petermeter_1.jpg
வயகரா உட்கொண்டால் நீடித்து நிற்கும் என்று விளம்பரிக்கிறார்களே இதை எப்படி அளவிடுகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இதில் இரண்டு அளவீடுகள் இருக்கின்றன – காலம் மற்றும் விரைப்பின் அளவு. முதலாவது எளிது; சோதனையாளர் (அல்லது சோதனையாளினி) முப்பது ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு டிஜிட்டல் கடிகாரத்தைக் கையில் கட்டிக்கொண்டு மணிக்கட்டை சமாச்சாரத்தின் அருகில் வைத்துக்கொண்டு ‘சிவனே’ என்று பார்த்துக் கொண்டிருந்தால் துவண்டுவிழும் நேரத்தை நொடியில் நூறு புள்ளிக்குத் துல்லியமாக அளந்துவிடலாம்.

இரண்டாவது சமாச்சாரம்தான் கொஞ்சம் சிக்கலானது. பருமனில் எவ்வளவு பெருத்திருக்கிறது என்று அளக்க என்ன செய்வார்கள்? இதற்குப் பல கருவிகள் இருக்கின்றன. இவற்றில் முன்னோடி பினைல் ப்ளதிஸ்மோகிராஃப் (Penile Plethysmograph) என்பது. 1950 களில் செக்கோஸ்லோவாக்கியாவில் வயதுவந்த ஆண்கள் எல்லோருக்கும் இராணுவச் சேவை கட்டாயமாக இருந்தது. இதிலிருந்து தப்பியோட மிகச் சில வழிகளே சாத்தியாமாக இருந்தன; அவற்றுள் ஒன்று தன்னை தற்பாலர் (homesexual) என்று அறிவித்துக்கொள்வது. விரைவில் எல்லொரும் இதே பொய்யைச் சொல்லிக் கொண்டு போக, அவர்களின் தற்பால் நாட்டத்தைக் கருவி கொண்டு அளப்பது தேவையானது. அதற்காக குர்ட் ஃப்ராய்ண்ட் (Kurt Freund) என்பவர் வடிவமைத்ததுதான் இந்த ப்ளதிஸ்மோகிராஃப். இதற்கு பீட்டர் மீட்டர் (Peter Meter) என்ற செல்லப் பெயரும் உண்டு. ஃப்ராய்ண்டின் ஆரம்பகால வடிவம்தான் மேலுள்ள படத்தில் இருக்கிறது.

இதன் அடிப்படை அளவீட்டுக் கருவி தகவுமானி (Strain Gauge) . மருத்துவரிடம் இரத்த அழுத்தத்தை அளவிடச் செல்லும்பொழுது கையில் கட்டும் பட்டியைப் போல (அவ்வளவு பெருசு இல்லீங்கோ) கட்டிவிடுவார்கள். இந்தப் பட்டியினுள் ஒரு குழாயில் பாதரசம் அல்லது இண்டியம்/காலியம் கலவை நிரப்பப்பட்டிருக்கும். பின்னர் விரைக்கும் பொழுது இதில் ஏற்படும் மாற்றங்களினால் இதன் மின்னோட்டம் மாறுபடும். மின்னோட்டத்தை அளப்பதன் மூலம் ஆண்குறி விரைப்பை அளவிடலாம்.

petermeter_2.jpgபீட்டர் மீட்டரின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக இருக்கிறது. இதன் வடிவமைப்பின் ஆதார சாத்தியமாக “The dick never lies” என்று அடித்துச் சொல்கிறார்கள், ஆனால் இப்பொழுது அறிவியல்பூர்வமாக “The dick does lie; sometimes it even lies low” என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் தற்பாலர்களுக்கு எதிராக இந்தக் கருவி பெரிதும் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, கனடாவில் இராணுவத்திலோ, காவல் துறையிலோ ஒரு காலத்தில் தற்பாலர்களுக்கு அனுமதியில்லை. அந்தக் காலங்களில், படைக்கு ஆளெடுக்கும்பொழுது ஒரு தனியறையில் இந்த பீட்டர் மீட்ட்ரைப் பொருத்தி உட்காரவைத்து ஆணும் ஆணும் கலவியில் ஈடுபடும் படங்களைப் பார்க்கச் சொல்வார்கள். அகஸ்மாத்தாக பீட்டர் மீட்டர் ஊளையிட்டால் தேச சேவைக்குக் கொடுப்பினை இல்லை என்று மூக்கைச் சிந்திக்கொண்டே வெளியே வந்துவிட வேண்டியதுதான். ஆனால் இப்பொழுது கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த பீட்டர் மீட்டர் ‘கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது’. இருந்தபோதும் சீனா போன்ற நாடுகளில் இது இன்னமும் பயன்படுத்தப்படுகிறதாம். நவீன பீட்டர் மீட்டர் கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.

(“யோவ்… எப்படி அளக்குறாங்கன்னு சொல்றேன்னு சொல்லிபுட்டு இந்தக் கருவி செல்லாதுன்னு ஸொல்றியேய்யா, நாயமா . நெசமா எப்புடி அளக்குறாங்க?”- என்று கேட்பது காதில் விழுகிறது. இன்னிக்கி இம்புட்டுதான்; சரக்கு தீந்திடிச்சி. படிச்சிட்டு வந்து இன்னொரு நாளைக்கி சொல்றேன்).