உலகமயமாக்கல் முழுப்பயனையும் தரத் தொடங்கிவிட்டது. இதற்குச் சரியான உதாரணம் சென்ற வாரத்தில் டாடா (மோட்டர், ஓட்டல்) சம்பந்தமாக வெளியாகியிருக்கும் பல செய்திகள். முதலாவதாக அமெரிக்காவின் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் என்ற சொகுசு ஓட்டல் குழுவுடன் கைகுலுக்க முன்வந்த டாடா ஹோட்டல் குழுமத்தின் முகத்தில் கரிபூச முயற்சிக்கப்பட்டது. ஓ.எ ஹோட்டல் மற்றும் சொகுசுக் கப்பல்கள் குழுமத்தின் தலைவர் பால் வைய்ட் “எங்கள் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சொகுசுத் துறையில் பல ஆண்டுகளாகப் பெயர் பெற்றது; டாடா நிறுவனத்தின் பெயரை எங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டால் எங்கள் பாரம்பரியப் பெயருக்குக் களங்கம் வந்து, எங்கள் வாடிக்கையாளர்களை இழப்போம். இது வர்த்தக ரீதியில் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்க்கு ஒத்துவராது என்று கடுதாசி எழுதியிருக்கிறார்.

இந்தக் கடுதாசியைப் பெற்றுக்கொண்ட டாடா ஹோட்டல் குழுமத் துணைத்தலைவர் கிருஷ்ண குமார், இதுபோன்ற அபத்தக் கடுதாசியை வர்த்தக உலகில் நான் கேள்விப்பட்டதில்லை என்றும், இதை எழுதியவருக்கு மனநிலை ஆலோசனை தேவை என்று தனக்கு உடனடியாகத் தோன்றியதாகவும் சொல்லியிருக்கிறார். டாடாவின் முன்வைப்பு மிக எளிதானது. “நாம் இருவரும் இணைந்து பணியாற்றலாம்; இருவருடைய தனித்தன்மைகளையும், திறமைகளையும் பகிர்ந்துகொண்டு ஒன்றாக இயங்குவது வர்த்தக ரீதியில் இருவருக்கும் பலன் தரும்” என்பது. அதாவது ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் பெயரை அழித்துவிட்டு டாடாவின் பெயரை அங்கே போடுவது ரீதியில் இல்லை. ஒன்றிணைந்து இயங்குவது மாத்திரமே முன்வைக்கப்பட்ட யோசனை. பால் வைய்ட்டின் கடிதம் முற்று முழுதான நிறவெறியின் வெளிப்பாடு என இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் பலரும் கொதித்து எழுதியிருக்கிறார்கள்.

இதை நிறவெறி என்று பாகுபடுத்தக் காரணிகள் இருக்கின்றன. ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்காரர் தனக்கு “பெத்த பேரு” இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தால் அது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது. உலகத்தின் உயர்தர ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதான காண்டே நாஸ்ட் ( Condé Nast Traveler US Readers’ Choice Awards) விருதைக் கடந்த ஐந்து வருடங்களாக ஆசிய ஹோட்டல்கள் ஒட்டுமொத்தமாக அள்ளிச் சென்றுகொண்டிருக்கின்றன. உதாரணமாக 2007 வருடத்தின் விருதுப் பட்டியலில் தலை பத்து ஹோட்டல்களில் மூன்று இந்தியாவைச் சேர்ந்தவை (தாய்லாந்து, சீனா, ஐக்கிய அரபுக் குடியரசு, போஸ்ட்வானா, தென்னாப்பிரிக்கா) எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டால் வெள்ளைக்கார நாடுகளுக்கு ஆறுதல் பரிசுதான். (கவனிக்கவும் இந்த விருதுக்கான நிறுவனங்களைத் தெரிவுசெய்பவர்கள் 90% வெள்ளைக்காரர்கள்தான்). பல துறைகளில் டாடாவின் தாஜ்மஹல் ஹோட்டல்களுக்கு முதல் பத்துக்குள் இடமிருக்கிறது. ஓ.எ.-ஐக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டுதான் தேடவேண்டும்.

ஹோட்டல் துறையில் டாடாவின் தாஜ் பெயருக்கு எந்த அளவிற்கு மதிப்பிருக்கிறது என்பதற்கு அமெரிக்காவின் கில்லாடி வர்த்தக முதலை டொனால்ட் ட்ரம்ப் அட்லாண்டாவில் கட்டும் தன் சொகுசு ஓட்டலுக்கு ட்ரம்ப் தாஜ் ரிஸார்ட் என்று பெயர் வைப்பது ஒன்றே போதும்.

* * *
மறுபுறத்தில் நொடித்துப்போயிருக்கும் ஜாகுவார், லாண்ட் ரேவர் சொகுசுக்கார் நிறுவனங்களை விற்க (நொடித்துக்கொண்டிருக்கும்) ஃபோர்ட் கடந்த ஆறுமாதங்களாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறது. பல சுற்றுகளுக்குப் பிறகு டாடா மோட்டார், மஹீந்திரா இரண்டும் (கூட அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முதலீட்டுக் குழுமம்) இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவிலிருக்கும் ஜாகுவார் விற்பனை முகவர்களின் குழு டாடாவிற்கு ஜகுவாரை விற்றால் (அமெரிக்கர்கள்) இவற்றை வாங்கமாட்டார்கள் என்றும் தங்கள் வியாபாரம் நொடித்துப்போகுமென்றும் – இதற்கும் மேலாக ஜாகுவாரின் பெயருக்குக் களங்கம் வந்துவிடும் என்றும் பயமுறுத்தியிருக்கிறார்கள்.

அஹோ, வாரும் பிள்ளாய்! உலகமயமாக்கல் வெள்ளமாகச் சுழித்துக்கொண்டு ஓடும்பொழுது கொஞ்சம் உங்கள் படகு கொஞ்சம் எதிர்த்திசையில் செல்வது தவிர்க்க முடியாதது. உங்கள் துடுப்புகளைக் கொஞ்சம் வலித்து நீரோட்டத்தின் போக்கிற்கு உங்களை மாற்றிக் கொள்வது உசிதமான காரியம். (இல்லாவிட்டால் பகவானின்மீது பாரத்தைப் போட்டு கரை ஒதுங்கப் பிரார்த்திக்கலாம்). சில வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனியின் டைம்லர் நிறுவனம் (இவர்களது டைம்லர் பென்ஸ் சொகுசுக்கார்களின் பட்டியலில் நிரந்த மேலிடங்களில் இருப்பது) சராசரி கார்களை மாத்திரமே தயாரிக்கும் அமெரிக்காவின் க்ரைஸ்லர் நிறுவனம் முழுகும் நிலையில் இருந்தபொழுது வாங்கி தரத்திற்குப் பெயர்போன டைம்லர் பெயரை க்ரைஸ்லர் முன்னால் சேர்த்துத் தூக்கி நிறுத்தியது. அப்பொழுது அமெரிக்கப் பத்திரிக்கைகள் தரம் மாத்திரமே தெரிந்த, விற்கத்தெரியாத பென்ஸ் நிறுவனம், அதிக எண்ணிக்கையில் விற்கவல்ல டாட்ஜ், ஜீப் உத்திகளினால் பலனடையும் என்றும், அமெரிக்கச் சந்தையில் பென்ஸ் அதிகம் விற்க உதவப்போவதால் இது க்ரைஸ்லரைக் காட்டிலும் டைம்லருக்குத்தான் அதிக லாபம் என்றும் வரிந்துக் கட்டிக்கொண்டு எழுதின. (டைம்லரின் ஜெர்மானிய நிர்வாகம் இப்பொழுது க்ரைஸ்லர் பெயர் தங்களுக்குப் பாரமென்றும் கழற்றிவிட்டுவிடலாம் என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறது). $2,500 டாலரில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்க முயற்சிக்கும் டாடாவின் வர்த்தத் திறமை ஜகுவாரைத் தூக்கி நிறுத்தாது என்பது வெள்ளைக்காரத் திமிர்தான்.

எப்படி ஹோட்டல் விஷயத்தில் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் பேச்சு அபத்தமானதோ அதேபோலத்தான் ஜகுவார் நிலையும். ஜகுவாரை வாங்கினால் நாளைக்கே டாடா அதைப் பெயர்த்து எடுத்துக்கொண்டுபோய் இந்தியாவில் நடப்போவதில்லை. அது தற்பொழுதைய இங்கிலாந்து தொழிற்சாலையிலிருந்தே இயங்கும். சொல்லப்போனால் அந்தத் தொழிற்சாலையில் இருக்கும் பிரிட்டிஷ் வேலைக்காரர்கள் டாடா இதை வாங்குவது தங்களுக்கு நல்லது என்று தெளிவாக அறிக்கை விட்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் (ஆட்டோ) நிறுவங்களில் ஒன்று டாடா. இதைத்தவிர கடந்த இரண்டு வருடங்களில் மிக அதிகமாகப் பிற நிறுவனங்களை வாங்கி இணைத்துவரும் டாடா மேற்கத்திய நிறுவனங்களைப் போல இல்லாமல் (உடனடியாக உள்ளூர் நிர்வாகத்தைக் கழற்றிவிட்டுத் தங்கள் ஆட்களைப் போட்டு தங்கள் பிராண்ட்க்கு மாற்றிக்கொள்வது) டாடா மிக மெதுவாகத்தான் செயல்படுகிறது. வாங்கிய நிறுவனத்தின் ஆட்களையும் நடைமுறைகளைகளையும் மிக மெதுவாகத் துல்லியமாகக் கணித்துப் பிறகுதான் மாற்றங்களைச் செய்கிறது. இந்த முறையினால் விற்கப்படும் ஜகுவாரில் அதிர்வுகள் மிகக் குறைவாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஜகுவாரின் சந்தை அமெரிக்காவில் மாத்திரமில்லை. ஐரோப்பாவில் பெருமளவில் இருக்கும் அது நாளை வேகமாக வளர்ந்துவரும் ஆசியச் சந்தையில் நிலைக்க டாடாவின் நிர்வாகம் உதவும் என்பது ஜகுவார் தொழிலாளர்களின் நம்பிக்கை.

* * *

மிகமோசமாகச் சரிந்துகொண்டிருக்கும் அமெரிக்கச் சந்தையின்மீது உலக அளவில் பல நாடுகளுக்கு நம்பிக்கைக் குறைந்துவருகிறது. கடந்த ஒருவருடத்தில் கனடாவில் முற்று முழுதாக அமெரிக்கப் பொருளாதாரத்துடன் பிணைந்திருக்கும் கனேடியப் பொருளாதாரத்தைத் திசைதிருப்ப முயற்சிகள் துவங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த நிலையில் ஒண்டாரியோ மாகாணத்தில் உலோகக் கம்பெனிகளை வாங்கும் எஸ்ஸார், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவாக இருந்தாலும், அல்பெர்ட்டாவில் எண்ணெய் நிலங்களை வாங்கும் சீன நிறுவனமாக இருந்தாலும், நோவா ஸ்கோஷியாவில் துவக்கப்படும் ரான்பாக்ஸி மருந்துத் தயாரிப்பாக இருந்தாலும் கனடாவில் பொதுவான உற்சாகம் தென்படுகிறது. வழமையான சிட்டி பேங்கை விட்டுவிட்டு ஹாங்காங்கின் HSBC இந்தியாவின் ICICI Bank போன்றவற்றை நிமிர்ந்து கவனிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற நிலையில் அமெரிக்க ஜகுவார் விற்பனையாளர்களின் பேச்சை யாரும் காதில் வாங்கிக் கொள்ளப்போவதில்லை.

* * *
இதையெல்லாம் ஏற்கனவே எங்கோ கேட்டதுப்போலத்தான் இருக்கிறது. அறுபது, எழுபதுகளில் அக்ரஹாரங்களில் பிறசாதியினர் வீடுவாங்கத் தலைப்பட்டபொழுது ஹீனமாக அதிருப்தி முணுமுணுத்த வைதீகக் குரல்களாகத்தான் அமெரிக்காவின் குரல் ஒலிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல : Resistance is Futile.

இவையெல்லாம் டாடாவை உசுப்பிவிட்டு அவர்கள் இன்னும் திறமையாக, வேகமாக, செயல்படத்தான் உதவப்போகின்றன என்று தோன்றுகிறது. டாடா மிட்டலின் புத்தகத்திலிருந்து படித்துச் செயல்பட வேண்டும். லஷ்மி மிட்டல் பிரெஞ்சு ஸ்டீல் நிறுவனமான ஆர்ஸலரை வாங்க முற்பட்டபொழுது அதன் தலைவர் இப்படித்தான் சொன்னார். உயர்தர வாசனாதி திரவியத்தில் நீரைக் கலப்பதுபோன்றது மிட்டல் ஆர்ஸலரை வாங்க முயற்சிப்பது என்று. மிட்டலை மட்டம் தட்டினார் மிட்டல் ஒதுக்கப்பட்ட கழிவு உலோகங்களைச் சுத்திகரிக்கும் நிறுவனத்தைத் துவங்கி முன்னேறியவர்; ஆர்ஸலர் உயர்தர ஸ்டீலைத் தயாரிக்கும் நிறுவனம் என்பதாக மிட்டலின் முகத்தில் காரித்துப்பாத குறையாகச் சொல்லப்பட்டது. சற்றும் சளைக்காமல் மிட்டல் ஆர்ஸலரை வளைத்துபோட்டார்; அதன் பிறகு அந்த நிறுனத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்திருக்கிறது.

டாடா இன்னும் மிட்டல் அளவிற்கு தீவிரமாகச் செயல்படத் துவங்கவில்லை. அதற்கான தருணம் இப்பொழுது வந்துவிட்டது. நட்புரீதியாக இணைந்து செயல்பட ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தயாரில்லை என்று தெரிந்தால், அதைச் சுலபமாக வாங்கிப்போட டாடா ஹோட்டலிடம் நிறையவே பணமிருக்கிறது. தேவைப்படும்பொழுது அதிரடி கையகப்படுத்தும் உத்தியைச் செயல்படுத்த வேண்டியது மிக முக்கியமான வர்த்த உத்தி.

* * *
உலகமயமாக்கலைப் பற்றி வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் அமெரிக்கப் பத்திரிக்கைகள் இப்பொழுது வேறுவிதமான பிரச்சார உத்திகளில் ஈடுபடுகின்றன. உலகம் தட்டையாகிறது என்று எழுதிய நியூயார்க் டைம்ஸ்ஸின் தாமஸ் ஃப்ரீட்மான் இப்பொழுது டாட்டைவை நிறையக் கார் தயாரித்து உலகத்தை மாசுபடுத்த வேண்டாம் என்று நெஞ்சுருக வேண்டுகோள் விடுக்கிறார். இந்த மனுஷன் சூழியல் சமாச்சாரங்களையெல்லாம் அமெரிக்காவை முன்வைத்து எழுதத் துவங்கலாம். அங்கே சுத்தப்படுத்த மாசு நிறையவே இருக்கிறது.