லஷ்மி அவருடைய ஆங்கிலப் பதிவின் வழியே விடுத்த அழைப்பை ஒட்டியது: ஆங்கிலப் பதிவெழுதும் பல இந்திய நண்பர்கள் இந்தத் தொடர் விளையாட்டை ஆடி வருவது தெரியவந்தது. லக்ஷ்மியின் அழைப்பு இந்தத் தொடர் விளையாட்டை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் நகர்த்துகிறது.

தொடர்ச்சியான அலுவல்களுக்கிடையில் மனதில் வெறுமை தங்கும் நேரம் இது. பொதுவில் இதுபோன்ற தொடர் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வமில்லை என்றபோதும் இந்த மனநிலைக்கு மாற்றாக கொஞ்சம் ‘என்ன பெரிதாக கிழித்திருக்கிறேன்’ என்று பார்க்கலாம். இனி, சுயவியப்புச் சும்மாடை தலையில் சுற்றிக் கொள்ளலாம்.

1. முதன் முதலில் ஒரு நாளிதழில் என்னைப் பற்றிய செய்தி வந்தபொழுது எட்டு வயது. மூன்றாம் வகுப்பில் திருக்குறள் ஒப்பித்தல், மனக்கணக்கு போடுதல், இத்யாதி சித்து வேலைகளில் முதலாமிடத்தில் வந்தேன். ஒரத்தநாடு பேரூராட்சி துவக்கப்பள்ளி (வார்டு 2) கண்ணையன் சார் தினமலர் நாளிதழுக்கு ஃப்ரீலான்ஸ் செய்தியாளரும்கூட. அந்தச் சாதனை, தினமலரில் ஒற்றைவரியாக வந்து பலசரக்குக் கடையில் சணலால் பிணைக்கப்பட்ட கூம்புவடிவப் பொட்டலமாக்கப்பட்டது. ஏதோ ஒரு சிவக்குமார்/முத்துராமன் படத்தின் சுவரொட்டியைத் தட்டியில் தாங்குவதற்கு அடித்தளமாக ஒட்டப்பட்டது. தொடர்ந்து அதே சுவரொட்டியுடன்கூட காய்ந்த மாடொன்றின் மதிய உணவாகச் செரிபட்டு, மீத்தேனாக வெளியேறி உலகப்பந்தைச் சூடாக்கியது. வெந்தயத்துடன் கூட ஊறவைத்து நொதிக்கப்பட்டு அறைக்கப்பட்டு காகிதக்கூழ் கூடையாக மாறியது. இருந்தபோதும் “நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு மாணவன் வெங்கட்ரமணன் பல பரிசுகளைப் பெற்றார்” என்ற ஒற்றை வரி என்னை பொருத்தவரை காலத்தால் அழியாமல் நிலைத்துப்போனது.

2. அந்தக் காலங்களில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குக் காவிரியைக் கொஞ்சம் தாராளமாகவே திறந்துவிட்டுக் கொண்டிருந்தது. காவிரி, அரசலாறு, குடமுருட்டி, வெண்ணாறு என்று நெல்லுக்கிறைத்த நீர் கொஞ்சம் கல்லணைக் கால்வாய் என்ற புல்லிலும் பொசிந்த நாளொன்றில் அம்மாவுடன் கால்வாயில் குளிக்கச் சென்றேன்; வயது ஒன்பது. கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனத்தைக் காட்ட பெண்கள் துறையில் இருந்த அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமல் ஆண்கள் படியில் இறங்கி வழுக்கி விழுந்து பெண்கள் துறையையும் கடந்து கிட்டத்தட்ட நூறு மீட்டர்கள் அடித்துச் செல்லப்பட்ட பொழுது, ஒரு அக்காள் குதித்து என் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கரையில் போட்டாள். இன்றைக்கும் என்றாவது ஒருநாள் தலைமயிரைக் கையால் கோதும்பொழுது அந்த முகம் தெரியாத அக்காவிற்கு நன்றி சொல்வதுண்டு. பத்து வயதுக்குள் சாகாமல் உயிர்த்திருப்பதும் ஒரு சாதனைதானே.

3. முதன் முதலில் வானொலி நிகழ்ச்சியில் பங்கெடுத்தது பதினோறு வயதில். திருச்சி வானொலியில் மதியம் இரண்டு மணிக்கு வரும் கல்வி நிகழ்ச்சியில் என் ஆசிரியருடன் கூட நானும் ஜெயசங்கரும் நாற்பது நிமிட நிகழ்ச்சியில் ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய இந்திய வரலாற்றைப் பற்றி பேசினோம். (நினைவு தெரிந்த வகையில் குளிரூட்டப்பட்ட அறையொன்றில் நின்றதும் முதன்முறையாக அப்பொழுதுதான்.) பெருநகர மாணவர்களுக்கு எப்படியோ தெரியாது; ஒரத்தநாடு கெவுர்மெண்டு பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் சலசலப்பு உண்டானது நிச்சயம்.

4. மொத்த மதிப்பெண்களில் பள்ளிக்கூடத்தில்கூட சொல்லிக் கொள்ளத்தக்க இடம் கிடையாது என்றாலும், பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆங்கிலம், வரலாறு/புவியியல் இரண்டு பாடங்களிலும் தமிழகத்தின் முதல் மதிப்பெண்கள் கிடைத்தன.

5. உலகின் எல்லா மூலைமுடுக்குகளிலும் இருக்கும் நாடுகளின் வானொலிகளையும் சிற்றலையில் கேட்டுக்கொண்டிருந்த காலம் உண்டு (Shortwave DXing). எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் வானொலிகளைக் கேட்டு அவற்றின் ஒலிபரப்புத் தரத்தைப் பற்றி எழுதியமைக்காக QSL அட்டைகளைப் பெற்றிருக்கிறேன். இதற்காக அப்பாவின் நெல்கோ டாபி இரண்டு பேண்ட் ரேடியோவுடன் அம்மா துணி உலர்த்தும் கம்பியின் முனையை long wire antenna, சட்டை மாட்டும் ஹேங்கரை வளைத்து dipole என்று custom design எல்லாம் செய்திருக்கிறேன்.

முதன் முதலில் கிடைத்த QSL Australian Broadcasting Corporation. மிகவும் சிரமப்பட்டு பெற்ற QSL அட்டைகள்; Radio Norway, HCJB Equador, Radio Vilnius, Lithuania, KTWR, Guam, கிளிநொச்சியிலிருந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த Voice of Tamil Eelam போன்றவை. கிழக்கு ஜெர்மனியின் Radio Berlin International-ல் பல போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன். Radio Sweden அறிவிப்பாளர் Claude Stephenson கும்பகோணத்தில் என் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் 1995-ல் நான் Radio Netherlands-ன் Hilversum Studio விற்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்பில் இருக்கும்பொழுது தற்செயலாக என்னையும் அழைத்து ஒருசில நொடிகள் பேசவைத்தார்கள்.

6. முதன் முதலில் அயல்நாட்டுப் பணம் சம்பாத்தித்தது பி.எஸ்.ஸி இரண்டாம் வருடத்தில் இருந்தபொழுது. பிபிஸி உலகச் சேவையில் ‘லண்டன் ராயல்’ என்ற நாடகத் தொடர் துவங்கியபொழுது உலகெங்கிலும் இருநூறு பேரை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டு கருத்தெழுதச் சொன்னார்கள்; செய்தேன். இரண்டு மாதங்கள் கழித்து சற்றும் எதிர்பாராமல் இருபத்தைந்து பவுண்டுகளுக்கு காசோலை வந்தது. (இது அப்பொழுது என் அப்பா வாங்கிய மாதச் சம்பளத்தைவிட கொஞ்சம் அதிகம்.

7. முதன் முதலில் பார்த்த வேலை : சுருக்கெழுத்தாளர் (Stenographer). “ஏண்டீ லெச்சுமி, எங்காத்து காயத்ரி ஹையர் பாஸ்பண்ணிட்டா, ரமணன் என்ன பண்றான்?” ரீதியான peer pressure களிலிருந்து அம்மாவைக் காப்பாற்ற மாலை நேரங்களில் ஒரு மணிநேரத்தை விழலுக்கிறைத்த புண்ணியம். பிஎஸ்ஸி கோடை விடுமுறையில் முதன் முறையாக மெட்ராஸ் பட்டணம் போனபோது சொந்தக்காரர் ஒருவரின் அலுவலத்தில் பிரசவ விடுப்பில் சென்றிருந்த ஒருவரின் இடத்தில் இரண்டு மாதங்கள் குந்தியிருந்ததற்காக மாதத்திற்கு இருநூறு ரூபாய்கள் கிடைத்தன. இதுதான் வாழ்க்கையில் வேலைசெய்து முதன் முறையாகச் சம்பாதித்த பணம். (முடிந்து திரும்பொழுது சேர்த்து வைத்த ‘ஒன் சைடு பேப்பர்களும், கம்ப்யூட்டர் பேப்பர்களும் அடுத்த மூன்று செமஸ்டர்களுக்கு எம்.எஸ்.ஸியில் எல்லா பாடங்களையும் எழுத உதவியதை அதைவிட முக்கியமானதாக நினைக்கிறேன்).

8. நாளிதழ், சஞ்சிகைகள் என்று எழுதியாகிவிட்டது. வானொலியில், தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு வாராந்திர அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தியாகிவிட்டது, வெகுஜனப் புரிதலுக்கான அறிவியல் ஒரு புத்தகம் வெளிவந்து முதல்பதிப்பு விற்றுவிட்டது. வீட்டில் குறைந்தது முப்பது ஆர்க்கிட்கள் வளருகின்றன. இப்படி ஒரு காலத்தில் கனவுகளாக இருந்த பல விஷயங்கள் சாத்தியமாகிவிட்டன. இன்னும் ட்ரம்ஸ் கற்றுக் கொண்டு மேடை நிகழ்ச்சி நடத்துவது, மேற்குத் தொடர்ச்சிமலைத் தாவரங்களைப் பற்றி ஒரு வருடம் அலைந்து திரிந்து ஒரு புத்தகத்தை எழுதுவது (தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்) என்று கொஞ்சம் பாக்கியிருக்கிறது; நம்பிக்கை நிறையவே.

இனி ஆட்டத்திற்கு அழைக்கப்பட்டும் எட்டு பேர்;

1. பாஸ்டன் பாலாஜி
2. இகராஸ் பிரகாஷ
3. பத்ரி சேஷாத்ரி
4. ரவி சங்கர்
5. மயூரன்
6. பத்மா அர்விந்த்
7.ராமநாதன
8. கார்த்திகேயன் ராமசாமி

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.