சன்னாசி ஸார்தான் பத்தவச்சார்.

1. உங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா?

நியாயமா? நான் உங்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது ;).

என்னவென்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லை. காரணம் எதிலுமே பெரிதாக ஒன்றும் சாதித்ததில்லை. நிரந்தரமாக என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள ஒரே ஒரு வரையறைதான் சாத்தியம் என்று நினைக்கிறேன்: எல்லாவற்றிலும் ஆர்வமும் எதிலும் சொல்லிக்கொள்ளத்தக்க அறிவும் இல்லாத ஒரு அற்ப ஜீவன்.

2. நீங்கள் எழுதிய ஜாஸ் குறித்த தொடர் நான் விரும்பிப் படித்த ஒன்று. Take Five நிச்சயம் கேட்டிருப்பீர்களென்று நினைக்கிறேன் – தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்த இந்தத் துண்டு 😉 குறித்து உங்களுடைய உடனடிக் குறிப்புக்கள்… இல்லையெனில், டேவ் ப்ருபெக்கின் பிற எந்த ஒரு இசைத்துண்டு பற்றியும்…

டேவ் ப்ரூபெக் ஐம்பது, அறுபதுகளில் கல்லூரிகளில் ஜாஸ்-ஸைப் பிரபலமாக்கியவர்களுள் முக்கியமானவர். நான் ப்ரூபெக் குறித்து அதிகம் வாசித்ததில்லை . கென் பர்ன்ஸ்-இன் PBS மெகாதொடரான ‘ஜாஸ்’- வழியாக மாத்திரமே நான் அவரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட டேக் ஃபைவ் இருக்கும் Time Out ஆல்பம் மற்றும் ப்ரூபெக்கின் வரலாறு என்ற நான்கு சி.டிக்களைக் கொண்ட தொகுப்பு என்னிடம் இருக்கிறது (பின்னது நண்பனிடமிருந்து சுட்ட எம்.பி3). என்னுடைய தொடரில் நான் அதிகம் எழுதிய கூல் ஜாஸ் வகையைச் சேர்ந்தவை ப்ரூபெக்கினுடையவை.
[youtube]http://www.youtube.com/watch?v=DDOgYw5-pNs[/youtube]
கட்டாயமாக Take Five ஜாஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்தான். ஆனால் இதை வெளியிட அவருடைய பதிப்பாளர்கள் மிகவும் தயங்கியதாகச் சொல்வார்கள். டேக் ஃபைவ் முதன் முதலாக ஜாஸில் ஐந்து தாளச் சுழற்சியில் இயற்றப்பட்ட இசை என்று சொல்வார்கள். இதன் வெற்றிக்குப் பிறகு இதேபோல ஒற்றைப்படை தாளச் சுழற்சிகளில் டேவ் நிறைய இசைத்திருக்கிறார். கர்நாடக இசையில் இது மிகவும் சர்வசாதாரணம் (ஹிந்துஸ்தானியிலும்தான்). மேற்கத்திய செவ்வியல் இசையில் மாத்திரமே பயின்றவர்களுக்கு இது விசேடமாகத்தான் தெரியும்.

கறுப்பர்கள் சங்கீதமான ஜாஸில் புகழ்பெற்ற வெள்ளையர்கள் மிகச் சிலரே (அந்தக் காலங்களில்). ஆனால் இவர்களில் எவரும் ஊடுடைப்பை நிகழ்ந்திவிடும் இசையைத் தந்தவரல்லர். இதற்கு முக்கிய காரணம் ஒன்றிரண்டாக இருந்த வெள்ளைக்காரர்கள் மற்ற மேதைகளுடன் இணைந்தது மிகவும் குறைவு. இதற்கு நல்ல உதாரணம் ப்ரூபெக்; மற்றவர்களுடன் அதிகம் கலந்ததில்லை.

இந்தப்பாடலில் ட்ரம்ஸ் வாசிக்கும் Joe Morello வைப் பற்றி கட்டாயம் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இதில் புதுமை என்று சொல்லப்பட்ட தாளகத்திக்கு உயிரூட்டியது மொரெல்லோதான். வழக்கமான ஜாஸ் ட்ரம்ஸ் தனி ஆவர்த்தனத்தில் இதில் கொடிகட்டிப் பறப்பார் மொரெல்லோ. ராக் இசை உலகில் ட்ரம்ஸ் தெய்வமாகக் கருதப்படும் கீத் மூன் (The Who) மொரெல்லோவை ஒரு perfect drummer என்று சொல்வார். இன்னொரு ட்ரம்ஸ் மேதை (என் முதல் தெரிவு – டொராண்டோவைப் பிறப்பிடமாகக் கொண்ட Rush ராக் இசைக்குழுவின்) நீல் பெர்ட் (Neal Peart) மொரெல்லோவைப் போல வாசித்துக் காட்டிய வீடியோ என்னிடம் இருக்கிறது. சாக்ஸ் வாசிக்கும் பால் டெஸ்மாண்ட்-ம் மிக முக்கியமான மேதை.

ஜாஸ் முதன்முதலாகக் கேட்கத்துவங்குபவர்களுக்கு டேக் ஃபைவ் ஒரு நல்ல ஆரம்பம். அதேபோல மென்மையான ஜாஸ் மாத்திரமே தேவைப்படுபவர்களும் ப்ரூபெக்கை அனுகலாம். கேட்டவுடன் டேவ் ப்ரூபெக்கை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் Horace Silver, Bud Powell, Lou Donaldson, Miles Davis, Thelonius Monk, Coltrane என்று நகர்ந்துவிடுவது நிச்சயம்.


3. மேலே நான் கொளுத்திப் போட்டதில் (The Redneck Grill: The Most Fun You Can Have with சுடர், Charcoal, and a Dead Animal) எவ்வளவு சதவீதம் உண்மையாக எழுதியது, எவ்வளவு சதவீதம் கேட்டதற்காக சும்மா அள்ளி விட்டது என்று நினைக்கிறீர்கள்? 😉 எது எவ்வளவு என்பதை தோன்றியபடி விளக்க முடியுமா?

இதெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு என் ஞானம் இன்னும் கூர்ப்படையவில்லை என்றே நினைக்கிறேன். அதிலும் டிங்கர்பெல் போன்ற எளுத்தாளரின் புத்தகத்தை என்னால் முழுமையாக வாசித்து முடித்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில்லை. அவர் வதிவிடம் தரும் பிரமிப்பிலிருந்தே மீளுவது சாத்தியமில்லை. ஈக்கோவின் ஊடுபாவு உள்ளுறையுரை இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும் நீங்கள் எதையோ சொல்ல ஆரம்பித்து உண்மையைக் கலந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் 🙂 “நான் வெஜிட்டேரியன்; நேக்கு முடியல்ல, விட்டுடுங்கோ” என்று காமேஸ்வரனை மேற்கோளிட்டு என் சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.

4. சமீபத்திய வலைப்பதிவு விவாதங்களில் மரபியலிலிருந்து சகல அறிவியலையும் சமூகப் பிரச்னைகள் குறித்தான விவாதத்தில் துணைக்கழைப்பது நடந்து வருகிறது. இம்மாதிரியான வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்க வாய்ப்பு இருப்பின், அனைத்துத் தரப்பினரும் வெகுஜன அறிவியலை அடிப்படையாகக் கொண்டு fake extrapolations செய்து தனது தேவைக்கேற்ப சமூகத்தின் கழுத்தில் மாலை போடவோ கத்தியால் அறுக்கவோ முயல்கிறார்கள் என்று தோன்றியதுண்டா? அறிவியலாளர் என்ற கோணத்தில், அறிவியலை சமூகக் காரணிகளுள் பொருத்த முயல்வதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

அபத்தக் களஞ்சியங்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெருகியிருக்கின்றன. அப்பா-சித்தி கள்ளத்தொடர்பை விளக்க ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி (இதைச் சும்மா ரிலேட்டிவிட்டி என்றுசொல்லிவிடக்கூடாது; ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி என்பதே உசிதம்) பயன்படுத்தப்படுகிறது. துறைபத ஜல்லியடிகள் சலிப்பூட்டுபவையாக ஆரம்பத்தில் இருந்தாலும் இப்பொழுது தாளமுடியாத எரிச்சல் ஏற்படுகிறது. சிலபேர் இதையே பிறவிக்கடனாகக் கொண்டுவருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கேட்பவன் கேணையனாக இருக்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை. தவறிப்போய் ஒன்றிரண்டுபேருக்குக் கொஞ்சம் விஷயம் தெரியும் என்று அவசியம் உணர்ந்திருந்தாலும்கூட அந்த இரண்டுபேராலும் நம் இரைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாது என்ற அசைக்கமுடியாத தன்னம்பிக்கை வலுத்துவருகிறது. தொடர்ந்து இதன் வெற்றியால் ஈர்க்கப்பட்ட மற்றவர்களும் கூச்சலில் சேர்ந்துகொள்கிறார்கள்.

இவர்கள் வெகுஜன அறிவியலைக்கூட அறிந்தவர்களில்லை என்றுதான் நினைக்கிறேன். இவர்களுக்குத் தேவையானது ஒன்றிரண்டு Jargons மாத்திரமே. இதற்கு மாற்றெதுவும் சமீபத்தில் நிகழ்ந்துவிடப்போவதில்லை என்ற அவநம்பிக்கை வலுத்துவருகிறது. நமக்கு இன்னும் அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும், நுட்ப மேலாண்மைக்குமே வித்தியாசம் தெரியவில்லை. தமிழகத்தின் முதன்மை விஞ்ஞானி என்று முடிசூட்டப்பட Peer reviewed அறிவியல் சஞ்சிகையில் ஒன்றில்கூட பதிப்பித்திருக்கத் (ஒன்றைக்கூட வாசிக்க என்றும் படிக்கலாம்) தேவையில்லை. இதைக் குறைக்க ஒரே வழி, நிறைய அறிவியல் விஷயங்களை வெகுஜனங்களுக்கு அறியத்தருவதுதான். ஆனால் அதற்கான முன்னெடுப்பு நம்மிடம் இல்லை.

இன்னொரு வழியில் பார்த்தால் நம்மிடைய சுயசிந்தனையுள்ள எழுத்தாளர்களே இல்லையோ என்று தோன்றுகிறது (நான் புனைவு எழுத்தாளர்கள் யாரையும் இங்கே விமர்சிக்கவில்லை). என்னுடைய இந்த ஆதங்கம் தத்துவம், சமூகம், அறிவியல் உள்ளிட்ட சகல துறைகளையும் உள்ளடக்கியது. இந்த வறட்சிதான் ஞானசூன்யங்கள் தங்களுக்குத்தாங்களே பரிவட்டம் கட்டிக்கொண்டு பல்லக்கில் பவனிக்கத் தயங்காத நிலையை உண்டாக்கியிருக்கிறது.

தனிப்பட்ட முறையில் தமிழ் வலைப்பதிவுகள் என்று பார்த்தால் ஆரம்பத்தில் எழுதிக்கொண்டிருந்த சுந்தவடிவேல், தங்கமணி, சுந்தரமூர்த்தி, அருள்செல்வன், ரோசா வஸந்த், ‘உருப்படாதது’ நாராயணன், கார்த்திகேயன், போன்றவர்கள் எழுதுவதை முற்றாக நிறுத்தியதோ அல்லது குறைத்துக்கொண்டதோ வலைப்பதிவு விவாதங்களின் பொதுத்தரத்தை வெகுவளவிற்குக் குறைத்திருக்கிறது என்று வருத்தமாயிக்கிறது. இரைச்சல்காரர்களைக் குற்றம் சொல்வதைவிட சிந்தனையாளர்களை ஊக்குவிப்பது மிகமுக்கியமானது. We can’t avoid noise level, but can certainly do something to increase the signal.


5. லேசர் துப்பாக்கி, முடிச்சு, சமையலறை, இரண்டு கழுதைகள் – இவற்றைக்கொண்டு அருள்செல்வன் ஒரு கார்ட்டூன் போட்டார் எனில் அதற்கான உங்கள் பின்னூட்டம் என்னவாக இருக்கும்? கார்ட்டூனில் என்ன இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை – பின்னூட்டத்தை மட்டும் சொன்னால் போதும்!!

லேட்டாடிச்சின்னு டீச்சர் பேப்பரப் புடுங்கிட்டாங்க….

  1. உங்களுக்கென நிலைத்துவிட்ட மதிப்பீடுகள் குறித்து சலிப்படைவதுண்டா? பிறரால் உருவாக்கப்பட்டவை என்றபொழுதும் உங்களால் மாற்றிவிடமுடியுமென்றால் இவற்றில் எதனை மாற்ற எத்தனிப்பீர்கள்?
  2. தமிழ் இலக்கியத்தில் புதிதாக ஆர்வம் கொள்வதாகக் கூறிக்கொள்ளும் ஒருவருக்கு நீங்கள் ஐந்து புனைவுகளையும் ஐந்து புனைவிலிகளையும் பரிசளிப்பதாக இருந்தால் அவை என்னவாக இருக்கும்? அவற்றுக்கான இரண்டுவரி அறிமுகத்தையும் எழுதுவீர்கள் என்றால் மகிழ்வேன்.
  3. நிகழ்வையோ படைப்பையோ அதன் காலத்தோடு பொருத்தாமல், நிகழ்கால மதிப்பீடுகளுக்கு மாத்திரமே உட்படுத்தித் தீர்பெழுதுபவர்களைப் பற்றிய உங்கள் விமர்சனம்?
  4. இலக்கியத்தைப்போலின்றி இலக்கணத்திற்குட்பட்ட இசை எப்படி இன்றளவும் நிலைத்திருக்கிறது?
  5. விஜய்க்கு ஏற்ற ஜோடியான கதாநாயகி யார்?