• திரை (மறைவு) ஊடக அரசியல் - இன்னும் கொஞ்சம்

  by  • May 11, 2007 • சமூகம் • 1 Comment

  ஜெகத் -திரை (மறைவு) அரசியல்

  நான் - திரை (மறைவு) ஊடக அரசியல்

  ஜெகத் - வெங்கட்டின் எதிர்வினையை முன்வைத்து

  ஜெகத் - உங்கள் பதிலுக்கு நன்றி! கொஞ்சம் பெரிதாக எழுதினால் ப்ளாகர் பெட்டி சாப்பிட்டுவிடும் என்பதால் இங்கேயே எழுதுகிறேன்.

  வீட்டில் வார இறுதிக்காக ஜெர்மனியில் இருந்து வந்திருக்கும் நண்பர், வேலைப்பளு இரண்டுக்கும் இடையில் இப்பொழுது நான் சொல்லவிரும்புவதைத் தெளிவாக எழுதமுடியும் என்று தோன்றவில்லை.

  கருணாநிதியின் தாய்மொழியைப் பற்றி சர்வநிச்சயமாக நான் எழுதியிருக்க வேண்டாம்தான். ஆனால் அது கருணாநிதியின் வாதத் திறனாலும், ரகசியங்களை மறைக்க அவருக்கிருக்கும் திறமை (அது அவருடைய உரிமையும்கூட என்று நான் நம்புகிறேன். ஆனால் அவருக்குப் பிறருடைய அந்த உரிமையில் எள்ளளவும் மதிப்பில்லை என்பதும் தெளிபு) போன்றவற்றால் பூசி மொழுகப்பட்டது என்பதை ஓரளவுக்காவது நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் (இல்லையென்றால் இங்கிருந்து துவங்கி முயற்சிக்கவும்கூட முடியும்). அது நள்ளிரவில் வேலை அசதியிலும் அரைத்தூக்கத்திலும் எழுதியது. இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருந்தால் நீங்கள் சொன்னது போல 'தெலுகராக இருந்தாலும் இருக்காலாம்' என்றுதான் நானே எழுதியிருப்பேன்.

  இந்தச் சதவீத வேற்றுமொழிக் கலப்பால்தான் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் எல்லோரும் தேவைப்பட்டபொழுது இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, என்று தேவைப்பட்ட பொழுது தோளில் போட்ட துண்டை தயக்கமில்லாமல் உதறமுடிகிறது என்று என்னிடம் ஒரு நண்பர் வாதிட்டார். சுத்தத் தமிழர்களான பாவலரேறு பெருஞ்சித்தரனார் போன்றவர்களுக்குத்தான் அவை நிலையான கொள்கை என்பது தனித்தமிழ்வாதியான அவர் நம்பிக்கை.

  (பெரியார்), அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா (இவருக்குத் தாய்மொழி தமிழ்), விஜயகாந்த், பாக்கியராஜ், வை.கோ என்று ஒரு பெரிய தமிழக அரசியல் பாரம்பரியத்திற்கே பல்வேறு சதவீதங்களில் மொழிக்கலப்பு இருக்கிறது என்பது ஓரளவுக்கு உண்மை. அதேபோல ஆத்திகம், மூடநம்பிக்கை, போன்றவற்றுக்கும் இவர்களிடம் பஞ்சம் கிடையாது. இந்த நிலையில் இதையெல்லாம் ஒரு வரையறைகளாகக் கொண்டு இந்த அலசலை நடத்த வேண்டியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் பின்னால் போனால் இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, சாதி ஒழிப்பு இவற்றுக்கெல்லாம் துவக்கமான ஜஸ்டிஸ் கட்சியில் ஏ.சி. பார்த்தசாரதி நாயுடு, கே.வி ரெட்டி, சுப்பராயலு ரெட்டி, டி.எம். நாயர் போன்றவர்களுக்கெல்லாம் வேற்றுமொழி பின்னணிதான்; இவர்கள் துவங்கியதைத்தான் தேசிய நீரோட்டத்தில் குளித்துவிட்டு வெளிவரும் காலங்களில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.... தூக்கிப் பிடிப்பார்கள்.

  * * *
  என்னுடைய நோக்கு பத்திரிக்கைகள் எப்படி முயற்சித்தாலும் உங்கள் மும்மூர்த்திகளில் வெற்றியாளர் என்று ஒருவரைத்தான் சொல்லமுடியும். ரஜினி அரசியலில் தோல்வி, விஜயகாந்த் இன்றுவரை இழுபறி. இது கிட்டத்தட்ட சோதிடத்தைப் போல மூன்று செவ்வாய் தோஷம் கேஸில் இரண்டு நீண்ட நாள் நிலைத்தாலும் ஒரு விதவையைக் காட்டி நீங்கள் செவ்வாய் தோஷத்தைக் குற்றம் சொல்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் போய் பத்திரிக்கைகள் பல்வேறு அளவில் ஆதரவு கொடுத்த நடிகர்களின் பட்டியலையும் இதன்கூடச் சேர்த்தால் this is a statistical nightmare. பத்திரிக்கைகள் தூக்கிப்பிடிப்பவர்களே இப்படித்தான் என்று நானும் வெளுத்ததெல்லாம் பால் என்று நீங்கள் சொல்வதாகச் சொல்லமுடியுமல்லவா?

  பத்தில் எட்டு தகுதி இருந்தால் அவர்களையெல்லாம் புள்ளியியல் ரீதியில் ஒரே புறாகூண்டில்தான் அடைக்க வேண்டும். அந்தவகையில்தான் நடிகர், பத்திரிக்கை ஆதரவு பெற்றவர், பக்தி சிகாமணி, உயர்சாதியைத் தூக்கிப்பிடிப்பவர், வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று நீங்கள் வரையறுத்தவற்றில் பெரிதும் பொருந்தியும் புறனடையாகப் போன ராஜேந்தர், பாக்யராஜ் போன்றவர்களைக் காட்டினேன். வெள்ளையாக இருக்கிறது, மாட்டின் காம்பிலிருந்து கறக்கப்பட்டது, உறையவைத்தால் வெண்ணையாவது, உருக்கினால் நெய்யாகிறதா என்றெல்லாமும் பார்த்தேன் :)

  ஒருபுறத்தில் நீங்கள் காரணிகளாகக் காட்டியிருக்கும் எல்லா தகுதிகளும் பெற்றிருந்தாலும் வெற்றிபெறாத ரஜினி, விஜயகாந்தை ஊடகங்களின் வெற்றியாகச் சேர்ப்பதும். மறுபுறத்தில் பத்தில் எட்டு தகுதிகள் இருக்கும் பிற நடிகர்களை ஊடகங்கள் ஊக்குவிக்கவில்லை (அல்லது) ஊடகங்களுக்கு அவர்களிடம் ஆர்வமில்லை என்பதும் இரண்டு வழிகளில் உங்கள் பார்வையை எனக்கு முழுமையற்றதாகக் காட்டுகின்றன.

  * * *
  நீங்கள் ஊடகத்தை மட்டுமே காரணியாகச் சொன்னதாக நான் சொல்லவில்லை (நாம் மற்ற காரணிகளைப் பற்றி இங்கே விவாதிக்கவில்லை என்பதால் என் மறுவினை உங்களுக்கு அப்படித் தோற்றமளிக்கிறது என நினைக்கிறேன்). மாறாக ஊடகத்திற்கு இதையெல்லாம் சாதிக்கும் திறன் (அவர்கள் தலைகீழாகக் குட்டிக்கரணம் போட்டாலும்) சாத்தியமில்லை என்றுதான் சொன்னேன். என்னைப் பொருத்தவரை நம்மூர் ஊடகங்களுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது, எனவே அவர்கள் எதையும் திட்டமிட்டு சாதிக்கும் திராணியற்றவர்கள். ஆனால், சந்தர்ப்பங்களில் மூர்க்கத்தனமாக ஒருவரை ஆதரித்து எதிர்த்து வருகிறார்கள்.

  மற்றதெல்லாம் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.

  One Response to திரை (மறைவு) ஊடக அரசியல் - இன்னும் கொஞ்சம்

  1. prabhu rajadurai
   May 12, 2007 at 8:10 am

   I find this discussion healthy and constructive. I appreciate both of you for initiating such trend in Tamil blogsphere...

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *