black_history_month.jpg தெகல்ஹாவில் வெளியான ஷிவம் விஜ்-ஜின் The stain that just won’t wash கட்டுரையை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரை இது. ஷிவம் ஆப்பிரிக்க மாணவர்கள் இந்தியாவில் எதிர்கொள்ளும் இனவெறியைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். கறுப்பினத்தவர் தவிர தில்லியின் சீனர்களும், ஏன் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவரும் தங்கள் உடலமைப்பினால் நேரடியாக அனுபவிக்கும் இனப்பாகுபாட்டைப் பற்றிச் சொல்கிறது இந்தக் கட்டுரை.

நான் இந்தியாவிற்கு வெளியே வசிக்கத் தொடங்கி 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இடைப்பட்ட இந்த நாட்களில் மூன்று முறை ஒருதடவைக்கு அதிகபட்சமாக மூன்று வாரங்களுக்கு மேல் இந்தியாவில் தங்கமுடிந்ததில்லை. எனவே இந்தியாவில் இப்பொழுது எந்த வீதத்தில் இந்தியரல்லாதவர் வசிக்கிறார்கள் (நிரந்தரமாக, தற்காலிக பணிகளில் மற்றும் மாணவர்களாக) என்று தெரியாது. நான் ஐஐஎஸ்ஸியில் படித்தபொழுது அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு இந்தியரல்லாத மாணவர்கள் இருந்திருப்பார்கள் (இதிலும் ஜெர்மனியரும், இரானியர், அமெரிக்கரும்தான்). கறுப்பினத்தவர் அல்லது சீனர்களைக் கண்டதில்லை. ஆனால் பெங்களூரில் ராமையா பொறியியல் கல்லூரியில் நிறைய நைஜீரிய மாணவர்கள் இருந்தது தெரியும். அங்கும் நிறைய இரான், இராக் மாணவர்கள் உண்டு. பொருளாதாரத் தாராளமயமாக்கலுக்குப் பின் பல கல்விக்கூடங்களில் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு மாணவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த எண்ணிக்கை இப்பொழுது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கும்.

இந்த நேரத்தில் விழிப்பூட்டும் இதுபோன்ற கட்டுரைகள் மிக அவசியம். ஷிவம் சொல்லியிருப்பதைப் போல நாம் ஆழ்மனத்தில் இனவெறி கொண்டவர்கள்தாம். சொல்லப்போனால் இதுகுறித்த எந்தவிதமான குற்ற உணர்வும் நமக்குக் கிடையாது. கறுப்பாயிருக்கும் என்னுடைய ஒன்றுவிட்ட தமக்கையைப் பெண்பார்க்க வந்த ஒரு குடும்பத்தினர் முகத்துக்கு நேராகவே “பொண்ணு நல்ல கறுப்புதான்; வைரத்தோடு, வைரமூக்குத்தி ரெண்டும் போட்டுடுவேலோல்யோ!” என்று சொன்னது இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது (வந்தவர்கள் குடும்பமும் அதே நிறம்தான் என்பது இதில் விசேடம்).

குறுகிய மனப்பான்மையில் நாம் யாருக்கும் சளைத்தவரல்லோம். பல நூறு ஆண்டுகளாக நாம் வர்ணாசிரமம் என்ற அழுக்கைச் சுமந்து திரிகிறோம்; சொல்லப்போனால் அதில் பெருமிதம் கொள்பவர்களும் நம்மில் நிறையவே உண்டு. (வர்ணாசிரமத்தில் இருக்கும் வர்ணத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஷிவம் சொல்கிறார்). பல்லடுக்குச் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தம்மைவிட மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதுவதைப் பார்க்க முடிகிறது. வடமாளுக்கும் வாத்திமாளுக்கும், வடகலைக்கும் தென்கலைக்கும், பலிஜா நாயுடுவுக்கும் கவர நாயுடுவுக்கும், வாண்டையாருக்கும் மேல்கொண்டாருக்கும், பறையருக்கும் பள்ளருக்கும் என்று இந்த அளவுக்குக் குறுகிய பிரிவு மனப்பான்மை வேறு சமூகங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

சாதியை, இனவேற்றுமையுடன் ஒப்பிடக்கூடாது என்று இந்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் போராடி, அதில் வெற்றியும் கண்டிருப்பதாகக் கட்டுரை சொல்கிறது. என்னைப் பொருத்தவரை சர்வதேச அளவில் பேசப்படும் நிறப்பிரிவினைவிட இந்தியாவின் சாதிக்கொடுமை பல மடங்கு மோசமானது. தலித் தலைவர்கள், மற்றும் சமூக அறிஞர்கள் உலக வரலாற்றிலிருந்து ஒப்புமைகள் கண்டு சாதியையும் இனப்பிரிவுடன் இணைத்து சர்வதேச அளவில் பேசப்படச் செய்யவேண்டும்.

ஷிவத்தின் பதிவுக்குக்கீழே கருத்துக்கள் வாயிலாக நியோ ஸ்போர்ட்ஸ் சானலின் விளம்பரங்களில் இனவெறிச் சாயல் குறித்த சுப்ரியாவின் இந்தப் பதிவையும் படிக்க நேர்ந்தது. உண்மையைப் பிரதிபலிக்கிறோம், இதெல்லாம் சும்மா தாமாஷ்க்கு என்று சொல்லிக் கொண்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஊடகங்களில் இதுபோன்ற விடயங்களைப் பரப்புவதை அரசாங்கம் தலையிட்டு நிறுத்த வேண்டும் (இதில் ஒன்றும் தவறு கிடையாது, கனடா போன்ற நாடுகளில் இவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன). சுப்ரியாவின் பதிவில் இந்தியாவில் வசிக்கும் ஒரு கறுப்பு மாணவர் மனம் நொந்து தன் நேர்கொண்ட அனுபவங்களைச் சொல்லியிருக்கிறார்.

கனடாவில் இந்த மாதத்தை கறுப்பர் இனவரலாறு மாதமாகக் கொண்டாடுகிறோம். பல்கலைக்கழகம், நூலகம் தொடங்கி காப்பிக் கடைகள் வரை பல கொண்டாட்டங்களும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளின் ஆதரவுடன் நடக்கின்றன. தாராளமயமாக்கலில் தனது கதவுகளை வெளிநாட்டவருக்குத் திறந்திருக்கும் இந்தியா ஆரம்பத்திலேயே வந்தாரை எப்படி வரவேற்பது, அரவணைப்பது என்பது குறித்து நம் மக்களுக்குத் தெருட்டவேண்டும்.