இன்னும் அதிகரித்தது}

எல்லாவற்றையும் விட அவருடைய அதியற்புத சேவையும் பங்களிப்பும் அவருடைய மாணவர்களுக்கானது. வெள்ளிக்கிழமை விழாவில் இதை மிகத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. உலகின் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும், தகவல் நுட்ப நிறுவனங்களில் ஆராய்சியாளர்களாகவும் இருக்கும் பலர் அன்று ஒன்றுகூடி பசுபதியின் சேவைகளைப் பாராட்டும் விழா எடுத்தார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் பசுபதியில் தொடங்கி இப்பொழுது தாங்கள் தகவல் நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பரிமாறிக்கொண்டார்கள். பேசிய ஒவ்வொருவரின் இன்றைய ஆய்வுக்கும் ஆணிவேராக பசுபதியிடம் அவர்கள் பயின்றவையே சொல்லப்பட்டன. ஆராய்சி மாணவர்களைத் தவிர இளமறிவியல் முது அறிவியல் மாணவர்களைப் பயிற்றுவித்தலிலும் அவருடைய பெயர் வட அமெரிக்காவின் பல முன்னணி பல்கலைக்கழகங்களிலும் பிரபலமானது.

* * *
பணி ஓய்வு பெறும் பேரா. பசுபதி முறையான எதிர்கால திட்டங்கள் எதுவுமில்லை என்று வழமையான அமைதியுடன் புன்னகைத்துக்கொண்டே என்னிடம் மழுப்பிவிட்டார். ஆனால் எனக்கென்னமோ பசுபதியின் இரண்டாவது இன்னிங்கஸ் முதல் இன்னிங்கஸைப் போலவே சிறப்பாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கணிதம், தகவல் துறை போன்ற குறுகிய வரையறைகளுக்குள்ளே நிதானமாக ஆடிய பசுபதி, இப்பொழுது தமிழ், செவ்வியல் இசை, தமிழிசை, தொல்லியல், ஓவியம் (ஆமாம் பசுபதி ஒரு நல்ல ஓவியரும்கூட), என்று பரந்துபட்ட களங்களில் இரண்டாவது இன்னிங்க்ஸில் அடித்தாட வேண்டும் என்பது என் ஆசை.

எல்லாவற்றுக்கும் மேலாக Light Traffic தொடர் கட்டுரைகளைப் போல பலதுறைகளையும் உள்ளடக்கிய விஷயகனம் நிறைந்த அற்புதமான புத்தகம் ஒன்றை பசுபதி எழுத வேண்டும் என்பது என் ஆசை. இனி என்னுடைய வேலை இது குறித்து பசுபதியை நச்சரித்துக்கொண்டே இருப்பதுதான். தமிழில் இதுபோன்ற சுயசிந்தனையில் பல்துறை ஒருக்கம் குறித்து எழுதக்கூடிய தகுதியுள்ளவர்கள் மிகச் சிலரே.

பணி ஓய்வு பெறும் பசுபதிக்கு அவர் மனம் விரும்பிய ஓய்வுக்காலம் கிடைக்க வாழ்த்துக்கள்.