சில சமயங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சில உரையாடல்களினால் சலிப்படையும்பொழுது அதைப் பொதுவில் கொட்டித்தீர்க்க வேண்டும்போலிருக்கும். அந்த வகையில் இது எரிச்சலைடைந்து உரக்கக் கத்துவது.

எனக்கும் பல்கலைக்கழகத்திலிருக்கும் ஒரு நண்பருக்கும் சில நாட்களாக டொராண்டோ நகரின் குற்றங்களையும் குற்றவாளிகளையும் பற்றிய உரையாடல் நீண்டுகொண்டு வருகிறது. அமெரிக்காவின் சம அளவு நகர்களுடன் ஒப்பிடுகையில் டொராண்டோவில் பத்தில் ஒரு பங்குதான் குற்றங்கள் நிகழுகின்றன. (உடனே வழக்கமாக அமெரிக்காவிற்குக் கொடிபிடிக்கும் நண்பர்கள் கொடிக்கம்பைத் திருப்ப வேண்டாம், இந்த ஒப்பீடு டொராண்டோவும் வட அமெரிக்கக் கண்டத்தில் இருப்பதால்தான்).

2004ம் வருடத்தில் டொராண்டோ நடுநகரில் அதிகாலையொன்றில் ஒரு பெண்ணின் (இவரும் கறுப்பினத்தவர்தான்) கழுத்தில் துப்பாக்கிவைத்து மிரட்டி நடுநகரில் காலை 8:00 மணிமுதல் 9:00 மணிவரை நிலைகுலையச் செய்த கறுப்பர் ஒருவர் இறுதியாக காவல்துறையின் துல்லியக் குறியாளர்களால் ஒற்றைக் குண்டில் தலை சிதறடிக்கப்பட்டு நடுநகரின் மையத்தில் கொல்லப்பட்டார். இந்த வழக்கு நகரில் சில நாட்களுக்கு மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டாலும் விரைவில் மறக்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட கறுப்பர் மனநிலை சரியில்லாதவர் என்றும், அவர் கையிலிருந்த துப்பாக்கியால் சுடமுடியாதபடி அதன் குழல் மாற்றப்பட்டிருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தபோதும் காவல்துறையினருக்கு மாற்று ஏதுமில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

இதைப் பற்றிய விவாதங்கள் எங்களுக்குள்ளே முற்றிய நிலையில் என் நண்பர் பல இடங்களிலிருந்து தரவுகளைக் கொண்டு வந்து நகரில் 70% கொலை, கொள்ளை, இன்னபிற குற்றங்களில் கறுப்பர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்று நிரூபிக்க முற்படுகிறார். (இதன் நோக்கம் கறுப்பர்களை இன வகைப்பாடு (Racial Profiling) செய்வதில் தவறில்லை என்பது).

இதே அடிப்படையில் 90-95% சிசு பால்வெறியர்கள் (pedophiles) வெள்ளையர்கள் என்பதால் அவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்ல, இப்பொழுது விவாதம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.

(விவாதம் துவங்கிய புள்ளி வர்ஜீனியா பல்கலைக்கழகச் சம்பவம். அதைப் பற்றியும் அமெரிக்கா அதை எதிர்கொண்டதையும் பற்றி எழுத வேண்டும். நேரம் கிடைப்பதில்லை)