நேற்று மாலை டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வில்லியம் டூ அரங்கில் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த விழாவின் ஆறாவது ஆண்டு இது. இம்முறை தமிழ் இலக்கியத்திற்கான ஆயுட்கால பங்களிப்பை கௌரவிக்கும் “இயல் விருது” புகழ்பெற்ற நாடகர் ஏ.சீ. தாசீசியஸ்க்கு வழங்கப்பட்டது. ஆறு ஆண்டுகளில் டொராண்டோ இலக்கியத் தோட்டத்தின் பரப்பு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. மகிழ்ச்சியான விஷயம்.

பேரா. செல்வா கனகநாயகம் விழாவைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறுவர்கள் கிருஷண ருத்ரா, நிதின், ஜனகன் குழுவினரின் மிருதங்கம், மோர்சிங், கடம் தாள வாத்தியக் கச்சேரி நடந்தது. தொடர்ந்து டொராண்டோ பல்கலைக்கழக மாணவர்கள் அஸ்வின் பாலமோகன், ராஜ் குணரட்ணம் இருவரும் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்று துறை துவக்க நடக்கும் முயற்சிகளையும், இவற்றில் மாணவர்களின் பங்களிப்பையும்பற்றி பேசினார்கள். அடுத்ததாக கஜன் யோகரட்ணம் வழங்கப்படவிருக்கும் விருதுகள் பற்றியும் அவற்றின் நிதியுதவியாளர்கள் குறித்த விபரங்களையும் அறியத் தந்தார்.

தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன. இம்முறை வழமையான இயல்விருதின் கூடவே பின்வரும் புதிய விருதுகளும் வழங்கப்பட்டன. சமகால இலக்கியப் படைப்புகளைக் கௌரவிக்கும் முகமாக வெளியாகி ஒன்றிரண்டு ஆண்டுகளேயான புத்தகங்களுக்கான புதிய விருதுகள் இவ்வாண்டுமுதல் துவக்கப்பட்டிருக்கின்றன. விருது பெறுபவர்களுக்கு 500 கனேடிய டாலர்களும் பட்டயமும் வழங்கப்படுகின்றன. (இவ்விருதுகளுக்கன நிதியுதவியாளர்களைப் பற்றிய தகவல் இப்பொழுது என் நினைவில் இல்லை. ஒன்று கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் இயற்பியல் பேராசிரியர் ஒருவரின் நினைவாகவும், மற்றது பேராதனை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரின் நினைவாகவும், மூன்றாவது உலகெங்குமுள்ள ஆசிரியர்களைக் கௌரவிக்கும் முகமாக திருமதி/திரு ஜெயராமன் தம்பதியினராலும் வழங்கப்பட்டிருக்கின்றன).

புனைகதை – ஆழி சூழ் உலகு – ஜோ. டி குரூஸ்
புனைவிலி – உணர்வும் உறவும் – ரேவதி
கவிதை – மீண்டும் கடலுக்கு – உருத்திரமூர்த்தி சேரன்

இவற்றுடன் கூடவே முதல் முறையாக தமிழ் கணிமைக்கான பங்களிப்பிற்காக காலச்சுவடு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் மற்றொருமொரு விருது துவக்கப்பட்டிருக்கிறது. இவ்விருது க்யூபெக்கைச் சேர்ந்த கே. ஸ்ரீநிவாசனுக்கு வழங்கப்படுகின்றது (இவ்விருதைப் பற்றிய மேலதிகத் தகவல்களை விரிவாக எழுதுகிறேன்).

இறுதியாக வாழ்நாள் பங்களிப்பிற்கான இயல் விருது நாடகர் தாசீசியஸ் அவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் துறைத்தலைவர் பேரா. வீ.அரசு அவர்களால் வழங்கப்பட்டது. பேரா. அரசு இயல் விருது வழங்கும் முறையைப் பற்றி விளக்கினார். திறந்த முறையில் விருதிற்கான பரிந்துரைகள் வரவேற்கப்பட்டு கட்டுப்பாடுகளற்ற வல்லுநர் குழுவால் அவ்விண்ணப்பங்கள் அலசப்பட்டு விருது பெறுபவரைத் தெரிந்தெடுக்கும் முறையை விளக்கினார். தொடர்ந்து விருதை ஏற்றுக்கொண்டு தாசிஸியஸ் உரை நிகழ்த்தினார்.

பின்னர் மானுவல் ஜேசுதாஸன் இலக்கியத் தோட்டத்தின் செயற்பாடுகளைப்பற்றியும் வருங்காலத் திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார். நன்றியுரையுடன் விழா நிறைவேறியது.

* * *

இதற்கு முந்தைய ஆண்டுகளில் இயல் விருது பெற்றவர்கள்

2001 – சுந்தர ராமசாமி
2002 – கே.கணேஷ்
2003 – வெங்கட் சாமிநாதன்
2004 – இ.பத்மநாப ஐயர்
2005 – ஜார்ஜ் ஹார்ட்
2006 – ஏ.சீ. தாசீசியஸ்