ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு என்று பொதுப்படையாக எழுதியிருந்தாலும், இந்த முறையை பின்வருவனவற்றுக்கும் எந்த மாறுதலும் இல்லாமல் பயன்படுத்த முடியும்; ஒலிநாடா, எல்.பி இசைத்தட்டு, பல்வேறுதரப்பட்ட ஒலிநாடக்கள்

இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொதி அடாசிட்டி என்பது. இதன் முக்கிய சிறப்புகள்;

 1. இது முற்றிலும் இலவசமான திறமூல நிரலி. காசு கொடுக்கத் தேவையில்லை. வருங்காலத்திலும் இலவசமாகவே இருக்கும்.
 2. இது லினக்ஸ், விண்டோஸ் இரண்டு இயக்குதளங்களிலும் செயல்படக்கூடியது.
 3. ஒலி திருத்திகளிலேயே மிகச் சிறந்த பொதிகளில் இதுவும் ஒன்று. இதில் பல அற்புதமான ஒலி திருத்த வேலைகளைச் செய்யமுடியும்.
 4. பேச்சையோ, பாடலையோ நேரடியாகக் கணினியில் பதிவு செய்ய முடியும்.
 5. இருவேறு பாடல்களை ஒட்ட முடியும், ஒரு பாடலை இரண்டாகப் பிரிக்க முடியும். இரண்டு ஒலிக்கோப்புகளை ஒன்றன்மீது ஒன்றாக ஒட்டி ஒரே பாடலாக முடியும். இது இசைக்கலவைகளைத் தயாரிக்க உதவும்.
 6. இது பல்வேறு கோப்பு வடிவங்களைக் கையாளவல்லது.
 7. இதன் பல பொருத்திகளைக் கொண்டு பாடல்களில் இருக்கும் இரைசல்கள், ஒலித்தட்டுகளின் கீறல்களால் உண்டாகும் கரகரப்புகளை எளிதாக நீக்க முடியும்.

தேவையான கருவிகள்:

மாற்ற வேண்டிய ஒலிநாடா, ஒலிநாடா இயக்கி, கணினி, ஒலிநாடா இயக்கியிலிருந்து வெளிவரும் இசையைக் கணினியில் உள்ளே சேர்க்க இணைப்புக் கம்பிகள் தேவை. இது உங்கள் ஒலிநாடா இயக்கியில் ஒலியை வெளியே தர எந்த வகையான வசதி இருக்கிறது என்பதைப் பொருத்து மாறும். முக்கியமாக இதில் இரண்டு வகைகள் உண்டு.

ஸ்டீரியோ என்று சொல்லப்படும் இரு ஓடை இசை வகையில் இட, வல ஒலிகள் தனித்தனியே வெளியே வரும். இவற்றை இரு வேறு ஒலிப்பான்களில் இணைத்தால் துல்லியமான இசையைக் கேட்க முடியும். மிக நன்றாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தால், எப்படி ஒரு இசையரங்கில் அமர்ந்து கேட்கும்பொழுது அரங்கம் முழுது இசை அதிர்வுகளை அனுபவிக்க முடிகிறதோ அதே முறையில் ஒலிப்பதிவுகளிலும் இசையை அனுபவித்தல் சாத்தியம். கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தமிழில் வெளிவந்த பல திரையிசை, கர்நாடக இசை ஒலிநாடாக்கள் ஸ்டிரியோ முறையில் பதிவு செய்யப்பட்டவையே. மாறாக வானொலியில் வரும் பாடலை நீங்களாக ஒலிநாடாவில் பதிவு செய்து வைத்திருந்தால் அது மோனோ என்ற ஒரே ஓடையில் மாத்திரமே பதிவாகியிருக்கும். நாம் இங்கே ஒலிநாடாவிலிருந்து முழுமையான தரத்திற்கு டிஜிட்டல் வடிவத்தில் மாற்றப் போகிறோம். எனவே, அதற்கான முறையான இணைப்புகள் மிகவும் முக்கியம்.

சராசரியான ஒலிநாடா இயக்கியில் வல, இட ஒலிகளை ஒன்றாக ஒரே இணைப்பில் தருவார்கள். பெரும்பாலான வாக்மேன் வகை இயக்கிகளில் தலையில் பொருத்திக் கொண்டு கேட்பதற்காக இருக்கும் தலைபேசி இணைப்புகளும் இவ்வகையாக இருக்கும். இந்தத் துளையின் அமைப்பைப் படம் -1 ல் பார்க்கலாம். இதற்கான இணைப்புக் கம்பியின் வடிவத்தைப் படம் – 2 ல் காட்டப்ப்பட்டிருக்கிறது. இந்த வகை இணைப்பு Stereo Mini Plug என்று அழைக்கப்படும்.

உயர்தர ஒலிநாடா இயக்கிகளில் வல, இட ஒலியோடைகளைத் தனித்தனியான துளைகள் வழியே வழங்குவார்கள். (படம் 3). இதற்கான இணைப்புக் கம்பி படம் 4-ல் இருப்பதுபோலத் தேவைப்படும். இதன் ஒரு முனையில் நாம் ஏற்கனவே சொன்னதுப்போல Stereo Mini Plug-ம் மறு முனையில் வல, இட ஒலிகளுக்குத் தனித்தனியாக இரண்டு RCA Plug-களும் இருப்பதைப் பார்க்கலாம். எனவே படத்தில் காட்டப்பட்டிருக்கும் இணைப்பிற்கு RCA to Stereo Mini Connector என்று பெயர்.

walkman.jpg stereo_mini_plug.jpg tape_lineout.jpgrca_mini.jpg

இரண்டு வகையான இணைப்புகளிலும் மறுபுறம் ஒரே மாதிரியாகக் காட்டியிருக்கிறேன். இதற்கான காரணம், பெரும்பாலான கணினிகளில் ஒலியே உள்ளிடும் வசதி இரண்டு ஓடைகளுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கும். மிக உயர்தர ஒலி அட்டைகளைக் கொண்ட கணினிகளில் வல, இட ஒலியோடைகளுக்குத் தனித்தனியான உள்ளிடும் வ்சதி இருக்கும்.

நிரலியைப் பெறும் முறை

அடாசிட்டி மென்கலன் மிகவும் முக்கியமானது. இதைக் கொண்டு பல விடயங்களை நாம் செய்யப் போகிறோம். இதை அடாசிட்டியின் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். CDex போலவே இதையும் கணினியில் நிறுவாமல் சாதாரணமாக ஒரு அடைவில் விரித்து வைத்தால்கூடப் போதும். இந்த வகை பொதியை இங்கிருந்து பெறலாம்.

இதை நிறுவியவுடன் mp3 மாற்றங்களுக்குத் தேவையான கருவியையும் இறக்கி அடாசிட்டி நிறுவிய அதே அடைவில் சேமிக்கவும்.

செய்முறை

இந்தப் பகுதியில் ஸ்டீரியோ ஒலியைத் துல்லியமாக இரண்டு ஓடைகளில் எப்படிப் பதிவு செய்யலாம் என்பதை மாத்திரமே விளக்கப் போகிறேன். பழைய பாடல்களையும் பேச்சுகளையும் மோனோவில் பதிவு செய்து எப்படி கோப்பின் அளவைக் குறைக்கலாம் என்பதை பற்றித் தனியாக இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம்.

  (அ) இணைப்புகள் ஏற்படுத்தும் விதம்

உங்கள் ஒலிநாடா இயக்கியில் Line Out இருந்தால் அதைப் பயன்படுத்தவும். இதில் இரண்டு ஓடைகளுக்கும் பொதுவான ஒரே துளை இருந்தால் பெரும்பாலும் அதில் இட வல ஓலிகளைத் தனித்தனியாக மேலே சொன்ன Stereo Mini Plug வழியாகப் பெறலாம். இரண்டுக்கும் தனித்தனியாக Line Out இருந்தால் RCA to Stereo Mini Plug பயன்படுத்தலாம்.

மறுபுறத்தில் Stereo Mini Plug-ஐ உங்கள் கணினியின் ஒலியட்டையின் Line-in துளையில் பொருத்தவும்.

இப்பொழுது ஒரு ஒலிநாடாவை இயக்கி உங்கள் கணினியின் ஸ்பீக்கர்களில் பாட்டு கேட்பதை உறுதி செய்து கொள்ளவும். அப்படி கேட்கவில்லை என்றால் கணினியின் Control Panel > Sound and Audio Devices > Audio பட்டியைத் திறக்கவும் (படம் 5). அதில் Sound Playback > Volume ஐச் சொடுக்கினால் Master Volume என்றொரு சாளரம் திறக்கும். அதில் போதுமான அளவுக்கு Speaker Volume இருக்கிறதா என்பதையும், போதுமான அளவிற்கு Line-in Volume இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும். மேலும் Line-in க்குக் கீழே Mute தெரிவு செய்யப்படாமல் இருக்கிறதா என்றும் உறுதி செய்து கொள்ளுங்கள். (படம் 6)

device_properties.jpgmaster_vol.jpg

இவை எல்லாம் சரியாக இருந்தால் கட்டாயமாக இப்பொழுது உங்கள் கணினி ஸ்பீக்கர்களில் பாடல் கேட்கும். இல்லையென்றால் உங்கள் ஒலிநாடா இயக்கியின் ஒலியளவை அதிகரித்துப் பார்க்கவும். இதைச் சரியாகச் செய்யமுடியவில்லை என்றால் மேலே சென்று எந்தப் புண்ணியமும் இல்லை. எனவே, மீண்டும் அனைத்து இணைப்புகளையும் உறுதி செய்துகொள்ளவும்.

  (ஆ) அடாசிட்டியின் தெரிவுகள்

அடாசிட்டி நிரலியைத் துவக்கவும். பிறகு Audacity > Edit > Preferences ஐத் திறக்கவும். இதில் முதலாவதாக இருக்கும் Audio I/O ஐத் திறந்து அதில் Channels என்பதில் 2(Stereo) என்று தெரிவு செய்யவும். இப்படிச் செய்யவில்லை என்றால் இட-வல ஒலிகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரே ஒடையில் பதிவு செய்யப்படும். இந்தத் தெரிவைச் சேமிக்கவும். (படம் 7).

இனி அடாசிட்டியின் பொதுச் சாளரத்தில் வலது மேற்புறத்தில் இருக்கும் தெரிவில் Line-in என்பதைத் தெரிவு செய்யவும். இது நீங்கள் பதிவு செய்யப் போவது வெளியிலிருந்து கணினியின் Line-in துளைவழியாக உள்ளே வரும் இசையை மாத்திரம் என்பதை உறுதி செய்யும்.

audacity_pref_1.jpgaudacity_controls.jpgaudacity_record.jpg

  (இ) பதிவு செய்யும் விதம்

இப்பொழுது உங்கள் கணினியில் அடாசிட்டி திறக்கப்பட்டு மேற்சொன்ன தெரிவுகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். கூடவே பாடல் இப்பொழுது உங்கள் கணினியின் ஒலிபெருக்கியில் இசைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இனி, படம் – 8-ல் காட்டியிருக்கும் பொத்தான்களில் இறுதியாக இருக்கும் சிவப்பு வட்டத்தைத் தெரிவு செய்யவும். (இதன் மேல் விசையெலியைக் கொண்டு சென்றால் Record என்று உதவிச் சொல் தெரியும். Record பொத்தானில் அழுத்தினால் உடனே இரண்டு ஓடைகளில் பாடல் பதிவாகத் துவங்கும். (படம் 9) இப்படி ஒலியலைகளின் வடிவம் உங்கள் கணினியில் தெரியத் தொடங்கினால் “ஹுர்ர்ரே..” என்று கத்தலாம். இந்தத் தொடரிலேயே மிகவும் சிக்கலான காரியத்தை நீங்கள் சரியாகச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பதிவு செய்வதை நிறுத்தக் கட்டுப்பாடுகளில் இருக்கும் மூன்றாவதாக இருக்கும் Stop ஐச் சொடுக்கவும். இனி தொடர்ந்து பாடல் உங்கள் கணினியில் ஒலித்துக் கொண்டிருந்தாலும் பதிவு செய்யப்படாது. ஒழுங்காகக் பதிவாகியிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள, ஒலிநாடா இயக்கியிலிருந்து கணினிக்குத் தரப்பட்ட இணைப்பை நீக்கி விட்டு அடாசிட்டியின் கட்டுப்பாடுகளில் இருக்கும் முக்கோணப் பொத்தானைச் சொடுக்கவும் இப்பொழுது பதிவு செய்யப்பட்ட பாடலைக் கணினியில் கேட்க முடியும்.

  (ஈ) சேமிக்கும் விதம்

இனி File > Save Project சென்று ஏதாவது ஒரு பெயரில் இதைச் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

இந்தப் பகுதில் இவ்வளவுதான். ஒலிநாடாவில் இருந்ததைக் கணினிக்கு மாற்றுவதுதான் இங்கே நம் நோக்கம். இனி இதை எப்படி எம்.பி3 ஆக மாற்றுவது, ஒலிநாடாவில் தொடர்ச்சியாக இருக்கும் பாடல்களை எப்படித் தனித்தனிப் பாடல்களாக்குவது என்பதைப் பற்றியும், ஒலியின் தரத்தைப் பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மறக்காமல் உங்கள் அனுபவங்களையும் சந்தேகங்களையும் எழுதவும். சென்ற முறை போலில்லாமல் அடுத்த பகுதியை விரைவாக எழுத முயற்சிக்கிறேன்.