யுனெஸ்கோ – லோ’ரெல் பரிசு – பலருக்கும் இப்படி ஒரு பரிசு இருப்பதே தெரியாது. அறிவியலில் பெண்களின் பங்கை ஊக்குவிக்க அழகு சாதன நிறுவனமான லோ’ரெல் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து வருடந்தோறும் ஐந்து பரிசுகளை வழங்குகிறது. வழக்கமாக பல அறிவியல் பரிசுகள் பெண்களுக்குக் கிடைப்பதேயில்லை. இதுவரை 516 அறிவியல் நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டிருகின்றன. இவற்றுள் 12 மாத்திரமே பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் 7 மருத்துவ நோபெல் பரிசுகளையும், 3 வேதியியல் பரிசுகளையும் 2 இயற்பியல் பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள். (இதில் மேரி க்யூரி இரண்டுமுறை – இயற்பியலில் ஒருமுறையும் வேதியியலில் ஒருமுறையும் பரிசு பெற்றிருக்கிறார். அவருடைய மகள் ஐரீன் ஜோலியோ-க்யூரியும் வேதியியலுக்காக ஒருமுறை பரிசு பெற்றிருக்கிறார். ப்ரெஞ்சு தேசிய அறிவியல் கழகத்தின் உச்சப்பரிசான தங்கப்பதக்கம் இதுவரை 45 கொடுக்கப்படிருக்கின்றன. இவற்றுள் இருவர் மாத்திரமே பெண்கள். சமூகத்தில் சம இடத்தை வகிப்பதாகக் கருதப்படும் பிரான்ஸிலேயே இந்த நிலை என்றால் வளர்ந்துவரும் நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையேயில்லை.
loreal_science.jpgபல நிறுவனங்கள் இப்பொழுது பெண்களை அறிவியலில் ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். நான் வேலை செய்யும் டொராண்டோ பல்கலையில் இதற்கென விசேட அமைப்பு இருக்கிறது. சில பேராசிரியர்கள் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக ஒரு மாணவியையாவது பயிற்றுவிக்கிறேன் என்று உறுதியெடுத்துக் கொண்டு அதைத் திறம்படச் செய்துவருகிறார்கள். இன்னும் சில பேராசிரியர்கள் பெண்களுக்கு அறிவுரையாளராக (Mentor) தங்கள் நேரத்தை அளிக்கிறார்கள் (பாடங்களை விடுத்து நடைமுறை விடயங்களிலும் இந்தப் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவார்கள்). பத்து வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்தத் திட்டம் நல்ல பலனளிக்கிறது.

மிகத் திறமையான பெண் அறிவியலாளர்களை ஊக்குவிக்கவென லோ’ரெல் நிறுவனம் ஆண்டுதோறும் ஐந்து பரிசுகளை வழங்குகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கண்டத்திலிருந்து தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தலா $100,000 பரிசளிக்கப்படுகிறது. இவர்களில் பலர் இந்தப் பரிசுத் தொகையை மீண்டும் தங்கள் ஆராய்ச்சியிலும் பிற கல்வித் திட்டங்களை ஆதரிக்கவும் செலவழிக்கிறார்கள்.

இந்த வருடம் இந்தப் பரிசு பின்வரும் ஐந்து முதல்தர அறிவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

  1. பேரா. அமீனா குரீப்-ஃபகீம், மௌரீஷியஸ் – கரிம வேதியியல், தாவரவேதியியல் (Organic Chemistry, Phytochemistry). மௌரிஷியஸ் நாட்டின் தாவரங்களின் மருத்துவப்பண்புகளை வகைப்படுத்தியது மற்றும் ஆராய்ந்தது குறித்து.
  2. பேரா. மார்கரெட் பிரிம்பிள், நியூஸிலாந்து – மருத்துவ வேதியியல் மற்றும் கனிம வினையாக்கங்கள் (Medical Chemistry and Organic Synthesis). சிக்கலான இயற்கை வேதிப்பொருட்களின் வினையாக்கங்கள், குறிப்பாக கடினஓடு மீன் விஷத்தை செயற்கையில் உற்பத்தியாக்கியதற்கு.
  3. பேரா. தத்தியானா பிர்ஷ்டெய்ன், ரஷ்யா – பல்பதிய இயற்பியல் (Polymer Physics). மாபெரும் மூலக்கூறுகளின் வடிவம், அளவு மற்றும் இயக்கங்கள் குறித்த புரிதலை வழங்கியதற்காக.
  4. பேரா. லீஜியா கார்கல்லோ, சிலி – பெருமமூலக்கூறு வேதியியல் (Macromolecular Chemistry). கரைசல்களில் பல்பதியங்களின் பண்புகள் குறித்த புரிதலை வழங்கியதற்காக
  5. பேரா. மில்ட்ரெட் ட்ரெஸ்ஸெல்ஹாஸ், அமெரிக்கா – நானோநுட்பம் (Nanotechnology). திடவேதியியல் ஆராய்ச்சி, குறிப்பாக கார்பன் நானோகுழாய்களில் சாத்தியத்தை வரையறுத்தமைக்கு

இந்தப் பெரும்பரிசைத் தவிர லோ’ரெல் நிறுவனம் பெண்களுக்கு அறிவியல் பயில, ஆராய்ச்சிக்கென பல மானியங்களை வழங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் தொழுநோய் குறித்த ஆய்வுக்காக லோ’ரெல் பரிசு பெற்ற இந்திரா நாத் இந்தியாவிலிருந்து இந்தப் பரிசைப் பெற்ற ஒரே பெண் அறிவியலாளர்.