இட ஒதுக்கீடு - பதிலும் சில விளக்கங்களும்
என்னுடைய முந்தைய பதிவில் இட ஒதுக்கீடு செயலாக்க வழிமுறைகளைப் பற்றிப் பேசும்பொழுது பயன்பெற்றவர்களை அதிலிருந்து வெளியேற்றும் வழியையும் ஆராய வேண்டும் என்று சொல்லியிருந்தேன். இதைப் பற்றிப் பேசும் “என் உளவியலை” கார்த்திக் விமர்சித்திருந்தார். அவருக்குப் பதிலாக இது.
{இந்தப் பதிவை நான் எழுதுவதால் நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். இதன் நடைமுறைகளின் ஒரே ஒரு கூறை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். சொல்லப்போனால் கார்த்திக் இதை எழுப்பியிராவிட்டால் நான் இதைப் பற்றி இப்படி விரிவாக எழுத முற்படமாட்டேன்.
உண்மையில் இட ஒதுக்கீட்டைப் பற்றி முன்னேறிய சாதியினரும், வெளியேறு சாத்தியங்களைப் பற்றி இட ஒதுக்கீட்டால் பலனடைவோரும்தான் ஆதரவாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே இதைப் பற்றி இந்தப் பதிவைத் தவிர நான் அதிகம் எழுதப் போவதில்லை.}
>வெங்கட் , இட ஒதுக்கீடு அமல்படுத்தபடும்போதே , எக்ஸிட் கிரைட்டிரியா பற்றி பேசவேண்டிய அவசியம் இருக்கும் உளவியலை சுட்டிக்காட்ட மட்டுமே இங்கு எழுதினேன்.
கார்த்திக் - எக்ஸிட் கிரைட்டிரியா பற்றி எழுதியது நான் மாத்திரமல்ல. இந்த இழையில் இதை முதலில் எழுதியது அருள் செல்வன் (அவரது பதிவின்கீழ்தான் நான் முன்பு இதைச் சொல்லியிருந்ததைச் சுட்டினேன்).
ஒரு சரியான வெளியேறு வகைமுறை (exit criteria) இல்லாததாலே பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு காலவரையற்றுப் போவதாக பொதுவில் உணரப்படுகிறது. இது தமிழகம் போன்ற மாநிலங்களைப்பொறுத்தவரை ஓரளவு உண்மையும் கூட.
தமிழகத்தின் தற்போதைய நிலைமையில் சில சாதிகளையாவது பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இப்பட்டியல் கல்வித்துறை பயன்படுத்தலுக்கு மட்டுமாவது மாற்றப்படவேண்டும்.
மிச்சமாகும் இடங்களை பொது இடங்களாக அறிவிக்காமல் மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கும், அட்டவணை சாதிகளுக்கும் பிரித்துக்கொடுக்கலாம். அதன்மூலம் இன்னும் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு இருந்தாலே பெரும் சதவீதத்தில் மிகப்பிற்படுத்தப் பட்டோரும் அட்டவணை சாதியினரும் பயன்பெற முடியும். ஓரிரு பத்தாண்டுகளில் தமிழகத்தில் இட ஒதுக்கு தேவைப்படாத நிலைக்குக்கூட இது வழிசெய்யலாம். த்மிழகம், கேரளம், ஆந்திரம், கருநாடகம், குஜராத், மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம்.
பின்னர் பத்ரி - creamy layer என்ற தலைப்பில் அதன் வேறு வடிவைச் சொன்னார்.
8. பிற்படுத்தப்பட்டோருள் Creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?
பதில்: சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதனை வேண்டுவதை பிற்படுத்தப்பட்டோர் தவறாக எடுத்துக்கொள்ள நேரிடலாம்.
ஒருமுறை இட ஒதுக்கீட்டைப் பெற்றால் போதுமா, அல்லது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள்வரை அது தொடர்ந்தபின்னர் அந்தக் குடும்பம் creamy layer என்ற வரையறைக்குள் வருமா? Creamy layer-இல் ஒருவர் உள்ளார் என்பதைக் கண்காணிக்க National database ஒன்றை உருவாக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களிடமிருந்து வந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் creamy layer என்று இல்லாவிட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பிற பிற்படுத்தப்பட்டோர்தான்.
இந்தப் பதிவையும் அருள், ரோசா வஸந்த், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் ஆதரித்தனர். சங்கரபாண்டியும் பத்ரியின் பதிவின் கீழ்
1. “creamy layer” மக்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதற்கு நல்ல வழி கையாளப் பட வேண்டும். ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரின் கல்வி, வேலையை வைத்து ஒரு அளவுமுறையைக் கொண்டு வரலாம்.
தொடர்ந்து சுந்தரவடிவேல் இது அமெரிக்காவில் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகிறது என்று விரிவாக எழுதியிருக்கிறார்.
அடுத்ததாக, வெங்கட் சொல்லும் வெளியேற்றுத் திட்டத்துக்கு (exit strategy) வருகிறேன். அவர் சொல்வது முற்றிலும் பொருத்தமானது. ஒரே விதமான வகுப்பைச் சேர்ந்த ஆட்கள் உயர்ந்த இடத்தில் இருத்தல் தகாது. இது monopoly எனப்படும் ஒற்றையதிகார மையத்தை நிறுவி விடும். மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விடுவார்கள். அவ்விடத்தின் பன்மயமாக்கலும் சிதைவுறும். ஆக இந்த வெளியேற்றுத் திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிக்கலாம், ஆல் இந்தியா ரேடியோ, தலைமைச் செயலகங்கள், அறிவுக் கமிஷன், ஐ.ஐ.டிக்கள்…இங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். மேலே சொன்னேனில்லையா Diversity Lottery, இதில் வெங்கட் சொல்லியிருக்கும் வெளியேற்றுத் திட்டம் கடை பிடிக்கப் படுகிறது….
(இன்னும் சிலர் விடுபட்டிருக்கக்கூடும்). இவர்களுடைய உளவியலையும் நீங்கள் என்னுடன் சேர்த்து சிந்தித்தீர்களா?
இதில் எனக்கு மட்டும் உளவியல் கற்பனை எங்கிருந்து வந்தது? தயவு செய்து அந்தக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றிவையுங்கள். சொன்னதை மட்டும் கவனித்து உங்கள் கற்பனைகளை ஒதுக்கியிருந்தால் என்மீது (மட்டும், அல்லது பத்ரியையும் சேர்த்து) நீங்கள் இப்படிச் சொல்லியிருக்கமாட்டீர்கள்.
இந்த எக்ஸிட் கிரைட்டீரியா என்பது பார்ப்பனர்கள் இழக்கப்போவதைத் திரும்பப் பெறுவதற்கான உத்தியில்லை. இட ஒதுக்கீட்டால் பயன்பெற்று முன்னேறிவரும் சமுதாயத்திற்குள்ளே கீழிருப்பவர்களையும் இது சென்று சேர வேண்டியதற்கான தேவை என்ற ரீதியில்தான் சொல்கிறேன். பலனடைந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் அவர்களது உள்நோக்கத்தை நாம் சந்தேகிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதே என்னைப் பொருத்தவரைக் கேள்வியில்லை. (இதை என் பதிவில் தெளிவாக்கியிருக்கிறேன்). அதற்கு அடுத்த கட்டமாக நடைமுறைச் சிக்கல்களையும், வழிமுறைகளையும் பற்றி விவாதிப்பதுதான் இப்பொழுது முக்கியமானது என்று எனக்குத் தோன்றுகிறது.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
கார்திக் எழுதியது தேவையற்றது என்பது என் கருத்து. (ரவி ஸ்ரீனிவாஸ் போன்றவர்களின் அப்பட்டமான மூர்க்கத்தனம், மொண்ணைவாதம் போன்றவற்றை தவிர்த்து) எல்லாவித வாதங்களூம் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டும். எல்லாவற்றை பற்றியும் விவாதிக்க வேண்டும் என்பதே என் கருத்து. குறிப்பிட்ட வாதம் வரும்போது, உடனடியாய் அதன் உளவியல் பற்றி சந்தேகத்தை எழுப்புவது எதற்கும் உதவப் போவதாய் எனக்கு தோன்றவில்லை. (இப்படி இந்த உதாரணத்தில் சொன்னாலும், சில இடங்களில் வாதத்தை விட, வாதத்தின் பின்னுள்ள உளவியல், கட்டமைப்பை பற்றி பேசுவது முக்கியமானது என்று நினைக்கிறேன். எது எதற்கு எதை பற்றி பேசுவது என்ற நுண்மையான பிரச்சனைக்குள் இறங்குவதை இந்த் பின்னூட்டத்தில் செய்ய முடியாது. ஒரே மாதிரி அணுகுமுறை எல்லா நேரத்திலும் வைத்து கொள்ள முடியாது என்பதைத்தான் சொல்ல வந்தேன்.)
கார்த்திக், வஸந்த் - மிக தாமதமாக உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதற்கு மன்னிக்கவும். நேற்று முழுவதும் நேரம் கிடைக்கவில்லை. (இன்னும் அப்படித்தான் இருக்கப்போகிறது; எனவே முடிந்தால் பின்னிரவில் அல்லது நாளைதான் என் பதில்களை எழுதமுடியும்).
I have written extensively on reservation, reservation for minorities, the Supreme Court judgment in Inamdar case.Those who have not even cared to read and understand what I have written or did not bother to engage in a meaningful debate by posting views in my blog on what I have written better stop commenting on my views.Or is expecting
that much decency from them is too much ?. I have opposed extending OBC quota to admissions in IITs etc.I have written about reviewing the present reservation system and have argued that needs of women,economically backward among the classes not covered by reservation should be taken in to account.I have written about creamy layer also.
Anyone who has cared to read my comments in others’
blogs would know this.I have written about the 93rd
amendment also. I did post some comments
on NSSO data, % of OBCs in Sundaravadivelu’s blog.
They did not appear there.That is not my fault.
Please stop taking nonsense about me, that too
in other blog(s).Either you engage in a meaningful
debate or refrain commenting about me.Since
I have written in Thinnai also on these , anyone
can use Thinnai as a forum to respond.
வெங்கட்,
கார்த்திக் சொல்வதில்:
>> சுந்தரின் பதிவில் உள்ள டைவர்சிட்டி வாதத்தை சரியாக நீங்கள் வாசிக்கவில்லையோ என்று படுகிறது. அவரது வாதமும், உங்கள் (அருள்,பத்ரி)வாதங்களும் வெவ்வேறானவை. குறைந்தது சுந்தர் மிகவும் எதிராகத்தான் சுட்டியுள்ளார் என்று கருதுகிறேன்.>>
என்பது எனக்கும் ஒப்புதல்!
சுந்தரவடிவேல் அவர்கள் பேசுவதைக் கவனியுங்கள் :
>> இத்தகைய நடைமுறையை, வெங்கட் சொல்லும் வெளியேற்றத் திட்டத்தோடு ஒப்பிட்டு, இப்போது அரசு மற்றும் தனியார் துறையில் எந்தெந்த உயர்சாதிகள் அதிக அளவில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்தச் சாதிக் காரர்களை எடுப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது இருப்பவர்களைச் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பன்மயமாக்குதலின் பொருட்டு மற்ற ஆட்களை உள்ளே அமர்த்துதல் வேண்டும். இதனைப் பெருமளவில் விமர்சிக்கப் படும் இந்து அலுவலகத்திலிருந்து தினத்தந்தி அலுவலகம் வரையிலுமோ, அல்லது இன்போசிஸ்ஸிலிருந்து சரவணா ஸ்டோர்ஸ் வரையிலுமோ, நாரத கான சபாவிலிருந்து, வாடிப்பட்டி டிரம்ஸ் கம்பெனி வரையிலுமோ நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
அப்படிக் கொண்டு வரும்போதுதான் வெளியேற்றுத் திட்டம் சரியாக வேலை செய்கிறதென்று பொருள்.
கூடவே வேலை கிடைக்காத பட்சத்தில் எந்தச் சாதிக்காரரும் எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்யும் மனத் திண்மை கொண்டவராக வேண்டும். உதாரணமாக ஒரு உயர்சாதிக் காரர் கக்கூஸ் கூட்ட வேண்டும். செய்யும் தொழிலே தெய்வமென்று எத்தனையோ பெரியவர்கள் சொன்னதுதான்.
நான் மதிக்கும் பகவான் இராமகிருஷ்ணரே கக்கூஸைத் தலையை விட்டுக் கழுவும்போது மற்ற பெருங்கொம்பன்கள் மலக்கூடை தூக்கினால் என்ன?
இதுதான் சமத்துவ சமதர்ம சமுதாயம்.
அப்போதுதான் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று எலக்கிய வியாதிகள் கூவிக் கொள்ள முடியும்.
சட்டையில்லாமல் தேசியக் கொடியைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்கும் அதனைப் படம் பிடித்துக் காசு பார்ப்பதற்கு மட்டும் சேரிப் பிள்ளைகள் வேண்டும், கிராமத்துப் பிள்ளைகள் வேண்டும், ஆனால் தேசியத்தின் வளங்களைப் பங்கு போட்டுக்கொள்ள அவர்கள் வேண்டாம் என்றால் அது என்ன நடைமுறை? >>
இதற்கும் நீங்கள் சொல்கிற Exit strategy-க்கும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது!
மற்றபடி “பொருளாதார அடிப்படையிலான” creamu layer concept முற்றாகத் தவறானது - அல்லது பெரும் குறைபாடுகள் கொண்டதாகத்தான் இருகும்.
வேறு சில காரணிகளையும், பொருளாதாரத்தோடு சேர்த்து கவனிக்க வேண்டும். அந்தக் காரணிகள் என்னென்ன என்று தீர்மானிப்பதன் முன்னர் - முதலில் இடஒதுக்கீட்டினால் பயன்பெறுவோர் குறித்த ஒரு National Database உருவாக்குவது.
இதற்கு நிறையக் காலம் பிடிக்கும்; அதுவரை Exit Strategy பற்றிய ஆய்வுகளுக்குச் சாத்தியமில்லை. அப்போதும் கூட சமூக-அரசியல் ரீதியான ஒத்த கருத்து உருவாவது அத்தனை எளிதில்லை.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்/மாணவர்/நிர்வாகிகள்/பிற ஊழியர் - வகுப்புவாரியான ஒரு முழு விவரப் பட்டியல் தயாரிப்பதற்கே ஆயிரத்தெட்டு கூச்சலிடுகிறார்கள்!
இந்த லட்சணத்தில் Exit Strategy பற்றிப் பேசினால் it will only raise a Political dust Storm and nothin else! ![]()
//I did post some comments
on NSSO data, % of OBCs in Sundaravadivelu’s blog.
They did not appear there.//
ரவி, என்னுடைய பதிவில் உங்களது முன்னுகை எதுவும் மட்டுறுத்தலில் இல்லை என்பதையும், உங்களது முன்னுகை எதையும் நான் அழித்தெறியவில்லை என்பதையும் தெளிவுபடக் கூறுகிறேன்.
வெங்கட், நான் சொன்ன வெளியேற்றுத் திட்டம் இட ஒதுக்கீட்டுக்கு அப்புறம் கடைபிடிக்க மட்டுமில்லை. பன்மயமாக்குதலை அதிகரிக்கும் பொருட்டு இன்றைய தினத்திலிருந்தே நடைமுறைப் படுத்தப் பட வேண்டியது என்று வாதிட்டிருக்கிறேன். இதனாலேயே பார்ப்பனீய நிறுவனங்கள் மற்றும் சாதீய நிறுவனங்களை உதாரணமாகக் காட்டியிருக்கிறேன். வெளியேற்றுத் திட்டம் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்க்கு மட்டுமே என்பது போன்ற விவாதம் நியாயமானதில்லை. நீங்கள் இப்பதிவில் சொல்லியிருப்பது (”பலனடைந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் அவர்களது உள்நோக்கத்தை நாம் சந்தேகிக்க வேண்டும்.”) எல்லாப் பிரிவினருக்கும், எல்லாக் காலத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பன்மயமாதல் ஒன்றே நிரவலை ஏற்படுத்திச் சிக்கல்களைக் குறைக்குமென்பது என் எண்ணம். நன்றி.
கார்த்திக் - தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். (நான் எதிர்பார்த்ததைப் போலவே கடந்த சில நாட்கள் வேலை/பயண நிமித்தமாக நேரமில்லாமல் போய்விட்டது).
கார்த்திக் - எனக்கு எந்தத் தரவுகளும் தேவையில்லை. எனவே நீங்கள் சுட்டும் தரவுகளை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அதேபோல நானும் இந்த வாதங்களில் எந்தத் தரவுகளையும் முன்வைப்பதில்லை. இவற்றில் தரவுகளை வீசியெறிவதால் யாருடைய மனதையும் மாற்றமுடியும் என்று நம்பவில்லை. ஏனென்றால் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட மனமாற்றங்கள் எந்தத் தரவுகளாலும் உருவானவையல்ல என்ப்தை நன்கறிவேன்.
ஐஐ* களில் போதுமான அளவு பன்முகத்தன்மை இல்லை என்பதை (நெருங்கிய பரிச்சயம் இருப்பதால் கிடைக்கும்) உள்ளூணர்வு ரீதியாகவே ஒத்துக்கொள்ள முடியும். எனவேதான் இட ஒதுக்கீடு பற்றிய கேள்விகள் இன்றியே அதை ஏற்றுக்கொண்டு நடைமுறை வழிகளை மாத்திரமே பேச வேண்டும் என்று சொன்னேன். நீங்கள் எல்லாவற்றுக்கும் ஆதியோடந்தமாக பார்ப்பனர்கள்தான் காரணம் ஏதோ தரவுகளைச் சுட்டிச் சொல்வதை (அதே நெருங்கிய பரிச்சயம் இருப்பதால்) என்னால் நிபந்தனையின்றி கையெழுத்திட்டுத்த்ர முடியவில்லை. மன்னிக்கவும். - I sincerely believe “Don’t attribute to malice what can be explained by ignorance). இதே காரணத்தால்தான் என்னுடைய கடந்த பதிவுகளில் இட ஒதுக்கீட்டைப் பற்றி எந்தவிதமான காழ்ப்புணர்வுகளும் இல்லாமல் நேரிடையாக எழுதப்பட்ட புத்தகங்கள்/கட்டுரைகள் இவற்றை தொகுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்). என்னைப் பொருத்தவரை வன்முறை, காழ்ப்புணர்வு இவையெல்லாம் சுழற்சிகள், இவற்றில் மேலே கீழே செல்வது வித்தையில்லை. இந்தச் சுழற்சிகளை நிறுத்துவதற்குத்தான் பெரிதும் திறமையும், தைரியமும் தேவைப்படுகிறது. இதே காரணத்தால் கலகக்காரர்கள் பதின்ம வயதைத் தாண்டி என்னை அதிகம் கவர்ந்த/பாதித்ததில்லை.
இதைத் தவிர உங்களுடன் வாதிக்க/விளக்கமளிக்க எனக்கு அதிகமில்லை என்றுதான் தோன்றுகிறது. நான் என்ன எழுதினாலும் “யாராலும் எதிர்த்து வாதிடமுடியாத” உளவியலைத்தான் திரும்பச் சொல்வீர்கள் என்று தோன்றுகிறது. நானோ பத்ரியோ பொறுமையாகவும் விரிவாகவும் (நேர்மையாகவும், எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக) எழுதினாலும் நீங்கள் வரிகளுக்கிடையே இல்லாத ஒன்றை உளவியல் கண் கொண்டு கண்டுபிடிக்கிறீர்கள். இந்த இலட்சணத்தில் என்ன எழுதினாலும் எடுபடப்போவதில்லை. (இப்படி விரக்தியோடு எழுத எனக்குக் காரணமிருப்பதாகவே நம்புகிறேன். ரவியிடம் உங்களுக்கு உளவியல் பிரச்சினை இல்லை; என்னிடமும் பத்ரியிடமும்தான் என்று நீங்கள் எழுதியபிறகு உங்களுக்கு ஏதாவது பதில் எழுதலாம் என்று முயற்சித்தால் வெறுமைதான் மிஞ்சுகிறது).
ஒரே ஒரு விஷயம்தான் கேட்டுக்கொள்ள முடியும்; எல்லோரையும், எல்லா நேரங்களிலும் சந்தேகிக்காதீர்கள். அது நல்லதிற்கில்லை - நீண்ட காலவெளியில் அது உங்கள் உளவியலையே அதிகம் பாதிக்கும். குற்றம் பார்க்கில் சுற்றமில்லை என்று நம்மூரில் சொல்வார்கள்தானே?
ரவி - வருகைக்கு நன்றி. நீங்கள் எழுதியவற்றில் நிறையவற்றை படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கட்டாயம் பின்னர் ஒரு நாள் படிப்பேன்.
சுந்தரவடிவேல், (நியோ உங்களுக்கும் சேர்த்துத்தான்) - நீங்கள் எழுதிய பன்முகமாக்கலை என் கருத்துக்கு முற்றும் எதிரானதாக நான் வாசிக்கவில்லை (கார்த்திக், நியோ போன்றவர்கள் முன்வைப்பதைப்போல). மாறாக என் வெளியேறு முறைகளின் ஒரு முழுமையான வடிவமாகவே புரிந்துகொண்டேன். இட ஒதுக்கீடு என்று வருவதே பன்முகத்தன்மையை உருவாக்கவும் உறுதிசெய்யவும்தான் என்பதை நான் நன்கறிவேன்.
வாழ்வின் முக்கிய தேவைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பதவியுயர்வு, அரசியல் பிரதிநிதித்துவம் இவற்றில் இட ஒதுக்கீடை எதிர்க்காதவனுக்கு அற்ப விஷயங்களான மியூஸிக் அகாதமி, சங்கரமடம், தி ஹிந்து, தினத்தந்தி, சரவணா ஸ்டோர்ஸ் போன்றவற்றின் பன்முகமாக்கலை எதிர்க்க என்ன இருக்கப்போகிறது? சொல்லப்போனால் வாழ்வின் எல்லா துறைகளிலும் பன்முகத்தன்மை வேண்டும் - இதில் எதுவும் விலக்கில்லை - என்று என்னால் கூவிச் சொல்லமுடியும். எனவேதான் ”பலனடைந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் அவர்களது உள்நோக்கத்தை நாம் சந்தேகிக்க வேண்டும்.” என்று எழுதினேன். இது சங்கரமடத்துக்கும், வக்ஃப் வாரியத்திற்கும், கத்தோலிக்கத் திருச்சபைக்கும், தி ஹிந்துவுக்கும், தினத்தந்திக்கும் “எல்லாவற்றுக்கும்” பொருந்தும். இதைவிட என்னால் எப்படி உரத்துச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை.
உலகிலேயே பன்முகத்தன்மை அதிகமுள்ள, பன்முகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடு என்ற ரீதியில் கனடாவில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம். இதை என்னால் எங்கும் பெருமையுடன் சொல்லமுடியும்.
மாறாக ஒரு திட்டம் உருவாகும் பொழுது அதன் எல்லா சாத்தியக்கூறுகளையும் திறந்த மனதுடன் விவாதிக்க இங்கே எத்தனைபேர் தயாராக இருக்கிறார்கள்?
May be we should stop the marriages between the same caste. The government can make law for this. In this way we could make uniformity and if at all there is special intelligence in higher caste blood, it will be distributed. Sure, it is a suicidal action for any party.. but I hope it will work with in reasonable flaws.

வெங்கட் நீண்ட பதிலுக்கு நன்றி. நிச்சயமாக எல்லோரின் உளவியலையும் கவனிப்பேன் எனக்குப் பிடிபடும்போதெல்லாம். இது நம் நண்பர்களில் அனைவருக்கும் தெரியும்.
//இந்த எக்ஸிட் கிரைட்டீரியா என்பது பார்ப்பனர்கள் இழக்கப்போவதைத் திரும்பப் பெறுவதற்கான உத்தியில்லை. இட ஒதுக்கீட்டால் பயன்பெற்று முன்னேறிவரும் சமுதாயத்திற்குள்ளே கீழிருப்பவர்களையும் இது சென்று சேர வேண்டியதற்கான தேவை என்ற ரீதியில்தான் சொல்கிறேன். //
ரவியும் கூட தரவுகளின் நம்பகத்தன்மை குறித்து கேட்பது பிரசினை இல்லை, ஆனால் ரவி பொன்று மெத்த வாசிப்பவர், அப்படி தரவுகள் உண்மையாயிருந்தால், மறு பக்கத்தை ஏற்பதாக ஒரு சிறு அசைவை கூட எழுதாததை எவ்வாறு பார்ப்பது? 
உங்கள் நோக்கம் தெரிகிறது. அதில் எந்த பிரச்சினையும், அல்லது உங்கள் வாதத்திலோ எனக்கு உடன்பாடே(அதாவது கீழ்தட்டு மக்களுக்கு பயன் சென்றடையவேண்டும் என்பது) ஆனால் இப்போது கூட, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உயர் கல்வி அளவில் செயல் படுத்தப்படுமுன்னரே(இன்னமும் கூட ஒரு பகுதி கல்வி நிறுவனங்களில் 50 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு கொண்டு வரமுன்னரே), எக்ஸிட் கிரைட்டிரியாவை பற்றி பேசவேண்டும் என்று பலரும் அவ்சரப்படுவதை ஒரு “உளவியல் பிரச்சினையாக” மட்டுமே பார்க்கமுடிகிறது. அருளை அது போல் பார்க்க முடியவில்லை, பெரிதாக வித்தியாசமில்லையென்றாலும் ஒரு அனுசரிப்பான பார்வை அவரது பதிவில் தெரிகிறது காரணமாக இருக்கலாம். ஆனால் பத்ரியுடையதும் உங்கள் பார்வையும் நிச்சயம் உளவியல் பிரச்சினை அல்லது , இன்னும் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கலாம் என்பது என் கருத்து. ரவி வெளிப்படையாக எதிர்க்கிறார் அது எனக்கு உளவியல் பிரச்சினையாகப் பட வில்லை. அவர் கூட
தரவுகளின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்பதற்கு (சற்று பொறுமையாக) தரவுகளின் நம்பகத்தன்மையை பெற்று தரமுடியும். பின்னர் அவரையும் நிச்சயம் கேட்பேன், தரவுகள் உண்மையாக இருக்கும்போது எப்படி வாதம் செய்வார் என்று. விமர்சனத்துக்கு எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் எதிர்கொண்டதற்கு நன்றிகள் பல. இன்னமும் கூட , ஐஐடி பற்றிய தரவுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் , “ஆதிக்கம் பார்பனர்களால் மட்டுமா?” போன்ற கேள்விகளைக்கேட்ட நீங்கள், அதைத் தொடாமலே அல்லது நகர்ந்து விடுவது ஆச்சரியமளிக்கிறது.
சுந்தரின் பதிவில் உள்ள டைவர்சிட்டி வாதத்தை சரியாக நீங்கள் வாசிக்கவில்லையோ என்று படுகிறது. அவரது வாதமும், உங்கள் (அருள்,பத்ரி)வாதங்களும் வெவ்வேறானவை. குறைந்தது சுந்தர் மிகவும் எதிராகத்தான் சுட்டியுள்ளார் என்று கருதுகிறேன்.