auto2006_logo.jpg
இன்றைய Wired சஞ்சிகையில் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தேறிய நெடுந்தூர ஆட்டோ போட்டியைப் பற்றிய குறிப்பு வெளியாகியிருக்கிறது. இதை நான் முன்னர் படிக்கவில்லை (தமிழ் வலைப்பதிவுகளில் யாராவது இதைப்பற்றி எழுதினார்களா என்று தெரியவில்லை). தேடிப்பார்த்த பொழுது தி ஹிந்துவில் வெளியான இந்தச் செய்திக் குறிப்பு கிடைத்தது. wired -ல் இது வந்திருக்காவிட்டால் எனக்கு இப்படியொரு போட்டி நடந்தது தெரிந்திருக்க சாத்தியமில்லை.

மேற்கொண்டு தேடியதில் அந்த Indian Autorickshaw Challenge ன் இந்த வலைத்தளத்தில் ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தன. நான் பல வருடங்களாக இந்தியாவில் யாராவது இதுமாதிரி ஆட்டோ போட்டி நடத்தமாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்ததுண்டு. கடுமையான சவால்களுக்கு உள்ளாக்கும் Rally வகை போட்டிகளுக்கு ஆட்டோ மிகவும் ஏற்றது. மூன்றே சக்கரங்களைக் கொண்டிருப்பதாலும், அதனுடைய ஈர்ப்பு மையம் (Centre of gravity) மிக உயரத்தில் இருப்பதாலும் ஆட்டோக்கள் அடிப்படையில் ஆபத்தானவை; எந்த நேரமும் அவை கவிழக்கூடும். கூடுதலாக நம்மூரில் மேடுபள்ளங்கள் நிறைந்த சாலைகளும் (அல்லது சாலைகள் என்று அழைக்கப்படும் மேடுபள்ளங்களும்) ஆட்டோ ஒட்ட கூடுதல் சவால்களைத் தருவன. ராலி வகை போட்டி ஆட்டோவில் அற்புதமாக இருக்கும்.

auto2006_participants.jpg(கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த பொழுது ஆட்டோ ஓட்டுநர் திரு. ரவி எனக்கு நண்பரானார். முதன் முதலாக நான் ஆட்டோ ஓட்டிப்பார்த்த பொழுது மிகவும் ஜாக்கிரதையாக ஓட்டினேன். கிட்டதட்ட ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை. இரண்டாம் முறை ‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்ற மதப்பில் ரவி ஓட்டுவதைப் போல இடதுபக்கம் ஒடித்து உடனே வலதுபக்கம் ஒடிக்க முயல, ஆட்டோ கிட்டத்தட்ட நிலை இழந்து கீழே சரியவிருந்தது. என்னுடைய ஓட்டுநர் சீட்டில் உட்கார்ந்திருந்த ரவி நொடிப்பொழுதில் எழுந்து நிற்க ஆட்டோ பொத்தென்று சமநிலையில் தரையில் விழுந்தது. அதற்குப் பிறகு ரவி என்னிடம் ஆட்டோ கொடுக்கவேயில்லை).

என்னுடைய பலநாள் கனவு ஆட்டொ சாலஞ்ச் 2006 நிறைவேறியிருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கிட்டத்தட்ட 1000 கி.மீ. (சென்னை-கன்னியாகுமரி) இடையே ஆட்டோ போட்டியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தத் தளத்தையும், அதில் போட்டியிட்டவர்களின் நாட்குறிப்பு (வலைப்பதிவுகள்) வைத்துப் பார்க்கும் பொழுது 2006 ஆம் ஆண்டின் போட்டி மாபெரும் வெற்றி என்றே தோன்றுகிறது. இந்த வருடம் அதைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளை நடத்தவிருக்கிறார்கள்.

2007 மும்பை எக்ஸ்பிரஸ் போட்டி
என்று ஒன்று சென்னையில் துவங்கி, பெங்களூர், மங்களூர், கார்வார், பனாஜி, மஹாபலேஷ்வர் வழியாக மும்பையைச் சென்றடைய வேண்டும். இதனுடன் கூடவே சென்ற வருடத்திய அதே பாதையில் (சென்னை, மஹாபலிபுரம், பாண்டி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, குற்றாலம், கன்னியாகுமரி) இந்தவருடமும் கிளாஸிக் என்று பெயரிட்டு நடக்கவிருக்கிறது. சென்ற வருடத்திய போட்டியைவிட இந்தவருடம் இன்னும் அதிகம் பங்கேற்பும் சுவாரசியங்களும் இருக்கும் என்று நம்பலாம்.

பொழுதுபோக்கு, வீரச் சவால்கள் என்பது ஒருபுறமிருக்க இதுபோன்ற ராலிகள் வாகனங்களின் தரங்களை உயர்த்த பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக இந்த ராலிக்காக ஒரு போட்டியாளர் தன்னுடைய கியர் பாக்ஸில் சில மாற்றங்களைச் செய்யக் கூடும். அது போட்டியில் உதவியது என்றால், விரைவிலேயே இந்தியாவிலிருக்கும் பிற ஆட்டோ உற்பத்தியாளர்களும் வருங்கால மாடல்களில் அவற்றை அறிமுகப்படுத்துவார்கள். இப்படி, திறன் உயர்வு, பாதுகாப்பு, வடிவமைப்பு நேர்த்தி எனப் பல விதங்களிலும் நம்மூர் வெகுஜன வாகனமாகிய ஆட்டோவிற்கு இந்த ராலிகளின் கண்டுபிடிப்புகள் உதவ வேண்டும் என்பது என் ஆசை.