ஜெகத் திரை(மறைவு) அரசியல் பதிவில் தமிழக ஊடகங்கள் தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள, வளர்த்தெடுக்கிறார்கள் என்று ஊடகங்களைக் King Makers ஆகக் காட்டியிருக்கிறார். அவர் முன்முடிபுடன் இதை அனுகியிருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் சில நிகழ்வுகளைத் தவறாக முன்வைத்திருக்கிறார், சில தரவுகளைத் தவறவிட்டிருக்கிறார். இவை அவருடைய வாதத்திற்கு மிக முக்கியமானவை.

ஆதரவு பெறும் நடிகர் எந்நிலையிலும் தமிழ் தேசியவாதம் பேச முடியாதவராக இருக்கவேண்டும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.ஜி.ஆரும், மராட்டியரான ரஜினிகாந்தும், வீட்டில் தெலுங்கு பேசுபவராக அறியப்படும் விஜய்காந்தும் ஒருபோதும் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியாது. மேலும் அவர்கள் தங்கள் பின்புலம் காரணமாக வரும் தமிழ் தேசியவாதிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள இந்திய தேசிய அடையாளத்தை தீவிரமாக வலியுறுத்தவேண்டியக் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள்.

இந்த இடத்தில் தற்செயலாகவோ, அல்லது தன் கருத்துக்கு வலுசேர்க்கவோ வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதியைத் தவறவிட்டிருக்கிறார். பின்னால் ஒப்புக்கு ஜெயலலிதாவுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் உண்டு என்று சொல்லி அவரைக்கூடப் புறனடையாகத்தான் காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த் – மூவரையும் ஒரு அணியில் வைத்து அவர்கள் ஊடகங்களால் ரட்சிக்கப்பட்டு ஜீவித்தவர்கள் என்று சொல்லும்பொழுது அதே திரைப்பின்னணி கொண்ட ஜெயலலிதாவை வேறுவிதமாகக் காட்டியும் கருணாநிதியை முற்றிலும் சுயதகுதிகளாலும் கடின உழைப்பாலும் (அல்லது ஊடகங்களின் சதியைத் தகர்த்தெரிந்து) முன்வந்தவராக உணர்த்தியிருப்பது அவரது பார்வையின் முழுமையின்மையைக் காட்டுகிறது.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாததால்தான் இந்தி எதிர்ப்பில் மும்மூர்த்திகளால் தீவிரம் காட்டமுடியாது என்று சொல்லும்பொழுது எதிரிடையாகக் காட்டப்பட்டிருக்கும் கருணாநிதிக்கும் அதே வேற்றுமொழிப் பின்னணியிருப்பது முரணாகத் தோன்றவில்லை?

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று ஒரு தொகுப்பான திரை அரசியல் பார்வையைத் தவறவிட்டிருக்கிறார். அப்படியிருந்தால் மாநிலவாதம், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை ஒரே தட்டில் வைக்கமுடியாது. வென்ற எம்.ஜி.ஆரையும் தோற்ற ரஜினியையும், மூச்சுத் திணறும் விஜயகாந்தையும் அரசியல் வெற்றிகளாகவும் அதற்கு ஊடகங்கள் காரணமாகவும் பார்ப்பது சரியில்லை.

அமோக ஆதரவுடன் திமுகவை உடைத்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே – ஈ.வி.கே சம்பத்(கன்னடம்), எம்.ஜி.ஆர்(மலையாளம்), வைகோ(தெலுங்கு) – தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது தற்செயலானதா என்றுத் தெரியவில்லை.

எம்.ஜி.ஆர். வைகோ இருவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்தாம்; கட்சியை உடைத்துக் கொண்டு சென்றவர்களில்லை. (இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால் தேவைப்படும் அளவுக்குக் கன்னடியரையும், மலையாளியையும் சக்கையாக உறிஞ்சிக் கொண்டு பின்னர் நாகரீகமற்ற முறையில் அவர்களது பிறப்புப் பின்னணியை முன்னிருத்தி வசைபாடியவர் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தேர்தலில் பாக்கியராஜ் என்ற பந்தயக் குதிரைக்குக் குறுக்கு வைக்க ராஜேந்தர் என்றொரு குதிரையைக் கண்டுபிடித்தார். பின்னர் அவரையும் கேவலமாக வசைபாடினார்.)

ஜெகத்-தின் கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர் இருவரையும் எதிருதாரணமாகக் காட்ட முடியும். தமிழகத்தின் பெரும்பான்மை சாதிகளின் பின்னணி இல்லாமலிருந்தபொழுதும், ஆத்திக சிகாமணிகளாக இருந்தபொழுந்தும் இவர்களை ஊடகம் வளர்த்தெடுக்கவில்லை (அ) ஊடகத்தால் இயலாமற்போயிற்று. (இன்னும் மிகப் பிரபலமாக இருந்த காலத்தில் ஜெய்சங்கர்கூடக் கொஞ்சம் நாட்களுக்கு கலைஞர்க்குப் பயன்பட்டார் இருந்தார். இவரையும் ஊடகப்பிசாசால் ஊதிப்பெருப்பிக்க முடியவில்லை).

உண்மையைச் சொல்லப்போனால் ஊடகங்கள் (சோ ராமசாமிக்கள் என்றும் வாசிக்கலாம்) தலைகீழாக நின்று பிரம்மப் பிரயத்தனம் செய்தபொழுதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையான சூழலைக்கூட சந்தேகங்களற்ற நிலையை அவர்களால் வளர்த்தெடுக்க முடியவில்லை. (விஜயகாந்தை வெற்றியாளர் என்று சொல்வதைவிடத் தோல்வியைத் தாக்குப் பிடித்துக்கொண்டிருப்பவர் என்றுதான் சொல்ல வேண்டும்; இது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்).

சூப்ப்ப்பர் ஸ்டார் ஒருவரை அரசியலுக்கு வரவழைக்கக் கூட வக்கில்லாத ஊடகங்களை ஐம்பது வருட கிங் மேக்கர்களாக தூக்கிவைப்பது (அல்லது தூற்றுவது) – சாரி, கொஞ்சம் ஓவர்.

எண்ணிக்கைப் பலம் கொண்ட தேவர், வன்னியர், நாடார் போன்ற பிற்பட்டத் தமிழ் சாதிகளைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் சமூக ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அத்தகைய அரசியலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு ஊடக ஆதரவு கிடைக்காது. எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த ஆதரவு ‘என் தமிழ் என் மக்கள்’ என்ற வசனத்துடன் தனிக்கட்சி தொடங்கி கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் போட்டியிட்ட சிவாஜிக்கு கிடைக்காது.

இந்த இடத்தில் எண்ணிக்கைப் பலம்தான் பலவீனமும் ஆகிறது. என் அருமைக் கள்ளர்களே, வன்னியர்களே என்று சொல்லும்பொழுதே அவர்கள் மற்ற சமூகங்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள். சம அளவு பலத்திலும் எண்ணிக்கையிலும் இரண்டு (அல்லது மூன்று) சாதிகள் இருக்கும்பொழுது மற்றவனைத் தலையெடுக்க விடாமல் இருப்பதுதான் அவர்களுக்கு முக்கிய கடமையாகத் தோன்றுகிறது (பல நண்பர்களின் பேச்சில் இதை நான் நேரடியாக அவதானித்திருக்கிறேன்). மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியறுக்க வேண்டும் என்பது நம்மூர் சொலவடைதானே! இந்த நிலையில் எண்ணிக்கை பலமில்லாத ஒருவரை முன்னிருத்துவது ஒருவகையில் சிரமமற்ற check and balance ஆகப் பயன்படுத்தப்படுகிறது. (ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்). இது பெரும அளவில் மட்டுமில்லை, சிறும அளவில் வாண்டையார்-மூப்பனார் சிண்டுபிடியிலும் உண்டு).

* * *

சிவாஜி கணேசனோ, கார்த்திக்கோ தோற்றுப்போக ஊடகங்கள் எந்த வகையிலும் காரணமாக முடியாது. இருவருக்கும் தமக்கேயான சுயபிம்பத்தை வளர்த்துக் கொள்ளும் திறமையோ, அதற்காகச் சில தியாகங்களைச் செய்யும் பொறுமையோ கொஞ்சம்கூடக் கிடையாது. இவர்கள் தங்கள் தலையில் தாங்களே மன்னளிப் போட்டுக்கொண்டவர்கள்.

தமிழக அரசியலில் கொள்கைகள் நிலையாக இருக்க வேண்டும் என்று நம் மக்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக தலைவர் பிம்பங்கள் (புறவெளிப்பாடுகள்) மாறிலிகளாக இருக்க வேண்டும் என்று தீர்க்கமாக எதிர்ப்பார்க்கிறார்கள். ஐம்பது வருடங்களுக்குச் சலிக்காமல் மஞ்சள் துண்டையும் கருப்புக் கண்ணாடியையும் போடும் பொறுமையைக் கார்த்திக்கிடமோ சிவாஜியிடமோ, சரத் குமாரிடமோ எதிர்பார்க்க முடியாது. இதே தகுதி(யின்மை)தான் நாத்திகர்களான கமலஹாசனையும், சத்தியராஜையும் அரசியலிடம் நெருங்கிவரக்கூட முடியாத நிலையில் வைத்திருக்கிறது. அவ்வப்பொழுது தோற்றுப்போய் ஹைதராபாத் ஓடினாலும் ஆறுமாத்தத்தில் திரும்பவந்து மக்களை எதிர்கொள்ள ஜெயலலிதாவுக்கு இருக்கும் தைரியம் சிம்மக்குரலோன் சிவாஜிக்கு இருந்ததில்லை.

மறுபுறம் வெகுளியான முகத்துடன் கிழவிகளைக் கட்டியணைக்கும் சாதுரியம் எம்.ஜி.ஆருக்கு வாய்த்திருந்தது. “என் மகளின் தாயார்” என்று தன் தவறுக்கு வார்த்தைச் சிகரம் கட்டியெழுப்பும் திறமை கருணாநிதிக்கு, ‘உங்களில் ஒருத்தி நான், என்னைத் துகிலுரிகிறார்கள் பாருங்கள்’ என்று செண்டிமெண்டலாக நெஞ்சைத் தொடும் அழுகை ஜெயலலிதாவுக்கு. வெகுஜனங்களின் நாடியை உணராத சந்திரசேகர், ராஜேந்தர், பாக்கியராஜ், சிம்ரன், ரேவதி, எஸ்.வி. சேகர், ரஜினிகாந்த், இன்னும் எண்ணிடலங்கா நடிகர்கள் ஸ்வாகிலியைத் தாய்மொழியாகக் கொண்டாலும், சிறுபான்மை சாதியில் பிறந்திருந்தாலும் மொட்டைபோட்டு பட்டை போட்டு தாங்கள் நாத்திகர்களல்லர் என்று பறைசாற்றிக் கொண்டாலும், இந்திப் பாட்டுப் பாடினாலும், பிற்படுத்தப்பட்ட சாதியினரை வெறுப்பவர்களாக இருந்தாலும் – ஊடகங்கள் எவ்வளவு தலைகீழாக நின்றாலும் வேறோடு பிடுங்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடமுடியாது.

* * *

நான் இப்படிச் சொல்வதால் அரசியல்வாதிகளை ஆதரிப்பதற்கு அல்லது எதிர்ப்பதற்கு ஊடகங்களுக்கு எந்தவிதமான உள்நோக்கங்களும் கிடையாது என்பதாக அர்த்தமில்லை. மாறாக ஐம்பது வருடங்களாக ஒருவித மூர்க்கத்தனமான துல்லியத்துடன் தமிழகத்தின் அரசியல்வாதிகளை வெள்ளித்திரையிலிருந்து கண்டெடுத்து அவர்களை மக்கள் மனதில் விதைத்து பின்னர் கோட்டையேற்றுவதற்கு நம் ஊடகங்களுக்கு எள்ளவும் திறமைகிடையாது என்பது சர்வநிச்சயம். ஊடகங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகளை (ஒரு உள்நோக்கத்துடன்) ஆதரிக்கிறார்கள். இதற்கு அற்புதமான உதாரணம் ரஜினியை முன்னிருத்தி தமிழ் மாநிலக் காங்கிரஸை உருவாக்கி ஒரு தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்ட சோ. இதில் அவருக்கு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது, தமிழக அரசியலைத் தூர் எடுத்துத் தெளியவைக்கத்தான் என்று சோவை வழிபடும் பாமரர்கள்கூட நினைக்கமாட்டார்கள்.

அவ்வளவுதான். நம் ஊடகங்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழகத்தில் நியாயமான ஜனநாயகம் வளரவிடாமல் தங்கள் திருப்பணியைத் தவறாது செய்துவருகிறார்கள். மூர்க்கத்தனமான பெரும்பான்மையுடன் ஒருவர் அரியணையேறுகிறார்; அடுத்த தேர்தலில் அவருக்கு மொட்டையடிக்கிறார்கள். (ஐய்யயோ, ஜனநாயக ஒழிப்பை ஐம்பதுவருடங்களாகத் தமிழ் ஊடகங்கள் திறமையாகச் செய்கின்றன என்று யாரும் படித்துவிடாதீர்கள். யாரோ ஒருவரைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்; ஜனநாயகம் தானாக ஒழிகிறது). இதற்கெல்லாம் அவர்களுக்குத் தகுதியும் திறமையும் இருப்பதாக நினைத்துகொண்டால் பேனைப் பிடித்துப் பெருமாளாக்கியதாத்தான் ஆகும்.