சென்ற பகுதியில் ஒலிநாடாவிலிருந்து எப்படி கணினிக்கு மாற்றுதல் என்று பார்த்தோம். ஒலிநாடாவை கணினியில் பதிவு செய்யும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே கோப்பாக சேமிக்கப்படும். தொடரின் இந்தப் பகுதியில் அவற்றை எப்படித் தனித்தனி பாடல்களாக வெட்டியெடுக்கலாம் என்பதையும், கோப்புகளை எப்படி எம்பி3 ஆக மாற்றலாம் என்பதையும் பார்க்கலாம்.

தேவையான கருவிகள்:

சென்ற பகுதியில் நாம் சேமித்த இசைக் கோப்பு. ஒரு ஒலிநாடா (அல்லது ஒரு இசைத்தட்டு) முழுவதையும் கணினிக்கு மாற்றும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில் (A Side) இருக்கும் எல்லா பாடல்களும் ஒரே கோப்பாக சேமிக்கப்படும். இதிலிருந்துதான் நாம் ஒவ்வொரு பாடலையும் தனித்தனியாகப் பிரிக்கப் போகிறோம்.

அடாசிட்டி நிரலி, அடாசிட்டியில் எம்பி3 துணைக்கருவி. (இவற்றை எங்கிருந்து பெறுவது, எப்படி நிறுவுவது என்பது சென்ற பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது).

செய்முறை:

இந்தப் பகுதியையும் இதற்குப் பிறகு வரும் முக்கியமான பகுதிகளையும் நீங்களும் உடனடியாக செய்து பார்க்க வசதியாக ஒரு மாதிரி கோப்பை இங்கே தருகிறேன். இதை தரவிறக்கி உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்தக் கோப்பின் அளவு மிகவும் சிறியது. இதில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒன்றன்பின் ஒன்றாக வரும் அறிவிப்புகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் இதை வெட்டி தனித்தனி கோப்புகளாக எடுக்கப் போகிறோம். இதற்கு அடுத்த பகுதியில் இதில் இருக்கும் இரைச்சல்களை நீக்கி இதன் தரத்தை எப்படி உயர்த்தலாம் என்று பார்க்கப் போகிறோம்.

ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றும் பொழுது கோப்புகள் பொதுவில் WAV வடிவில் சேமிக்கப்படும். WAV கோப்புகள் அளவில் பெரியவை. எம்பி3 ஆக மாற்றும்பொழுது இதன் அளவு வெகுவாகக் குறையும். இங்கே இறக்கிக் கொள்ள வசதியாக கோப்பின் அளவைச் சிறிதாக்கி எம்பி3 வடிவில் தருந்திருக்கிறேன்.

two_parts_split.jpgமுதலாவதாக அடாசிட்டி நிரலியைத் திறந்துகொள்ளுங்கள். சேமித்து வைத்திருக்கும் intro.mp3 கோப்பை File > Open மூலம் திறக்கவும். (அல்லது அந்தக் கோப்பை அடாசிட்டி சாளரத்தில் விசையெலியால் இழுத்துப் போட அது திறக்கும்). இப்பொழுது அடாசிட்டியில் ஒரு அலைத் தொகுப்பைப் பார்க்க முடியும். இந்த அலைவடிவத்தில் 28 நொடியிலிருந்து 32 நொடிவரை எந்த ஒலியும் இல்லாமல் வெறும் இரைச்சல் மட்டுமே பதிவாகியிருப்பதைப் பார்க்க முடியும். இந்த இடத்தில்தான் இந்தி அறிவிப்பு முடிந்து ஆங்கில அறிவிப்பு தொடங்குகிறது. (இதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றால் Zoom In ஒளிப்பெருக்கி மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்).

கருவிப் பட்டியில் இருக்கும் | வடிவ Selection Tool கொண்டு தனியாக வெட்டியெடுக்க வேண்டிய பகுதியை மட்டும் தெரிந்தெடுக்கவும். இப்படித் தெரிவு செய்யும்பொழுது அந்தப் பகுதியின் நிறம் மாறுவதைப் பார்க்கலாம். இதை Edit > Copy மூலம் நகலெடுக்கவும்.

இனி புதிதாக File > New மூலம் ஒரு வெற்று சாரளத்தைத் துவக்கிக் கொள்ளவும். இதில் Edit > Paste மூலம் நகலெடுத்ததை ஒட்டவும். இதன் கோப்பளவு கிட்டத்தட்ட 29 நொடிகளாக இருப்பதைப் பார்க்க முடியும். இந்தப் புதிய கோப்பை Wav கோப்பாகவோ அல்லது நேரடியாக Mp3 கோப்பாகவோ சேமிக்க முடியும்.

எம்பி3 ஆக சேமிக்க முற்படும்பொழுது அதில் பிரச்சனை ஏற்பட்டால் எம்பி3க்கான துணைக்கருவி உங்கள் கணினியில் இல்லை அல்லது அதன் இருப்பிடத்தை அடாசிட்டியால் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்ற பகுதியில் இதைப் பற்றி விளக்கப்படிருக்கிறது.

ஒரு ஒலிநாடாவிலிருக்கும் எல்லா பாடல்களையும் இப்படித் தனித்தனி பாடல்களாக பிரித்தெடுத்து சேமிக்க முடியும். சில சமயங்களில் நாடாவில் ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்கும் இடையே தெளிவான வெற்றிடம் இல்லாவிட்டால் அடாசிட்டியில் திறந்தவுடன் அதை இசைத்துப் பார்த்து இடைவெளியைக் கண்டுபிடிக்க முடியும்.

இனி அடுத்த பகுதியில் கோப்புகளில் இருக்கும் இரைச்சல்களை எப்படிக் குறைக்கலாம் என்று பார்ப்போம்.