சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போலவருமா
பாடல்: சொர்க்கமே என்றாலும்…
இசை : இளையராஜா
பாடம்: ஊருவிட்டு ஊருவந்து (1990)
பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. You also need to have JavaScript enabled in your browser.
இளையராஜாவின் மூன்று அன்னங்கள் என்ற தலைப்பில் ஹம்ஸத்வனி, ஹம்ஸாநந்தி, ஹம்ஸநாதம் ராகங்களில் அமைந்திருந்த மூன்று பாடல்களைக் குறித்து தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த காலத்தில் எழுதியிருந்தேன். அப்பொழுது ஹம்ஸநாதம் குறித்து எழுதும்பொழுது
ஹம்ஸநாதம் ராகத்தில் கர்நாடக சாஸ்திரிய சங்கீதத்திலேயே சாகித்யங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றன. தியாகராஜரின் “பன்டு ரீதி கோலு வியவைய்ய ராமா” இவற்றுள் பிரபலமான ஒன்று. இதைப் பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் கேட்க அற்புதமாக இருக்கும். திரையிசையில் ஹம்ஸநாதத்தை வடித்தவர்கள் இளையராஜாவைத் தவிர வேறு யாருமில்லை என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். (தென்றலே என்னைத் தொடு படத்தில் வரும் தென்றல் வந்து என்னைத் தொடும் பாடல் வந்த சமயத்தில் “ஆஹா , மொத மொதல்ல சினிமால ஒரு ஹம்ஸநாதம்” என்று அப்பா சொன்னது நினைவிருக்கிறது). இதைத் தொடர்ந்து இன்னும் சில பாடல்களை ஹம்ஸநாதத்தில் இசைத்திருக்கிறார் ராஜா (இவற்றில் மிகமிக முக்கியமான ஒன்றை இன்னொரு நாளுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன்).
இளையராஜாவின் மூன்று அன்னங்கள் - 1
இளையராஜாவின் மூன்று அன்னங்கள் - 2
இளையராஜாவின் மூன்று அன்னங்கள் - 3
என்று எழுதியிருந்தேன். அந்த ஒதுக்கி வைக்கப்பட்ட முக்கியமான ஒன்றைக் கொண்டு இந்தப் புதுவீட்டில் என்னுடைய இசைப் பதிவுகளைத் தொடங்குகிறேன். 1990 - இளையராஜாவின் இசை வாழ்க்கையில் உச்சத்திலிருந்த நேரம். அப்பொழுது தமிழ், தெலுகு இரண்டு மொழிகளிலும் வருடத்திற்குக் கிட்டத்தட்ட இருபது படங்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார் (இப்படித் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேல்) ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள். பல படங்களில் எல்லா பாடல்களுமே பிரபலமாகிக் கொண்டிருந்தன. பெரும்பாலான கலைஞர்கள் இப்படி உச்சத்தில் இருக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுத்துக் கொண்டு அந்த வார்ப்பிலேயே தங்கள் படைப்புகளை மரச்சட்டத்தில் களிமண் அடைத்துப் பிள்ளையார் உற்பத்தி செய்யும் முறையில் இறங்கிவிடுவார்கள். (இதை இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோரிடமும் எளிதில் பார்க்க முடிகிறது).
ஆனால் இதற்கு மாறாக அப்படி ட்யூன்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்த காலத்தில் கூட, பல புதுமைகளை முயற்சித்துப் பார்த்தவர் இளையராஜா. இன்றைய பாடல் அந்த வகைப் புதுமைகளில் ஒன்று. சுருதி விலகல் அதிகமில்லாமல் அப்பட்டமான சாஸ்திரிய இராகம் ஒன்றில் கிராமத்து இசையை, அதிலும் கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் ஒரு பாடலை இளையராஜா தந்திருக்கிறார். ஒருவகையில் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவருடைய முதன் முதல் பாடலான “மச்சானைப் பாத்தீங்களா” வில் கிராமத்து மணம் தவழும் வரிகளுக்கு வெர்ஸ்டர்ன் கார்ட்களில் கித்தார் இசையைத் தந்தவர்தானே!
பாடல் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். இதைச் சொன்னால் பலருக்கும் நம்ப முடியாது, அவ்வளவு பெரிய பாடல் கிடையாது என்றுதான் சொல்வார்கள். காரணம் பாடல் செல்லும் வேகத்திலும் இதில் பின்னிப் பிணைந்துவரும் மாறுபட்ட இசையிலும், கதியிலும் நேரம் போவதே தெரியாது. பாடலின் ஆரம்பத்தில் வரும் முன்னீட்டில் அற்புதமான வயலின் பின்னல்கள் இளையராஜாவின் முத்திரை. இந்த முறையைத் தென்றலே என்னைத் தொடு, சிங்காரவேலன் உள்ளிட்ட பல படப்பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார். சரணத்திற்கு முன் பாடலின் முத்திரையான விரைவு ட்ரம் பீட் தொடங்கும். இது பாடலின் ஆதாரமாக முழுவதும் வரும். தொடர்ந்து வரிகளுக்கு முன்னதாக “ஹே… தந்தன தந்தன தந்நா…” என்பதை ராஜாவைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு அருமையாகப் பாடமுடியாது. Authentic Folk என்பார்களே அந்த வகையைச் சேர்ந்தது இது. பல்லவியின் அமைப்பு வித்தியாசமானது. “சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்ம்ம்…” என்று இழுக்கும் முதல்வரியைத் தொடர்ந்து “… போல வருமா” என்று சடாரென முடிவது முரண்பாடாக இருக்கும். அதே போல அடுத்த இரண்டு வரி இரட்டையும் நீட்டி முழக்கிப், பின் வெட்டி முடிப்பதாக இருக்கும். பாடலின் பல இடங்களில் இதைப்போலவே அடுத்தடுத்த வரிகள் வருவது பாடலுக்கு ஒரு துள்ளல் கதியைத் தரும். இப்படி நீட்டி முழக்கிப் பாடுவதை நம்மூரில் பல நாட்டார் பாடல்களில் காணலாம். இடையீடுகளில் வரும் இசை அற்புதமானது. ‘இவ்வூரு என்ன ஊரு, நம்மூரு ரொம்ப மேலு’ வரிகளுக்குப் பின்னே வரும் வயலின் அற்புதமானது.
பாடலின் பெரும்பாலான இடங்களில், வயலின், லீட் கிட்டார், பேஸ் கிட்டார், க்ளாரினெட், ட்ரம்ஸ், சிந்தஸைஸர், கீபோர்ட் என்று நம்மூருக்கு அந்நியமான வாத்தியங்களே வரும். ஒரு இடத்தில் தப்லா கூட வரும். ஏற்கனவே சொன்னதைப்போல ஹம்ஸாநந்தி ராகத்தில் திரையிசை மெட்டமைத்தவர் ராஜா ஒருவர்தான். ஆனால் இந்தப் பாடலில் நம்மூருக்குப் பரிச்சயமான மிருதங்கம், வீணை, நாதஸ்வரம், போன்றவையோ, உருமி, பறை, நையாண்டி மேளம், உடுக்கு, போன்ற நாட்டார் வாத்தியங்களோ கிடையாது. இப்படி சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் மெட்டமைத்து, அதற்கு மேற்கத்திய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப் பாடலின் சாயலை அற்புதமாகக் கொண்டுவந்திருப்பது இளையராஜாவின் மேதைமை. இந்த அளவுக்குப் பரிசோதனைகளை இந்தியத் திரையிசைக் கலைஞர்களிடம் அதிகம் காணமுடியாது.
இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்தே பல கிராமியப்பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் ஜானகி. இளையராஜா-ஜானகி இரட்டை பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்திருக்கிறது.
- சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா
- பொன்னோவியம் கண்டேனம்மா - கழுகு
- நான் தேடும் செவ்வந்திப்பூவிது - தர்மபத்தினி
- தென்றல் வந்து தீண்டும்போது - அவதாரம்
- பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு
- ஒரு கனம் ஒருயுகமாக - நாடோடித் தென்றல்
அந்த வகையில் இந்தப் பாடலும் ராஜா-ஜானகி ஜோடியின் அற்புதமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. எனவே இது படமாக்கப்பட்ட விதம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இதை யாராலும் ஊகித்துவிட முடியும் மஞ்சள் அல்லது ‘ராமராஜன்’ கலரில் (இதை பஞ்சு முட்டாய் பிங்க் என்றும் சொல்வார்கள்) பளபள சட்டை, உழைக்கும் கரங்கள் எம்.ஜி.ஆரின் விசிறி மடிப்பு வேட்டி சகிதமாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டுடனும், கௌதமி அரக்கு, மஞ்சள், சிவப்பு போன்ற ஏதாவது ஒரு ‘குல்ட்-கலர்’ குல்ட் பாணி தார்ப்பாய்ச்சிய புடவைக்கட்டுடனும் சிங்கப்பூரில் வெற்றிலைச்சாற்றை துப்பியிருப்பார்கள் என்பது நிச்சயம். (யாராவது இதை உறுதி செய்யவும்).
ஏற்கனவே இதைப் பற்றி எழுதியாகிவிட்டது. தமிழ்த் திரையுலகில் திறமை அதிகமில்லாமல் இளையராஜாவின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் பெற்று கொடிகட்டிப் பறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்றைய காலத்து மோகன், சுரேஷ் தொடங்கி, முரளி, ராமராஜன், ராஜ்கிரண் வரை நிறைய பேரை இப்படி உதாரணம் காட்டலாம். இவர்களுக்குள்ளேயும் நம்ம பசுநேசன் ஐயாவுக்கு ராஜாவின் கருணை அதிகமாகவே பொழிந்திருக்கிறது. பின்னாட்களில் ராமராஜன், மாண்புமிகு-ஆகி தில்லியில் மக்களவைக்குச் சென்றதில் இந்தப் பாடலின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பது கேள்விக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அங்கே மத்திய அரசின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையின் காபினெட் அமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் கமிட்டியில் ராமராஜன் சேர ‘சொர்க்கமே என்றாலும்’ கட்டாயம் ஒரு முக்கிய தகுதியாக இருந்திருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பாடல் வந்த புதிதில் பட்டிதொட்டியெங்கும் முழ்ங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இணையத்தில் அதிக முறை மேற்கோள் காட்டப்படும் தமிழ்த் திரையிசைப் பாடல் இதுதான். சந்தேகமிருந்தால் கூகிளிட்டுத் தேடிப்பாருங்கள். புதிதாக வெளிநாடுவரும் அனைத்து நிரலர்களும் செய்யும் முதல் மூன்று விஷயங்களுக்குள் இதுவும் ஒன்றாக இருக்கும். 1. வீடுபார்த்து குடியமருவது 2. ப்ளாக்ஸ்பாட்டில் ஒரு வலைப்பதிவைத் துவங்குவது 3. தமிங்கலத்தில் முதல் வாரத்தில் பட்ட அல்லல்களை (இதைச் செந்தமிழில் லோல் என்று சொல்வார்கள்) எழுதி இந்தப்பாடலை மேற்கோள் காட்டுவது.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
சுந்தர் - நன்றி. குரல் இல்லாவிட்டாலும் நானெல்லாம் எஸ்.பி.பி பாடல்களைத்தான் ஐஐஎஸ்ஸி ஹாஸ்டலில் கத்துவேன். :)). ஆனாலும் அவ்வப்பொழுது “காட்டுப்புலி வழிம றிக்கும் கலங்கி நிக்காதே…” என்றும் இடையிடையே உண்டு.
இளையராஜா வளர்த்துவிட்ட காலத்தில் ராஜ்கிரணுக்கு திறமை இருந்ததாகத் தெரியவில்லை. “பொன்னப் போல ஆத்தா, என்னப் பெத்துப்போட்டா” ரீதியில் ராஜா பாடி கிராமத்துப் பெண்டுகளின் கண்களைக் குளமாக்கியதுதான் ராஜ்கிரணை வளர்த்தது. பின்னால் அவரும் பிரயத்தனப்பட்டு திறமையை வளர்த்துக்கொண்டார்.
ராஜா அளித்த ‘அன்றும், இன்றும் என்றும்’ நிகழ்சி தொடங்கும் முன், என்னுடன் வந்த நண்பர், “எந்த பாட்டு ராஜா பாடினா ரொம்ப சந்தோஷமா இருக்கும், வந்ததுக்கு இது போதும்னு சொல்ற மதிரி இருக்கும்”னு என்னிடம் கேட்டபோது, நான் இந்த பாடலை சொன்னேன். ஆனால் கூட்டத்திலிருந்து கத்தியும் ராஜா இந்த பாடலை பாடவில்லை.
இந்த பகுதி தொடர்ந்து வரும் என்று எதிர்பார்கிறேன்.
வஸந்த் - உண்மைதான். இளையராஜாவின் எந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் இது இருக்க வேண்டும் என்று நானும் எதிர்பார்ப்பேன். காரணம் நான் சொன்னதைப் போல மாறுபட்ட வாத்தியங்களில், சாஸ்திரிய அடியொற்றி, நாட்டுப்புறச் சாயலை அற்புதமாகக் கொண்டுவரும் விந்தை.
தொடர்ந்து எழுதலாம் என்றுதான் இந்தப் பகுதியைத் திரும்ப ஆரம்பித்திருக்கிறேன்.
Vaanga venkat..Romba naala ungalai thittittu irunthen:-)(for not giving posts on music and other humourous topics)..Thanks for the song!!
இந்த பாடல்கள் இதுவரையில் நான் கேட்டதில்லை. நண்பர்கள் சிலாகித்து எழுதுவதிப்பார்த்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. கேட்டுப்பார்க்கிறேன். நன்றி
தங்கஸ் - திட்டாதீங்க, இனிமே வாரம் ஒருமுறையாவது இசை உண்டு. நம்ம பிராண்ட் நகைச்சுவையும் விரும்பிக் கேட்பவர்கள் இருக்கிறார்களா? ![]()
பத்மா - பாடலை மேலே இருக்கும் கருவியிலிருந்தே இயக்கி இங்கேயே கேட்க முடியுமே? ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?
கவி - நீங்கள் என்னுடைய ஆர்க்கிட் படத்தின் போது இசைபற்றி மீண்டும் எழுத வேண்டும் என்று சொன்னது நான் இதைத் திரும்பத் துவக்க ஒரு முக்கிய காரணம்.
தாராளமாக மின்னஞ்சல் எழுதலாமே! vvenkat அட் sympatico டாட் ca என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
நாகராஜன், வெளிப்படையாக எம்பி3 இணைப்பைத் தர உத்தேசமில்லை. இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன: 1. பொதுப்படையாக கிடப்பில் போட்டுவைத்து இசையைப் பகிரும் உத்தேசமில்லை 2. இப்படிக் கிடைக்கும் பாடல்களை நிறைய பேர் அள்ளிவைத்துக்கொண்டு பிறகு ஒருமுறைகூட கேட்பதில்லை 3. உண்மையாகவே பாடல் பிடித்திருந்தால், வேண்டுமென்றால், இராதா எழுதியதைப் போல எனக்குத் தனியே எழுதலாம். நான் அனுப்பிவைக்கிறேன். 4. ஆர்வமும், மிகக் குறைந்த திறமையும் இருந்தாலே இந்தப் பதிவிலிருந்தே எம்பி3 ஐ இறக்க முடியும்.
(சென்ற பதிவின்கீழ் யக்ஞா எழுதியதைப் பார்க்கவும்). உண்மையிலேயே பாடலை விரும்புபவர்களுக்கு இத்தனை வழிகள் இருக்க நான் வெளிப்படையான இணைப்பு தர உத்தேசமில்லை.
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். As I said, you are always welcome to ask me.
அன்பின் வெங்கட்
அருமையான விளக்கங்கள்.இது போன்ற விளக்கங்களையும் பாடல்,இசையமைப்பாளர்களின் திறமைகளையும் இனி வரும் பதிவுகளிலும் எதிர்பார்க்கிறேன்.
ஒரு நேயர் விருப்பம்.புதுப்பாட்டு என்ற படத்திலிருந்த்து ‘நேற்று ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம்’ என்ற பாடலை முடிந்தால் போடவும்.(உங்களின் ‘தனி’ விளக்கங்களோடு).
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
வெங்கட்!
மிக அற்புதமாக உங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள்.
இதை இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்கய்யா.
இளையராஜாவின் அண்மைக்கால இசை வெளியீடுகளையும் நீங்கள் விமரிசனம் செய்தால் நன்றாக இருக்கும்.
வணக்கம் வெங்கட்,
பதிவினை முழுக்க படித்த பின்பு தான் இப்பாடலின் மகத்துவம் புரிகிறது. முன்பெல்லாம் இப்பாடல் பிடித்தாலும் ராஜா போகிற போக்கில் போட்ட பாடல் போல் தோன்றும். இவ்வளவு ஆழமான இசை போக்கு இதில் இருப்பதை நான் உனரவில்லை. மிக்க நன்றி.
மேலும் மறுபடியும் பாடல் கேட்டதில், வெஸ்டர்ன் இசை கருவிகளின் மீது தமிழ் நாட்டுபுற பன் தவழ்ந்து செல்வதை கவனித்தேன். ராஜாவின் மனம் என்ன நினைத்து இதை செய்திருக்கும் என யோசித்ததில் வெளி நாட்டில் பாடும் தமிழ் நாட்டுப்புர நாயகனை மனதில் வைத்து அதை உருவகபடுத்த இதை செய்திருபாரோ என்று தோன்றியது!!!
மேலும் எதிர்பார்கிறேன் உங்களிடம் இருந்து
தோழமையுடன்,
ராஜாசரணம்
“இனிமே வாரம் ஒருமுறையாவது இசை உண்டு.”// எதிர்பார்த்திருப்போம்
“பதிவினை முழுக்க படித்த பின்பு தான் இப்பாடலின் மகத்துவம் புரிகிறது. “// மிகச் சரியாகச் சொன்னார் ராஜாசரணம் .
என்னை மாதிரி ஆட்களுகளுக்கு இப்படிச் சொன்னால்தான் ஏறுது..
இப்பாடல்கள்;இளசின் இசை யாவும் மிகப் பிடித்திருந்தும்; இவ்வளவு ஆழமாக ஆயுமளவுக்கு இசைப்புலமையில்லை;நீங்கள் அணு அணுவாய் அனுபவித்து; எழுதியுள்ளீர்கள்.மிகரசித்தேன்.உங்கள் எழுத்தைக்கூட. “சங்கத்தில் காணாத கவிதை “கேட்ட நாள் முதல் பிடித்த பாடல்; அன்றைய நாட்களில் இலங்கை வானொலி ஆட்கொண்ட பாடலில் ஒன்று.இப் பாடலை “திரைப்பாடல்களில் இலக்கிய நயம்” எனும் என் கட்டுரை ஒன்றில் சேர்த்துள்ளேன்; இசை கருத்து ;குரல் வெகுவாகப் பொருத்திய பாடலொன்று.தொடர்ந்து எழுதவும். இயன்றவரை பாடல் பற்றிய முழுத் தகவல்களை ஏனையவை போல் தரவும். கேட்க வாசிக்க எங்களைப் போல் பலர் உள்ளார்கள். சிவா என்று ஒரு ராஜா ரசிகர்; தமிழ் மணத்தில் இசைப் பதிவிடுகிறார்.நீங்கள் இருவரும் சந்திப்பது ,எமக்கு மேலும் பல புதிய ஆய்வுகளுக்கு,வழிகோலும்.
நன்றி
யோகன்
பாரிஸ்

எனக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் வெங்கட். காலேஜ் போன புதுசில், தொண்டை மகர கண்டமான போதில் நிறைய இளையராஜா பாடல்களைத்தான் பாடிக் கொண்டிருந்தேன். ( அதற்கு முன்பு எஸ்.ஜானகி)
அதில் இதுவும் ஒன்று.
அதுசரி, திறமை இல்லாதவர்கள் லிஸ்டில் ராஜ்கிரணையும் சேர்ப்பது நியாயமா..??