500000000000_dinars.jpg
பணவீக்கத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது கொஞ்சம் அதீதமான வீக்கம்; 16 மாத இடைவெளியில் யூகோஸ்லாவியாவின் பணம் 5 க்வாட்ரில்லியன் சதவீதம் மதிப்பிழந்தது. அதாவது அக்டோபர் 1, 1993 அன்று உங்களிடம் 5,000,000,000,000,000 யூகோஸ்லோவிய தினார் பணம் இருந்திருந்தால் ஜனவரி 24, 1995 அன்று அதன் மதிப்பு ஒரு தினார். இந்த அளவிற்கு உலகத்தில் எந்த கரண்ஸியும் மதிப்பிழந்ததில்லை. இதனால் பல அபத்தங்கள் விளைந்தன.

மார்ஷல் டிட்டோ (இவர்தான் ஜவாஹர்லால் நேருவுடன் அணிசேரா நாடுகள் அமைப்பின் துவக்கத்தில் பெரும்பங்காற்றியவர்) காலத்தில் யூகோஸ்லோவியா பணவீக்கம் துவங்கியது. இதில் எந்த விசேடமும் இல்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுக்கு 15 சதவீத பணவீக்கம் இருந்தது உண்டு. பலரும் அதனைக் கட்டுப்படுத்தினார்கள். ஆனால் யூகோஸ்லோவியாவில் தொடர்ந்து வந்த கம்யூனிஸ அரசாங்கம் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக கரண்ஸியை அச்சிடத்த் தொடங்கியது.

1990 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அரசாங்கத்தின் கருவூலம் காலியாகிவிட்டது. எனவே அது தனிமனிதர்களின் பணத்தில் கை வைக்கத் தொடங்கியது. அதாவது அரசாங்க வங்கியிலோ அஞ்சல் துறையிலோ பணம் போட்டுவைத்தவர்கள் அதை எடுக்கப் பலவிதமான தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கம்யூனிஸக் கொள்கைகளின்படி பல கடைகள் அரசால் மாத்திரமே நிர்வகிக்கப்பட்டன. இவற்றில் செயற்கையாக குறைந்த விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் போய்க்கேட்டால் எந்த சாமானும் கிடைக்காது. அதே கடைக்கு எதிரில் பொருள்கள் கள்ளச் சந்தையில் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது. (இது இந்தியாவில் எழுபதுகளிலும் எண்பதுகளின் துவக்கத்திலும் இருந்தது. சர்க்கரை ரேஷன் விலை, பொதுச்சந்தை விலை என இரு விலைகளில் விற்கப்பட்டது. இது அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களிலும் உண்டு).

பெட்ரோல் கடைகளில் பெட்ரோல் கிடைக்காது; அருகில் திருடப்பட்ட பெட்ரோல் கிடைக்கும். பலரும் கார்களைப் பயன்படுத்த முடியாமல் பஸ்களில் பயணிக்கத்துவங்கினார்கள். ஆனால் 1,200 பஸ்களை ஒட்ட வேண்டிய பெல்கிரேட் நகரில் 500 வண்டிகள் மாத்திரமே அரசால் ஒட்ட முடிந்தது. எனவே பேருந்துகளில் அதீதக் கூட்டம். கூட்டம் அதிகமானதால் நடத்துனர் உள்ளே சென்று சீட்டு கொடுக்க முடியாமல் பஸ்கள் இலவசமாகின. பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியத்தில் இருந்த அரசு இலவசமாக பேருந்துகளை ஓட்டியது அபத்தம்.

அக்டோபர் 1993ல் அரசு புதிய கரண்ஸியை அறிவித்தது. ஒரு புதிய தினார் பழைய ஒரு மில்லியன் தினார்களுக்குச் சமம் (அதாவது அரசு ஆறு சைபர்களை முழுங்கிவிட்டது). கட்டிடங்களில் மின்சாரம் கிடையாது, மருத்துவமனைகளில் மருந்து கிடையாது. பணத்திற்கு எந்தவிதமான மதிப்பும் கிடையாது என்ற நிலையில் பொருள்கள் சூறையாடப்பட்டன. ஓய்வூதியம் கொடுக்க அரசாங்கத்தில் பணம் கிடையாது. இவை தபால் நிலையங்கள் வழியாக விநியோகிக்கப்பட்டன. ஆனால் தபால் துறையிலும் பணம் கிடையாது. எனவே கிழவர்கள் வரிசையில் நிற்க அடுத்து வருபவர் கடுதாசி வாங்கக் கொடுக்கும் காசு வரிசையில் அடுத்ததாக நிற்கும் வயோதிகருக்குப் போகும். கால் கடுத்தாலும் வீட்டிற்குச் சென்று அடுத்த நாள் வருவதில் புண்ணியமில்லை; ஒரு நாளைக்கு பணவீக்கம் 100% என்ற நிலையில் கிடைக்கும் சொற்ப காசும் இன்றே கிடைத்தால்தான் நல்லது, நாளைக்கு அதன் மதிப்பு பாதியாகக் குறைந்துவிடும்.

விரைவிலேயே அரசு புதிய புதிய-தினாரை அறிமுகப்படுத்தியது. இன்னொரு ஆறு சைபர்கள் முழுங்கப்பட்டன. இதுவும் எந்த அளவிற்கும் பணவிக்கத்தை மட்டுப்படுத்தவில்லை. தொலைபேசி பில் வந்த நாளில் அது 10 டாலராக இருந்தால் அதைக் கட்ட வேண்டிய இறுதி நாள் வரை காத்திருப்பதுதான் உத்தமம், ஏனென்றால் பத்து நாட்கள் கழித்து அதன் மதிப்பு 10 செண்ட் ஆகக் குறைந்துவிடும். இப்படி தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு இழப்பு. ஒவ்வொரு இழப்பிலும் பணவிக்கம் பெருத்துக்கொண்டே போனது.

தொலைபேசி பில்களைத் தபால்காரர்தான் வசூலிப்பார். ஒரு நாள் ஒரு தபால்காரர் 780 பேரைப் பணம் கட்டத் துரத்தியும் ஒருவரும் பைசா பெயர்க்காததால் மறுநாள் சும்மா வீட்டில் உட்கார்ந்துவிட்டார் அவர். அடுத்தநாள் அந்த 780 பேருடைய பில்லையும் தன் கைக்காசு போட்டு கட்டிவிட்டார் (மொத்த மதிப்பு சில அமெரிக்க பென்னிகள்). 1994 ஆம் ஆண்டு அரசு இன்னொரு புதிய கரண்ஸியை அறிமுகப்படுத்தியது. இதன் ஒரு “சூப்பர் தினார்” 10 மில்லியன் புதிய புதிய-தினார்களுக்குச் சமம்.

இந்த அபத்தங்களின் தொடர்ச்சியாகத்தான் ஆரம்பத்தில் குறிப்ப அளவிற்கு பல ட்ரில்லியன் மடங்கு பணம் மதிப்பிழந்தது. அதே சமயத்தில் குரொவேஷியா, பாஸ்னியா, மாண்டிநெக்ரோ, ஸ்வோவேனியா என்று பல பகுதிகளாக யூகோஸ்லோவியா சிதறுண்டு போனது.