நண்பர் உமர் மறைவு

என்னால் சமீப காலமாக அதிகம் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. எழுதுவதும் நெருக்கியடிக்கும் வேலைகளுக்கிடையே சாத்தியமில்லாமல் இருக்கிறது. இன்று எதேச்சையாக தமிழ்ப்பதிவுகளைப் படிக்கலாம் என்று ஆரம்பித்தபொழுது இந்த அதிர்ச்சிதரும் செய்தி கண்ணில்பட்டது.

தேனீ யுனிகோட் என்ற எழுத்துருவை வடித்து இலவசமாகத் தந்த நண்பர் திரு. உமர் மறைந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. சொல்லமுடியாத வேதனை மனதைப் பிழிகிறது. இது சற்றும் எதிர்பாராத விதத்தில் வந்து தாக்கியிருக்கும் செய்தி. அவரைப் பிரிந்து தவிக்கும் அவரது உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.

உமருடன் எனக்கு அதிகம் பரிச்சயம் கிடையாது. ஒன்றிரண்டு முறை தனிப்பட்ட மடல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் தேனி எழுத்துரு சம்பந்தப்பட்டவையே. தமிழ் லினக்ஸ்க்கு யுனிகோட் எழுத்துருக்கள் தேவைப்பட்ட சமயத்தில் நான் பல எழுத்துரு படைப்போர்களைத் தொடர்புகொண்டு அவர்கள் படைப்பை க்னூ பொது உரிமத்தின்கீழ் வெளியிட முடியுமா என்று கேட்டு வந்தேன். அப்படித் தொடர்புகொண்டவர்களிலேயே மிகவும் அதிக ஆர்வத்தைக் காட்டி முன்வந்தவர் திரு. உமர். தமிழில் யுனிகோட் எழுத்துருக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் திரு உமருக்கு முக்கிய பங்குண்டு. பல தளங்களில் உதவிக் கட்டுரைகள், மடலாடற்குழுக்களில் சந்தேகங்களுக்குப் பதில்கள் என்று உற்சாகமாக யுனிகோட்டை முற்செலுத்தியவர் உமர். அவரது மடல்களில் தொனிக்கும் ஆர்வமும் நேர்மையும் எனக்கு அவர்மீது மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் தந்திருக்கின்றன.

இனம் புரியாத வேதனை நெஞ்சை வதைக்கிறது. இதன் காரணத்தை விரிவாகச் சொல்லத் தெரியவில்லை.

மீண்டும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

தமிழுக்கு பங்களித்தவர் மரணம் அடைந்து விட்டார் தமிழுக்கு இழப்பே.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.

//தேனீ யுனிகோட் என்ற எழுத்துருவை வடித்து இலவசமாகத் தந்த நண்பர் திரு. உமர் மறைந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.//
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Leave a comment

(required)

(required)