இன்று மத்திய காவிரி நீர் பிரச்சினைத் தீர்வாயம் கர்நாடகத்திற்கு 270 பில்லியன் சதுர அடி எனவும் தமிழகத்திற்கு 419 பில்லியன் சதுர அடி எனவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது கர்நாடகத்திற்குப் பேரிடியாக அமையும். 16 வருட நீண்ட வழக்காடல்களுக்குப் பிறகு தீர்வாயம் ஒட்டுமொத்தமாக இந்தத் தீர்ப்பை அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்படுவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இந்தத் தீர்ப்பு குறித்து உடனடியாக கருத்தேதும் சொல்லமுடியாது என்று கர்நாடக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

1991-ல் நான் பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் படித்துக்கொண்டிருந்த நேரம் இந்தப் பிரச்சினையில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக பலத்த கலவரம் வெடித்தது. சாதாரணமாக எந்தவிதப் பரபரப்புகளுக்கும் இடமில்லாமல் நிதானமாக இயங்கும் ஐஐஎஸ்ஸியிலேயே அப்பொழுது மிகப் பதட்டமாக இருந்தது. குறிப்பாக சில ஊழியர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையேயான உறவுகள் பாதிக்கப்பட்டன. நகரம் முழுவதுமே வன்முறைகள் வெடித்தன. என்னுடன் படித்துகொண்டிருந்த நண்பன் ஒருவன் மல்லேஸ்வரத்தில் தாக்கப்பட்டு அவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக மல்லேஸ்வரத்தில் வசித்துக்கொண்டிருந்த என் சித்தியின் குடும்பத்தில் இருந்த பதட்டம் சொல்லமுடியாதது. என் சித்தி கழுத்திலிருந்த மஞ்சள் கயிறைக் கழற்றிவிட்டு கருகமணியை அணியத் தொடங்கினார்.

முக்கியமான விடயம், 1990 இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது 205 பில்லியன் சதுர அடிகள்தான். அதற்கே அப்பொழுது கர்நாடகம் தீப்பிடித்து எரிந்தது. சேலம், தர்மபுரி மாவட்டங்களிலிருந்து கட்டுமான கூலி வேலைகள் செய்ய வந்தவர்களின் சாலையோரக் குடிசைகள் பல தீவைக்கப்பட்டன. வெருண்ட வேலையாட்கள் கர்நாடகத்தைவிட்டு ஓடினார்கள். இதன் எதிரொலியாக சென்னை- பெங்களூர் இரயில்பாதையை அகலப்பாதையாக்கல் தாமதப்பட்டது.

இதெல்லாம் இரண்டு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை இல்லை. இது மிகவும் கேவலமானது. கர்நாடகம் ஒருப்போதும் தமிழகத்தின் வாதங்களுக்கு முகங்கொடுத்ததில்லை. மத்திய அரசின் பரிந்துரைகளும், நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் கர்நாடக அரசால் புறந்தள்ளப்படுகின்றன. இதில் தலையிட்டு நிரந்தத் தீர்வுகாணத் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் எந்தக் கூட்டாட்சிகளுக்கும் முதுகெலும்பில்லை.

நானறிந்தவரையில் இந்தப் பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வுகாணும் சாத்தியம் எம்.ஜி.ஆர் – ராமகிருஷ்ண ஹெக்டே இருவரும் நெருங்கிவந்த சந்தர்ப்பத்தில்தான். இடையில் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு நின்ற கன்னட செலுவலிகா சங்கா-வின் தலைவர் வாட்டாள் நாகராஜை எம்ஜியார் நேரடியாகச் சந்தித்து (சாம, தான பேத, தண்டங்களைப் பிரயேகித்து என்றும் சொல்வார்கள்) ஒழுங்குக்குக் கொண்டு வந்தார். துரதிருஷ்டவசமாக இந்த நேரத்தில்தான் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு பேச்சிழந்துபோக காவிரிப்பிரச்சினை மறுபடி முறுக்கிக்கொண்டு விட்டது.

இன்றைய பரபரப்புப் பொருளாதார நிலையில் இதுபோன்ற தேவையற்ற கலவரங்களும் பதற்றங்களும் தமிழகம், கர்நாடகம் இரண்டுக்குமே தேவையற்றது. அழிவுகள் ஒருபுறமிருக்க பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இத்தனை ஆண்டுகள் காலம்கடத்திய கர்நாடக அரசு இப்பொழுதாவது இதன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு நிதானமாக நடக்க வேண்டும்.