தொடர்பான விக்கிப்பசங்க கட்டுரையை முதலில் படிக்கவும்.

இந்த புளூட்டோ சமாச்சாரத்தில் அறிவியல் செயல்படும் விதம் இன்னொருமுறை தீர்மானமாக வெளிப்பட்டிருக்கிறது. இங்கே எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடமில்லாமல் கோள் என்றால் என்ன என்பதை தீர்க்கமாக மறுவரையறை செய்து புளூட்டோவை வெளியில் தள்ளிவிட்டார்கள். மறுபுறத்தில் அறிவியல் அடிபப்டை கொண்டது என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கும் ராகு, கேதுக்கள் (இவர்களெல்லாம் யார்?) சூரியன், சந்திரன் இவையெல்லாவற்றையும் வெள்ளி, புதன், வியாழன், சனி கூடச் சேர்த்து நாம் இன்னும் நவக்கிரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

அன்றைய அறிவியல் புரிதலின்படி பூமியை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றுகின்றன என்ற கருதுகோளின் அடிப்படையில் சூரியன், சந்திரன், எல்லாவற்றையும் உள்ளே சேர்த்து நம்மூரில் நவக்கிரகங்களை வரையறுத்தார்கள். அற்புதமான விஷயம். தொடர்ந்து இவற்றின் பாதைகளைக் கண்டாராய்ந்து (எப்படி என்று தெரியாது) கோள்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணக்கிடவும் செய்தார்கள் (பஞ்சாங்கம்) – அதியற்புதம். விண்ணிலிருக்கும் கோள்கள் மனிதனின் மீது நுண்மாற்றங்களை (Celestial perturbations) விளைவிக்கிறது என்று தீர்க்கமில்லாத அறிவியல் கருதுகோள் உருவானது.

அவ்வளவுதான், அறிவியலை நம்மூரில் மதம் கடத்திக் கொண்டுபோய்விட்டது. நுண்மாற்றங்களைக் கொண்டு ஜாதகங்கள் எழுதப்பட்டன. நுண்மாற்றங்கள் இருக்கிறாதா இல்லையா என்பதே தெளிவில்லாத விஷயம் (இன்றைய அறிவியலில் இதைக் கணக்கிடுவது சாத்தியமற்ற செயல் என்பது தீர்மானமான உண்மை). ஆனால் இந்த ஒற்றை (அரை)அறிவியல் விஷயத்தைப் பிடித்துக்கொண்டு ஜோதிடம் என்ற சாத்தான் புறப்பட்டது. வருங்காலத்தை முன்கூட்டி வரையறுப்பது என்ற ஏமாற்று வித்தை வளர்ந்தது. பரிகாரங்கள் என்ற பம்மாத்துகள் புறப்பட்டன. நவக்கிரகங்களைச் சுற்றுவது என்ற உடற்பயிற்சியில் தொடங்கி, அவற்றின் தலையில் பாலைக் கொட்டுவது என்ற மூடநம்பிக்கையில் வளர்ந்து, பசுமாட்டை பார்ப்பனனுக்குத் தானமாகப் பரிந்துரைக்கும் ஏமாற்றுவித்தையாகப் பரிணமித்து, செவ்வாய் தோஷத்தால் இயற்கைக்குச் சற்றும் ஒவ்வாத இனைசேரத் தடை வரையான பயங்கரவாதம் உள்ளிட்ட அபத்தங்கள் வளர்ந்தன. எந்தவிதக் கேள்விகளுக்கும் இடம்கொடாமல் சொல்வதை நம்புவது என்ற அறிவற்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.

தொலைநோக்கி வந்தாலும் சூரியனும் சனியும் நவக்கிரகங்களில் இடம் மாறாது. ராகு கேது சிலைகள் வேறு வடிவம் கொள்ளா. சந்திரனைக் கழித்து நெப்ட்யூனைக் கூட்டமுடியாது. எள் விளக்கு மாத்திரமே இதில் சாத்தியம், எலுமிச்சம் பழம் விற்பனையை அதிகரிக்க வேண்டுமென்றால் அதன் மூடியில்தான் விளக்கேற்ற வேண்டும் என்று எளிதாக மார்க்கெட்டிங் செய்யமுடியும்.

மாறாக அறிவியலும் புவிமையக் கோட்பாட்டில்தான் (Geocentric) தொடங்கியது, பின்னர் பரிதிமையக் கோட்பாட்டுக்கு (heliocentric) மாறியது. சந்திரன் பூமிக்கு மட்டுமல்ல அதைவிட அதிக எண்ணிக்கையில் ஜுபிட்டருக்கும், சனிக்கும் உண்டு என்று தெளிவாகியது. 1930களில் புளுட்டோவைச் சேர்த்தது, 2006-ல் புளூட்டோவைக் கழித்தது.

இதுதான் அறிவியலுக்கும் பொய்-அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு. பொய்யறிவியல் (Pseudoscience) மூடநம்பிக்கைக்கு மாத்திரமே துணைபோகிறது.