புதிதாக ஒரு தொடர் எழுத உத்தேசம். என்னிடம் பல நாட்களாகப் பலர் இதைப் பற்றி எழுதச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சோம்பேறித்தனத்தால் துவங்கவில்லை. இன்றைய சுபயோக சுபதினத்தில் இதை ஆரம்பித்துவிடலாம் என்று உத்தேசம்.

நம்மூரில் பலரிடமும் நிறைய ஒலிநாடாக்கள் குவிந்து கிடக்கின்றன. குறுவட்டும், எம்பி3-ம் வந்த பிறகு பலரும் இவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் தூக்கியெறிய மனமில்லாமல் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் இவற்றை எம்பி3 ஆக மாற்றிக் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது. ஒலிநாடாக்களைப் பயன்படுத்தாமல் வைத்துகொண்டிருந்தால் அவற்றில் பூஞ்சைகாளான்கள் பிடிக்கச் சாத்தியமிருக்கிறது. (குறிப்பாக ஈரப்பதமும் வெப்பமும் அதிகமுள்ள நம்மூரில்). ஏன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாடக்களே கொஞ்சம் நாட்களில் வீணாகிவிடும். இதிலிருக்கும் காந்தத் துகள்கள் பலமுறை இசைத்தால் கலைந்துப்போய் பாடலின் தரம் குறைந்துவிடும். ஒலிநாடாக சிக்குண்டு இழுபட்டு பயனற்றுப் போவதும் உண்டு. எனவே, இவற்றை விரைவில் எம்பி3 ஆக மாற்றிக் கொண்டுவிடுவது உத்தமம். ஆனால் பலருக்கும் ஒலிநாடாவிலிருந்து மிகத் தரமான வடிவில் எம்பி3 ஆக மாற்றுவது எப்படியென்று தெரியவில்லை. தனிப்பட்ட நண்பர்களுக்கு (அவர்களுடைய பெற்றோர்களுக்கும்தான்) தனித்தனியாக எழுதுவதற்குப் பதிலாக இப்படிப் பொதுவில் எழுதுகிறேன்.

இன்னும் சிலருக்குக் குறுவட்டிலிருந்து எப்படி எம்பி3 ஆக (மிக நல்ல தரத்தில்) மாற்றிக்கொள்வது என்றும் தெரியவில்லை. எனவே, இவற்றையெல்லாம் ஒரு தொடராகப் பின்வருமாறு எழுதலாம் என்று உத்தேசம். இந்தத் தொடர் மிக எளிதாக விஷயத்திலிருந்து சிக்கலான விஷயங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும்.

  1. குறுவட்டிலிருந்து எம்பி3க்கு மாற்றுவது? (CD to MP3 conversion)
  2. ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு எப்படி மாற்றுவது? தொடர்ந்து இதை எப்படி எம்பி3 ஆக மாற்றலாம்? (ஒலிநாடா என்ற பொழுதும் பழைய LP, Spool போன்றவையும் இவற்றில் அடங்கும்.) (Tape to MP3 conversion)
  3. பழைய பாடல்களை எம்பி3 ஆக மாற்றும்பொழுது அவற்றின் ஒலித்தரத்தை எப்படி மேம்படுத்தலாம்? அவற்றிலிருக்கும் இரைச்சல்களைக் குறைப்பது எப்படி? (Noise reduction in MP3 Files)
  4. எம்.பி3 கோப்புகளில் பாடல்களைப் பற்றிய மேலதிக தகவல்களைச் சேர்ப்பது எப்படி? (Tagging MP3 files)
  5. ஆல்பங்களின் மேலட்டைகளை எப்படிப் பெறுவது? (Adding Album Art to MP3)
  6. நிறைய பாடல்கள் இருந்தால் கணினியில் எப்படி ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பது? (Maintaining a music library)
  7. இசைத் தொடர்பான மேலதிக கணினிப் பயன்பாடுகள் (Other Audio Tools)

இப்பொழுதைக்கு இவற்றைப் பற்றி எழுத உத்தேசம். தொடர்பாக வேறு எதாவது விஷயங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றையும் விளக்க் முயற்சிக்கிறேன்.

இந்தத் தொடர் கணினி விற்பன்னர்களுக்கானதல்ல. இது கணினி பற்றி அதிக அறிவு இல்லாதவர்களை நோக்காகக் கொண்டு எழுதப்படுகிறது. எனவே இவற்றில் நிறைய விளக்கப்படங்களும் படிப்படியான செய்முறைகளும் உண்டு. அதே சமயத்தில் இது நுட்பரீதியாக உயர்ந்த தரத்தில் இசைக்கோப்புகள் மாற்றுவதைப் பற்றியது. எனவே, ஏற்கனவே இவற்றைப் பற்றி அறிந்தவர்களுக்கும் இதனால் ஓரளவு பயனிருக்கும் என்று நம்புகிறேன். விஷயமறிந்த நண்பர்கள் கட்டாயம் இவற்றைப் பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் மாற்று வழிமுறைகளையும் பற்றி விவாதிக்க வரவேற்கிறேன்.

இந்தத் தொடரில் நான் இலவசமாகக் கிடைக்கும் மென்கலன் மாத்திரமே முன்வைத்து எழுதப்போகிறேன். ஆனால், நுட்ப ரீதியாக இவற்றின் தரம் நூற்றுக்கணக்கில் கொடுத்து வாங்கும் வணிகப் பொதிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவையாக இருக்காது. இயன்ற அளவு தளையறு மென்கலன், திறமூல நிரலிகளை மாத்திரமே பயன்படுத்த உத்தேசம். அவற்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குதளத்தில் இயங்கும் பொதிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. எனவே விண்டோஸ், லினக்ஸ் இவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொடர் உதவும்.

இந்தத் தொடர் விண்டோஸ் இயக்குதளத்தை முன்வைத்து எழுதப்படுகிறது. காரணம் என்னிடம் இதைப் பற்றி விளக்கச் சொல்லிக் கேட்டவர்கள் எல்லோரும் விண்டோஸில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்தத் தொடர் போதுமான வரவேற்பைப் பெற்றால் பிறவற்றையும் தொடர உத்தேசம். இதை முதலில் விக்கிபசங்க தளத்திற்காக எழுதுவதாக இருந்தேன். ஆனால், இலவசச் சேவையான ப்ளாக்ஸ்பாட்டில் இயங்கும் அதில் இசைக் கோப்புகள், திரையோவியங்கள் போன்றவற்றைச் சேர்பபது கடினம் என்பதால் என் தளத்திலேயே எழுதுகிறேன். தேவையானால் விக்கிபசங்க தளத்தில் ஒரு இணைப்பு கொடுத்துவிடலாம்.

ஒவ்வொரு பகுதிக்கும் கருத்துக்கள் வந்தபிறகு இவற்றைத் திருத்தி, மேம்படுத்தி தனிப்பக்கங்களாக மாற்றவிருக்கிறேன். அதில் தனித்தனியாக ஒவ்வொரு செய்முறையையும் பிடிஎஃப் அச்சுக் கோப்பாகப் பெற வசதியும் கிடைக்கும்.

இனி, முதலாவதாக சிடிக்களிலிருந்து எப்படி உயர்தர எம்பி3 கோப்புக்களாக மாற்றுவது என்ற எளிய செய்முறை நாளை வரும்.