நான் நிறைய நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்த விஷயம் இது. இங்கே பாட்டு கேட்பதற்காக, படம் பார்ப்பதற்காக செல்பேசிகளை விற்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக கனடாவின் மூன்றாவது பெரிய செல்பேசி நிறுவனமான டெலஸ் செல்பேசிகளில் ஃபோர்னோ படங்களையும் விற்க முடிவெடுத்தது. அதற்கு கொஞ்சம் எதிர்ப்பு வரவே இப்பொழுது ஒத்திப் போட்டிருக்கிறது. பாட்டு, படம், ஃபோர்னோ இவை மூன்றுக்கும் அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகக் கூடிய சமாச்சாரம் ஆத்திகம். இதை இன்னும் செல்பேசிக்காரர்கள் பயன்படுத்தவில்லையே என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.

எத்தனைக் காலம்தான் இது இல்லாமலிருக்க முடியும். இஸ்ரேலில் ஒரு நிறுவனம் இப்பொழுது ‘கோஷர் ஃபோன்’ சிலவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வகையறா ஃபோன்களில் டங்குசிக்கு டங்குசிக்கு வகை அழைப்புமணிகள் இருக்காது. அதற்குப் பதிலாக இறைவனையோ இறைதூதரையோ போற்றும் பாடல்கள் உள்வரும் அழைப்பைச் சொல்லும். (நம்மூரில் இது அரோஹரா, கோவிந்தா, சரணம் ஐய்யப்பா, ஜெய்சாய்ராம் என்று இருக்கலாம். ரிலையன்ஸ் இதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது).

இது மிக அற்புதமான சந்தைப்படுத்தல் உத்தி. மதகுருமார்களால் ஆசிர்வதிக்கப்பட்டுவிட்டால் போதும், அவர்கள் வாரம்தோறும் நடக்கும் தொழுகைகளில் அதிதீவிரமாக இந்த செல்பேசிகளைச் சந்தைப்படுத்துவார்கள். இஸ்ரேலில் இதுபோன்ற கோஷர் செல்பேசிகளில் Kosher-to-Kosher அழைப்புகளின் கட்டணம் குறைவாக இருக்கிறதாம். இது இன்னமும் தீவிரமாக ஜனங்களை ஜோதியில் ஐக்கியப்படுத்தும்.

என்னுடைய இன்னொரு நெடுநாள் ஜோசியம் – யாராவது ஒரு புண்ணியவான் வாட்டிகனை சரிகட்டினால் ஜனங்களுக்கு ‘கத்தோலிக்க காண்டாம்கள்’ கிடைக்கும். பூனைக்கு மணிகட்டப்போகும் அந்தப் புண்ணியாத்மா யாரோ.