2006 ஆம் ஆண்டிற்கான இயல்விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர், நடிகர் ஏ.சி.தாசீசியஸுக்கு 2006 இயல் விருதை வழங்க, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேற்கத்தைய நாடக நுட்பங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை உண்டாக்கியவர் திரு தாசீசியஸ். அது பலரின் வரவேற்பைப் பெற்றதுடன், நவீன நாடகத்தில் பலரை ஈடுபடவும் வைத்தது.

இதற்கு முன்னர் இயல்விருது பெற்றவர்களின் பட்டியல்

2001 : சுந்தர ராமசாமி (இந்தியா)

2003 : கே. கணேஷ் (இலங்கை)

2004 : வெங்கட் சாமிநாதன் (இந்தியா)

2005 : பத்மனாப ஐயர் (ஐக்கியக் குடியரசு)

ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்தைய நுட்பங்களைப் பயின்ற அவர், தமிழ் நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு உள்ளோடி இருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார்.

அவருடைய பிச்சை வேண்டாம், பொறுத்தது போதும், கோடை, புதியதொரு வீடு, எந்தையும் தாயும், ஸ்ரீசலாமி போன்ற நாடகங்கள் வெகுவாகப் பாராட்டப் பெற்றவை.

லண்டனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய ஸ்ரீசலாமி நாடகம் ஆங்கில, ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேர அமைந்;த ஒன்று. அது சுவிஸ் நாட்டில் 36 தடவை அரங்கேறி உள்ளது. ஐரோப்பா, கனடா, தமிழ் நாடு ஆகிய நாடுகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளார். ஸ்விற்சலாந்து அரசு தனது 700 வது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும்; பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது.

கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் 2006 ஆம் ஆண்டு வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருதை அவருக்கு வழங்கி அவரைக் கௌரவிக்கத் தீர்மானித்துள்ளது. அவ்விழா வழமைபோல 2007 ய+ன் மாதம் ரொறொன்ரோ பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும்.

தற்பொழுது திரு தாசீசியஸ் இங்கிலாந்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இதற்கு முந்தைய இயல்விருதுகள் குறித்த என் பதிவுகள்:

பேரா. ஜார்ஜ் ஹார்ட்
பத்மநாப ஐயர்
வெங்கட் சாமிநாதன்