கணினியும் இசையும் - 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்

சென்ற பகுதியில் ஒலிநாடாவிலிருந்து எப்படி கணினிக்கு மாற்றுதல் என்று பார்த்தோம். ஒலிநாடாவை கணினியில் பதிவு செய்யும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே கோப்பாக சேமிக்கப்படும். தொடரின் இந்தப் பகுதியில் அவற்றை எப்படித் தனித்தனி பாடல்களாக வெட்டியெடுக்கலாம் என்பதையும், கோப்புகளை எப்படி எம்பி3 ஆக மாற்றலாம் என்பதையும் பார்க்கலாம்.

தேவையான கருவிகள்:

சென்ற பகுதியில் நாம் சேமித்த இசைக் கோப்பு. ஒரு ஒலிநாடா (அல்லது ஒரு இசைத்தட்டு) முழுவதையும் கணினிக்கு மாற்றும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில் (A Side) இருக்கும் எல்லா பாடல்களும் ஒரே கோப்பாக சேமிக்கப்படும். இதிலிருந்துதான் நாம் ஒவ்வொரு பாடலையும் தனித்தனியாகப் பிரிக்கப் போகிறோம்.

அடாசிட்டி நிரலி, அடாசிட்டியில் எம்பி3 துணைக்கருவி. (இவற்றை எங்கிருந்து பெறுவது, எப்படி நிறுவுவது என்பது சென்ற பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது).

செய்முறை:

இந்தப் பகுதியையும் இதற்குப் பிறகு வரும் முக்கியமான பகுதிகளையும் நீங்களும் உடனடியாக செய்து பார்க்க வசதியாக ஒரு மாதிரி கோப்பை இங்கே தருகிறேன். இதை தரவிறக்கி உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்தக் கோப்பின் அளவு மிகவும் சிறியது. இதில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒன்றன்பின் ஒன்றாக வரும் அறிவிப்புகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் இதை வெட்டி தனித்தனி கோப்புகளாக எடுக்கப் போகிறோம். இதற்கு அடுத்த பகுதியில் இதில் இருக்கும் இரைச்சல்களை நீக்கி இதன் தரத்தை எப்படி உயர்த்தலாம் என்று பார்க்கப் போகிறோம்.

ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றும் பொழுது கோப்புகள் பொதுவில் WAV வடிவில் சேமிக்கப்படும். WAV கோப்புகள் அளவில் பெரியவை. எம்பி3 ஆக மாற்றும்பொழுது இதன் அளவு வெகுவாகக் குறையும். இங்கே இறக்கிக் கொள்ள வசதியாக கோப்பின் அளவைச் சிறிதாக்கி எம்பி3 வடிவில் தருந்திருக்கிறேன்.

two_parts_split.jpgமுதலாவதாக அடாசிட்டி நிரலியைத் திறந்துகொள்ளுங்கள். சேமித்து வைத்திருக்கும் intro.mp3 கோப்பை File > Open மூலம் திறக்கவும். (அல்லது அந்தக் கோப்பை அடாசிட்டி சாளரத்தில் விசையெலியால் இழுத்துப் போட அது திறக்கும்). இப்பொழுது அடாசிட்டியில் ஒரு அலைத் தொகுப்பைப் பார்க்க முடியும். இந்த அலைவடிவத்தில் 28 நொடியிலிருந்து 32 நொடிவரை எந்த ஒலியும் இல்லாமல் வெறும் இரைச்சல் மட்டுமே பதிவாகியிருப்பதைப் பார்க்க முடியும். இந்த இடத்தில்தான் இந்தி அறிவிப்பு முடிந்து ஆங்கில அறிவிப்பு தொடங்குகிறது. (இதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றால் Zoom In ஒளிப்பெருக்கி மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்).

கருவிப் பட்டியில் இருக்கும் | வடிவ Selection Tool கொண்டு தனியாக வெட்டியெடுக்க வேண்டிய பகுதியை மட்டும் தெரிந்தெடுக்கவும். இப்படித் தெரிவு செய்யும்பொழுது அந்தப் பகுதியின் நிறம் மாறுவதைப் பார்க்கலாம். இதை Edit > Copy மூலம் நகலெடுக்கவும்.

இனி புதிதாக File > New மூலம் ஒரு வெற்று சாரளத்தைத் துவக்கிக் கொள்ளவும். இதில் Edit > Paste மூலம் நகலெடுத்ததை ஒட்டவும். இதன் கோப்பளவு கிட்டத்தட்ட 29 நொடிகளாக இருப்பதைப் பார்க்க முடியும். இந்தப் புதிய கோப்பை Wav கோப்பாகவோ அல்லது நேரடியாக Mp3 கோப்பாகவோ சேமிக்க முடியும்.

எம்பி3 ஆக சேமிக்க முற்படும்பொழுது அதில் பிரச்சனை ஏற்பட்டால் எம்பி3க்கான துணைக்கருவி உங்கள் கணினியில் இல்லை அல்லது அதன் இருப்பிடத்தை அடாசிட்டியால் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்ற பகுதியில் இதைப் பற்றி விளக்கப்படிருக்கிறது.

ஒரு ஒலிநாடாவிலிருக்கும் எல்லா பாடல்களையும் இப்படித் தனித்தனி பாடல்களாக பிரித்தெடுத்து சேமிக்க முடியும். சில சமயங்களில் நாடாவில் ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்கும் இடையே தெளிவான வெற்றிடம் இல்லாவிட்டால் அடாசிட்டியில் திறந்தவுடன் அதை இசைத்துப் பார்த்து இடைவெளியைக் கண்டுபிடிக்க முடியும்.

இனி அடுத்த பகுதியில் கோப்புகளில் இருக்கும் இரைச்சல்களை எப்படிக் குறைக்கலாம் என்று பார்ப்போம்.

6 Replies to “கணினியும் இசையும் - 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்”

  1. குமார் - CoolEdit காசு கொடுத்து வாங்க வேண்டும். அது பகிர்கலனாக (Shareware) இருந்தது, இப்பொழுது கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அதை அடோபி நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. இப்பொழுது அதே மென்கலன் Adobe Audition என்ற பெயரில் இரண்டாம் பதிப்பில் கிடைக்கிறது. என் பல்கலைக்கழகத்தில் மலிவாகக் கிடைப்பதால் அதையும் வாங்கி வைத்திருக்கிறேன்.

    இதைத் தவிர GoldWave, Sonic Foundry, Nero Wave Editor (இது அடாசிட்டியின் மறுவடிவோ என்று சந்தேகம்), இன்னும் {Cakewalk, Sonar, Kinetic2}, Sound Forge (Sony) எல்லாவற்றுடனும் விளையாடிப் பார்த்தாகிவிட்டது. இப்போதைக்கு என் கணினியில் அடோபி ஆடிஷன், அடாசிட்டி இரண்டும்தான்.

    சாதாரண பயனருக்குத் தேவையான எல்லா விஷயங்களும் அடாசிட்டியில் இருக்கின்றன.

  2. வெங்கட்

    இந்த தொடருக்கு முதலில் நன்றி!

    எம்பி3க்களை ஐபாடுக்கோ/சான்ஸாவிற்கோ ஏற்றம் செய்யும் போது...தமிழில் உள்ளிட்ட கோப்பு விபரம் (இசை/பாடகர்கள்/இடம்பெற்ற படம்) ஆகியவை எழுத்துரு காரணமாக *&^%$ என்று (திஸ்கி நிறுவாமல் திஸ்கி எழுத்துரு உலாவியில் எப்படிதெரியுமோ அப்படி ) தெரிகின்றது! இதை சரி செய்ய வழி உள்ளதா?

  3. மாவுருண்டை - அருமையான கேள்வி, இப்படியான விஷயங்களை யாராவது கேட்கமாட்டார்களா என்று காத்திருந்தேன்.

    ஐபாடில் தமிழில் பாடல் பெயர் வரவைக்க முடியும். கொஞ்சம் சித்து வேலைகள் செய்ய வேண்டும். இது கொஞ்சம் சிக்கலான விஷயம் என்பதால் இந்தத் தொடரின் கடைசியில் எழுதுகிறேன்.

  4. வணக்கம் வெங்கட்.
    என் பெயர் பா. தினேஷ் பாபு. பார்வை மாற்றுத்திறனாளி
    உங்கள் கட்டுரை விலக்கம் மிக நன்று
    ஆனால் நீங்கள் இணைத்த பதிவிரக்கம் ஃபைல்கள் இமேஜ் ஃபைலாக இருப்பதால் எங்களைப்போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் எவ்வகையில் பயன்பெரமுடியும்
    இன்றைக்கு உலகிலேயே அதிக அலவில் பார்வை மாற்றுத்திறனாளிகல் எழிமையாக இசை உருவாக்கத்திற்காகவும், மற்றும் இதர பயன்பாட்டிற்காகவும் இந்த Audacity மென்பொருலை பயன்படுத்துகின்றார்கள்
    எனவே நீங்கள் கூறும் விலக்கங்கள் 90% மாற்றுத்திறனாளிகளுக்கெ பயனுள்ளதாக இருக்கும்.
    அதனால் இன்நும் எழிமையாக புறியும் வகையில் அடுத்த பதிவை பதிவிடுங்கள்
    நீங்கள் முக புத்தகத்தில் இருந்தால் என்னோடு இணைந்துகொள்ளுங்கள்
    நான் உங்களோடு இன்னும் சில கருத்துகளை பகிர ஏதுவாக இருக்கும்
    http://facebook.com/djdineshbabu.djremixer007
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *