மணிகண்டனின் இந்தப் பதிவைப் பார்த்தபிறகு எழுதத் தோன்றியது.

இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏழெட்டு சோதா அணிகள் இருக்கின்றன. இது ஆட்டத்தின் சுவாரசியத்தைக் குறைக்கிறது என்று சொல்கிறார் மணி. சென்ற உலக்கோப்பையில் அரையிறுதி ஆட்டம் வரைக்கு கென்யா வந்தது என்பதை மனதில் கொண்டால் அவரது ஆதங்கம் எவ்வளவு தேவையற்றது என்பது புரியும். இருக்கிற ஏழெட்டு நாடுகளே விளையாடி தங்களுக்குள்ளே ஒரு கோப்பையைக் கொடுத்துக் கொண்டால் அதற்கு உலகக் கோப்பை என்று பெயரில்லை. (அதுதான் அடிக்கடி சாம்பியன் கோப்பை, ஷார்ஷா கோப்பை, தகரக் கோப்பை என்று முக்காலே மூனு பங்கு டெஸ்ட் நாடுகள் தங்களுக்குள்ளே விளையாடிக்கொள்கின்றனவே).

உலகக்கோப்பையில் கனடா, நெதர்லாந்து, பெர்முடா, ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து, கென்யா போன்ற நாடுகளுக்கு இதில் இடம் கொடுத்திருப்பது என்னைப்பொருத்தவரை சுவாரசியத்தைக் கூட்டுகிறது என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் இதுபோன்ற சின்ன நாடுகள் தவறாது ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன. அந்த அதிர்ச்சிகள் ஒவ்வொருமுறையும் கோப்பையின் சுவாரசியத்தை அதிகரித்திருக்கின்றன. 1979 உலகக்கோப்பையில் இலங்கை (அப்பொழுது டெஸ்ட் தேசம் கிடையாது) இந்தியாவை வென்றது. இதுதான் முதன் முதலாக ஒரு பொடிசு பெருசை வென்ற சம்பவம். இது இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமான பங்காற்றியது என்று சொன்னால் மிகையில்லை. விரைவிலேயே டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற இலங்கை (உள்நாட்டு அரசியல் அமைதியில்லாதபொழுதும்) உலகக்கோப்பையை வென்றெடுத்தது. ஆனால் இரண்டுக்கும் இடையில் 1987 உலகக் கோப்பையில் இலங்கை எந்த வெற்றியும் பெறாமல் உதைவாங்கிச் சென்றதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

1992 உலகக் கோப்பையில் பொடிசாக இருந்த ஜிம்பாப்வே இங்கிலாந்தை ஒரு குறைந்த ஓட்டங்களே எடுக்கப்பட்ட ஆட்டத்தில் ஒன்பது ரன்களில் வென்றது. இதே உலகக் கோப்பையில் இங்கிலாந்து இறுதியாட்டம் வரை வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விரைவிலேயே ஜிம்பாப்வே மிக வலுவான கிரிக்கெட் தேசமாக உருவெடுத்தது (தற்பொழுதைய அரசியல் குழப்பம் அதற்கு உதவவில்லை).

1996 உலகக் கோப்பையில் வெறும் 97 ரன்களுக்கு மேற்கிந்தியத் தீவுகளைச் சுருட்டிய கென்யா தனது முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றது. 1999-ல்தான் எந்தவிதமான பெரிய அதிர்ச்சிகளும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த உலகக் கோப்பையில் (2003) ஏற்கனவே சொன்னதுபோல் கென்யா அரையிறுதி ஆட்டம்வரைக்கும் வந்தது. ஒருநாள் ஆட்ட அந்தஸ்தைப் பெற்றிருந்த பங்களாதேஷ் கனடாவிடம் தோற்றுப்போனது.

இதைத் தவிர இந்த நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் மிக அற்புதமான ஆட்டங்களை ஆடியிருக்கிறார்கள். சிறுநாடுகள் இல்லாவிட்டால் உலகக் கோப்பையில் சுவாரசியமே இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

உலகக் கோப்பையில் இவரகளை ஏன் கொண்டுவர வேண்டும் தனியாக ஒவ்வொரு பெரிய நாடுகளும் இவர்கள் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் போய் அங்கே கிரிக்கெட்டை வளர்க்கலாமே என்று மணி சொல்கிறார். எத்தனைமுறை இப்படி தனித்தனியாக பெரிய நாடுகள் இங்கே சென்றாலும் இதுபோல அந்த நாடுகளில் கிரிக்கெட் வளராது. உதாரணமாக நான் இப்பொழுது வசிக்கும் கனடாவைச் சொல்கிறேன். கனடாவின் முதன்மை விளையாட்டு ஐஸ் ஹாக்கி (இங்கே இதன் பெயர் ஹாக்கிதான், நம்மூர் (?) ஹாக்கி இங்கே விளயாடப்படுவதில்லை). ஐஸ்ஹாக்கி உலகின் பணக்கார நாடுகளில் மாத்திரமே விளையாடப்படுகிறது. கனடா, அமெரிக்கா, சுவீடன், நார்வே, ஜெர்மனி, சுவிஸ், ஆஸ்திரியா, ரஷ்யா, பின்லாந்து, செக் குடியரசு போன்ற நாடுகளில்தான் இது பிரபலமாக இருக்கிறது. எனவே இந்த விளையாட்டில் பணம் மிக அதிகம். இவைகளுக்குள்ளே கனடாதான் இந்த விளையாட்டின் பவர்ஹவுஸ். ஆண்கள்(உலகக் கோப்பை, ஒலிம்பிக் சாம்பியன்ஷிப், இளையோர் கோப்பை) பெண்கள்(உலகக்கோப்பை, ஒலிம்பிக்ஸ், இளையோர்) எல்லாவற்றிலும் தற்பொழுது கனடாதான் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக நீங்கள் பெயரே கேள்விப்பட்டிருக்காத லக்ராஸ், ஃபிகர் ஸ்கேட்டிங், ஆல்பைன் ஸ்கீ, க்ராஸ்கண்ட்ரி ஸ்கீ, இன்னும் கையால் எடுத்து விளையாட்டப்படும் அமெரிக்கக் கால்பந்து, கூடைப்பந்து போன்றவைதான் இந்த நாட்டில் மிகப் பிரபலம்.

ஆனால் கனடாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் விளையாட்டு எது தெரியுமா? – கிரிக்கெட்! இதற்கு முக்கிய காரணம், இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் போன்றவற்றிலுருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் பெருமளவு கிரிக்கெட் அபிமானிகள். இரண்டு வாரங்களுக்கு முன்னால் முன்னாள் இந்திய வீரர்களுக்கும் முன்னாள் பாக்கிஸ்தான் வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற போட்டிக்கு 28,000 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். (என்னையும் சேர்த்துத்தான்). இத்தனைக்கும் இதில் பிரபலமான பெயர்கள் வாஸிம் அக்ரம், அப்துல்காதிர், அக்விப் ஜாவேத், அஜய் ஜடேஜா, வெங்கடேஷ் பிரஸாத், ஹிர்வானி, ராபின் சிங், பதானி-தான் முழுக்க முழுக்க மறந்துபோன அதுல் வாஸ்ஸன், ஹர்வீந்தர் சிங் போன்றவர்கள்தான் இதில் அதிகம். இன்றைய தேதிக்கு ஒரு இந்தியா பாக்கிஸ்தான் போட்டி டொராண்டோவில் நடந்தால் கனடாவின் ஒரு தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிக்கு சாதனையளவு பார்வையாளர்கள் வருவது சர்வநிச்சயம். ஆனால் இந்தியா-கனடா, பாக்கிஸ்தான்-கனடா என்று போட்டியிருந்தால் அந்த அளவுக்குக் கூட்டம் வராது. தொலைகாட்ட்சியிலும் வானொலியிலிரும் உலகக் கோப்பையளவுக்கு இதைப் பற்றி பேசமாட்டார்கள். இப்போழுது தினமும் மாலைச் செய்திகளில் விளையாட்டுப் பகுதியில் உள்ளூர் ப்ளூ ஜேஸ் ஹாக்கியின் செய்திக்கு அடுத்தபடியாக இதைத்தான் சொல்கிறார்கள். கட்டாயமாக கனடாவில் கிரிக்கெட் பற்றிய புரிதல் இதனால் அதிகரிக்கிறது.

அலுவலகத்தில் காஃப்பிக்குழாயின் அடியில் இரண்டு நிமிடம் கனடாவின் தோல்விபற்றி விசாரிக்கிறார்கள். ஒரு நாள் முழுக்க ஆட்டமா என்ற வியப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இதில் கட்டாயம் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்க வேண்டும் அதனால்தான் உலகின் இரண்டாவது பிரபலமான விளையாட்டாக இருக்கிறது என்று அவர்களே சொல்கிறார்கள். கொஞ்சம் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். இந்தக் கோப்பையில் கனடா ஒரு ஆட்டத்தையாவது வென்றால் இங்கே அது மிக வேகமாக வளரும்.

கிட்டதட்ட கனடாவின் நிலைதான் ஹாலந்து, ஸ்காட்லாந்து, ஐயர்லாந்து நாடுகளிலும். இங்கெல்லாம் புலம்பெயர்ந்தவர்களின் வருகையால் கிரிக்கெட் சந்தை வளர்ந்துவருகிறது. இப்படி வளரவளர இங்கே இந்தியாவிலோ பாக்கிஸ்தானிலோ முதன்மை அணிக்குத் தேர்ந்தடுக்கப்படும் வாய்ப்பு குறைவானவர்களை வேலைவாய்ப்பும் ஆட்டச் சம்பளமும் கொடுத்து கனடா அணிக்கோ ஹாலந்து அணிக்கோ அழைத்துவரக்கூடும். இந்த நிலை ஏற்கனவே கால்பந்து, கூடைப்பந்து போன்ற ஆட்டங்களில் நிறைய இருக்கிறது. ஒரு ஹேமங் பதானியோ, பாலாஜியோ கட்டாயமாகக் கனடாவினால் கவர்ந்திழுக்கப்படுவார்கள். ஏற்கனவே இந்த கனடா அணியில் முன்னால் மேற்கிந்திய வீரர் ஆண்டர்ஸன் கம்மின்ஸ் இருக்கிறார். இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலவருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்து அணியிலேயே ஆறு அல்லது ஏழு வீரர்கள் வேறுநாட்டைச் சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் இருந்தார்கள். (வேடிக்கையாக இதை காமன்வெல்த் அணி என்று சொல்வார்கள். தலைவர் சென்னையில் பிறந்த நாஸர் ஹுசேன்.) ட்ரினிடாட்ல் பிறந்த ராபின் சிங் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நிறையவே விளையாடியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் பணமே முதல் காரணம். ஓரளவுக்குப் பிரபலம் ஏற்பட்டால் கனடா, ஹாலந்து, ஸ்காட்லாந்து சந்தைகளில் கிரிக்கெட் இன்னும் நன்றாக விலைபோகும். ஐஸிஸிக்கு இதுதான் தேவையானது.

கால்பந்து ஃபீஃபா இந்த விஷயத்தில் முனைந்து செயல்படுகிறது. சொல்லப்போனால் நிறைய ஐரோப்பிய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஆசிய அமெரிக்க நாடுகள் பங்கேற்பதில் எரிச்சல்தான். அந்த இடத்தைக் காலிசெய்துகொடுத்தால் இன்னும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் (தகுதியுள்ள, முதல்தர கால்பந்து) என்று சொல்வார்கள். ஆனால் உலகக்கோப்பை அப்பொழுது ஐரோப்பிய-தென்னமெரிக்கக் கோப்பையாகத்தான் இருக்கும். மாறாக ஃபீஃபாவின் இந்த உத்தியால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்றவை இங்கிலாந்திற்கும் ஸ்பெயினுக்கும் சவால்விடுமளவிற்கு வளர்ந்திருக்கின்றன. இதேபோல கிரிக்கெட் கோப்பையும் முழுமையான உலகக்கோப்பையாக ஹாலந்தும், பெர்முடாவும், ஐயர்லாந்தும் அவசியம்.

* * *

இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கும்பொழுதே இந்த உலகக் கோப்பையின் முதல் அற்புத ஆட்டத்தை ஐயர்லாந்து தந்திருக்கிறது.